

உலகை வியக்க வைத்த இந்திய சினிமா இயக்குநர் சத்யஜித் ரேயின் பிறந்தநாள் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி, ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ‘ஃபிரண்ட்லைன்’ ஒரு சிறப்பிதழைத் தயாரித்துவருகிறது. 132 பக்கங்களைக் கொண்ட இந்த இதழில், ரேயின் வாழ்க்கை வரலாற்றை ‘தி இன்னர் ஐ’ (The Inner Eye) என்ற தலைப்பில் 1989-ல் வெளியிட்ட ஆண்ட்ரூ ராபின்சன் எழுதிய கட்டுரையும், ரேயுடன் ஆண்ட்ரூ பல முறை நடத்திய நேர்காணல்களின் தொகுப்பும் இடம்பெறுகின்றன. ரேயுடன் நெருக்கமாகப் பணியாற்றிய கலைஞர்களான ஷர்மிளா தாகூர், அபர்ணா சென், த்ருத்திமான் சாட்டர்ஜி, பரூன் சந்தா, கதக் நடனக் கலைஞர் சாஸ்வதி சென், பிரபல இயக்குநர்கள் ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், கிரிஷ் காசரவல்லி, கவுதம் கோஷ், ரேயின் மகனும் இயக்குநருமான சந்திப் ரே ஆகியோரின் நேர்காணல்களும் இடம்பெறுகின்றன.
ரேயின் சினிமா, அதற்குப் பின்னால் இருக்கும் உலகப் பார்வை குறித்து அறிஞர்கள் பலர் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். ரேயின் நிழல் என்று அழைக்கப்பட்ட நிமாய் கோஷ் பல ஆண்டுகள் அவருடனேயே இருந்து பல படங்களின் படப்பிடிப்புத் தளங்களிலும், இசைக் கோர்ப்பு அறையிலும் சத்யஜித் ரே எப்படிச் செயல்பட்டார் என்பதைக் காட்டும் அரிய புகைப்பட ஆல்பமும் இதில் வெளியாகிறது. முன்பு யாரும் கண்டிராத புகைப்படங்களின் தொகுப்பும் வெளியாகிறது. “இந்த இதழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது மட்டுமின்றி, திரைத் துறையின் இளம் இயக்குநர்களுக்கும் மாணவர்களுக்கும் பாடப் புத்தகமாகவும் இருக்கும்” என்கிறார் ஃபிரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர்.
இந்த இதழுக்கு முன்பதிவு செய்துகொள்ள: https://publications.thehindugroup.com/bookstore/
வில் வீரனும் குதிரை வீரனும்
கவிஞர்களும் எழுத்தாளர்களுமாய் நிறைந்த ‘குதிரைவீரன் பயணம் நண்பர்கள் வட்ட’த்தில் புதிதாக ஆங்கில இளங்கவியொருவர் இணைந்திருக்கிறார். பட்டுக்கோட்டையைப் பூர்விகமாகக் கொண்ட 16 வயதுப் பள்ளி மாணவரான மாதவன், தற்போது கனடாவில் பெற்றோருடன் வசித்துவருகிறார். மாதவனின் ஆங்கிலக் கவிதைகளைக் கண்டு வியந்த கவிஞரும் ஓவியருமான யூமா வாசுகி, தனது ‘குதிரைவீரன் பயணம்’ இதழின் சார்பில் அவரது முதல் தொகுப்பை ‘ஐ ஆம் யூனிக்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். பக்கத்துக்குப் பக்கம் தனது ஓவியங்களாலும் அந்தத் தொகுப்பை அலங்கரித்துள்ளார். விரைவில், இந்தக் கவிதைத் தொகுப்பின் தமிழ்ப் பதிப்பு வெளியாக உள்ளது. இளங்கவியான மாதவன் வில்வித்தை வீரரும்கூட.
புத்தகக் காட்சி
குரோம்பேட்டை புத்தகக்காட்சி: சென்னை குரோம்பேட்டையில் ‘ஆயிரம் தலைப்புகள்! ஒரு லட்சம் புத்தகங்கள்’ என்ற முழக்கத்துடன் கடந்த 13.10.2021-ல் தொடங்கிய புத்தகக்காட்சி 24.10.2021 வரை நடைபெறுகிறது. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் உட்பட அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.
இடம்: செல்வம் மஹால், ராதா நகர் பிரதான சாலை (கவிதா மருத்துவமனை எதிரில்), குரோம்பேட்டை. நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9884355516
கனடாவிலிருந்து ஓர் இலக்கிய இதழ்
அகிலேஸ்வரன் சாம்பசிவத்தை ஆசிரியராகக் கொண்டு கனடாவிலிருந்து ‘இலக்கியவெளி’ என்ற பெயரில், இலக்கிய இதழ் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறார்கள். முதல் இதழே தி.ஜானகிராமனின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் வெளியாகியிருக்கிறது. தி.ஜானகிராமனின் வெவ்வேறு படைப்புகளை வெவ்வேறு கோணங்களில் அலசும் 19 கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்றிருக்கின்றன. இவை தவிர சிறுகதைகள், கவிதைகள், நூல் அறிமுகம் போன்றவையும் இடம்பெற்றிருக்கின்றன.
சாரு நிவேதிதாவின் பேட்டியும் இந்த இதழின் குறிப்பிடத்தக்க அம்சம். இதழ் தொடர்புக்கு: editorilakkiyaveli@gmail.com
படைப்பாளர்களுக்குக் கைகொடுக்கும் ‘படைப்புக் குழுமம்’
தமிழ் இலக்கியத் தளத்தில் முக்கியமான சில பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறது ‘படைப்புக் குழுமம்’. இக்குழு கடந்த சில ஆண்டுகளில் கவிஞர் பிரான்சிஸ் கிருபா, ரமேஷ் பிரேதன் ஆகியோருக்கு மாதா மாதம் 5 ஆயிரம் ரூபாயை அவர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்கிட முன்வந்து அப்படியே வழங்கிவருகிறது. இடையில், பிரான்சிஸ் கிருபா அகால மரணமடைந்தது பெருந்துயரம். இந்நிலையில், இந்த ஆண்டு ஓவியக் கவிஞர் அமுதோனுக்கு மாதா மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ‘படைப்புக் குழுமம்’ முன்வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, ‘படைப்புக் குழுமம்’ தத்தெடுத்துக்கொண்ட படைப்பாளருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால், அனைத்து மருத்துவச் செலவுகளையும் இக்குழு ஏற்றுக்கொள்கிறது. கவிஞர் ஜின்னா அஸ்மியைத் தலைவராகக் கொண்ட ‘படைப்புக் குழுமம்’, உலகம் முழுவதும் 82 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
கதைகள் கேட்க ஒரு செயலி
‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘கடல் புறா’ போன்ற சரித்திரக் கதைகளைப் படிக்க விரும்பினாலும் அதற்காகத் தனியாய் நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு ‘ஸ்டோரி டெல்’ இணையதளமும் (www.storytel.com) செயலியும் நல்லதொரு வாய்ப்பு. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ‘ஸ்டோரிடெல்’ நிறுவனம், இந்தியாவில் தமிழ் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தக் கதைசொல்லும் செயலிச் சேவையை அளித்துவருகிறது. தமிழ்ப் பிரிவுக்குக் கதைசொல்லும் கலைஞரான தீபிகா அருண் பொறுப்பேற்றுள்ளார். இந்தச் செயலியில் கல்கி, சாண்டில்யன் கதைகள் தொடங்கி, சமீபத்திய க்ரைம் த்ரில்லர்கள் வரையில் கேட்கக் கிடைக்கின்றன. சுயமுன்னேற்ற நூல்களும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளும்கூட.