

`என் வீடு என் கணவன் என் குழந்தை' நாடகம் தியாக பிரம்ம கான சபாவின் ஆதரவோடு சென்னை வாணி மஹாலில் அண்மையில் நடந்தது. கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி கோமலின் நேர்த்தியான இயக்கத்தில் பழமை மாறாமல் நாடகத்தை நடத்தியதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கோமல் சுவாமிநாதன் தொடங்கிய `ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ்' நாடகக்குழுவின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி, கோமலின் கிளாஸிக் நாடக வரிசையில் முதலாவதாக இந்த நாடகம் நடத்தப்பட்டது. நடிகை மனோரமா பிரதானபாத்திரத்தில் நடித்து, இந்தியா முழுவதும் 300 முறை மேடையேற்றப்பட்ட பெருமை கொண்டது இந்த நாடகம்.
திருமணம் நடந்து பல ஆண்டுகளாகியும் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத ஏக்கத்தில் இருக்கும் அன்னபூரணி, தன் கணவர் மகாலிங்கத்தின் தம்பிகள், தங்கையையே தன் குழந்தைகளாக நினைத்து வளர்க்கிறார். அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கிறார். மகாலிங்கமோ, புலிவலம் சுவாமிகளின் சீடராகி சன்னியாசம் பெறுவதற்கு ரிஷிகேஷுக்கு பயணம் செல்லத் தயாராக இருக்கிறார்.அன்னபூரணியின் குடும்ப பொறுப்புவென்றதா, மகாலிங்கத்தின் சன்னியாசியாகும் ஆசை வென்றதா என்பதுதான் நாடகத்தின் கதை.
`இதுவரை சம்பாதித்தது போதும்...' என்று மகாலிங்கம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்துவிடுகிறார். விஷயத்தைக் கேட்ட அன்னபூரணி, வீட்டுச்செலவுகளின் பட்டியலை அடுக்குகிறார். அந்த நேரத்தில் அவரின் வீட்டில் வளர்க்கும் பசு மாட்டைப் பராமரிப்பவர், அவசரச் செலவுக்கு 100ரூபாய் கேட்க, தரமுடியாது என்றுகோபமாக சீறும் அன்னபூரணி, `மனைவியை பிரசவத்துக்கு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். மருந்து மாத்திரைக்கு வேண்டும்' என்று மீண்டும் அவர் கூறியதைக் கேட்டதும், கடுகடுத்த முகத்தில் கருணையைக் கொண்டுவந்து, `என்னது ஆம்படையாளை பிரசவத்துக்கு சேர்த்திருக்கிறாயா.. இது ஏன்முன்னாடியே சொல்லலே... இந்தாநூறு ரூபா.. வேற ஏதாவது அவசரத்துக்கு காசு தேவைன்னாலும் சொல்லு.. தர்றேன்' என்று உருகும்காட்சியில் நடிகை மனோரமா வெளிப்படுத்திய உணர்ச்சிப் பிழம்பான நடிப்பை அன்னபூரணியாக நடித்த லாவண்யா வேணுகோபாலிடமும் பார்க்க முடிந்தது.
மடிசார் புடவையைக் கட்டிக்கொண்டு வசனத்தை மனோரமா நீட்டி முழக்கி பேசும் பாவனை, அவரின் உடல்மொழியை அப்படியே தன்னுடைய நடிப்பில் கொண்டுவந்து அன்னபூரணி பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருந்தார் லாவண்யா.
ஒரேயொரு செட்டிலேயே 2 மணிநேர நாடகத்தை நடத்துவது மிகப் பெரிய சவால். இசை (குஹபிரசாத்), ஒளி (சேட்டா ரவி), அரங்க அமைப்பு (சைதை குமார்) ஆகியவை கூட்டணி அமைத்து அந்தச் சவாலில் நாடகத்தை வெற்றி பெறவைத்திருக்கின்றன.
நாடகத்தின் வசனங்கள் முழுவதிலும் கோமலின் சிந்தனைதெறிப்புகள் வியாபித்திருக்கின்றன. குறிப்பாக மதமாற்றத்தை வெகு இயல்பாக ஏற்றுக் கொண்டுமகாலிங்கம் பேசும் வசனம். மத்திய,மாநில அரசுகளால் குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட 80-களில் அரங்கேறிய நாடகம்இது. அதன் தாக்கம் நாடகத்தின் பாத்திரங்களிலும் பிரதிபலிப்பதை உணரமுடிகிறது.
பாத்திரங்கள் நிறைய இருந்தாலும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உரிய முக்கியத்துவத்தை தந்து கதையை அமைத்திருப்பதில் கோமலின் கொடி இன்றைக்கும் உயரே பறக்கிறது. அதிலும் அன்னபூரணி, மகாலிங்கத்துக்கு அடுத்தபடியாக சம்பந்தியாக வரும் ரங்கதுரை (விபிஎஸ் ஷிராமன்) எல்லோர் மனங்களிலும் பதிந்து விடுகிறார்.அந்தப் பாத்திரத்தின் அலப்பறையும், டைமிங் சென்ஸும் அபாரம்!
குழந்தைப் பேறு இல்லாததை காரணமாக வைத்து, இன்றைக்கும் சமூகத்தில் திருமண உறவுகளில் பல சிக்கல்கள் வெடிக்கின்றன. பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடக்கின்றன. இவற்றையும் கருத்தில் கொண்டு, `தன்னுடைய குழந்தைப்பேறு இல்லாத ராசிதான் தன்னைச் சேர்ந்தவர்களையும் பாதிக்கிறது' என்பது போன்ற அன்னபூரணி பேசும் வசனத்தை காலத்துக்கேற்ப சற்று மாற்றலாம்; அல்லது தவிர்க்கலாம். நாடகத்தின் இயக்குநர் தாரிணி கோமல் நினைத்தால் அதைச் செய்ய முடியும்.