Published : 09 Oct 2021 06:38 AM
Last Updated : 09 Oct 2021 06:38 AM
முதல்வர், பிரதமர் ஆகிய இரு பதவிகளிலும் சேர்த்து 20 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அதனையொட்டி, ‘வணக்கம் தமிழகம் - பிரதமரின் தமிழ் முழக்கம்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் தமிழ்நாடு பாஜக புத்தகம் வெளியிட்டுள்ளது. ‘‘உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது’’ என்று பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளில் ட்விட்டரில் மோடி குறிப்பிட்டிருந்த வரிகளுடன் இந்நூல் தொடங்குகிறது. கடந்த 7 ஆண்டுகளில் தமிழ், தமிழகம், தமிழர்கள் தொடர்பாக மோடி பேசியது படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது.
‘மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியில் தமிழ், தமிழ்நாடு, தமிழர்கள் குறித்து மோடி பேசியிருப்பதும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுத்தந்தது, மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் நடத்திய சந்திப்பின்போது வேட்டி - சட்டை - துண்டு அணிந்திருந்தது, இளையராஜா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் குறித்து ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியதும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாடு பெற்ற பயன்கள், இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு மோடி மேற்கொண்ட பயணம் குறித்த விவரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை, ‘‘‘வணக்கம் தமிழகம் - பிரதமரின் தமிழ் முழக்கம்’ நூலை தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டுசேர்க்க உறுதியேற்றுள்ளோம்’’ என்றார்.
வணக்கம் தமிழகம் - பிரதமரின் தமிழ் முழக்கம்
நூல் உருவாக்கம்: பேரா.அமர்பிரசாத் ரெட்டி தலைமையிலான குழு
வெளியீடு - ப்ளூ ஓஷன் புக்ஸ்
நூல் கிடைக்கும் இடம்: பாஜக அலுவலகம்,
தியாகராய நகர், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT