

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சார்லஸ் லேம்(ப்), நினைவுகளைக் காட்சிப்படுத்தும் தன்வயக் கட்டுரையாளரின் ஆகச் சிறந்த மாதிரி என்று கருதப்படுபவர். விசித்திரக் கவர்ச்சி வாய்ந்த, பழமையின் சாயல் படிந்த, கண்ணீரும் சிரிப்பும் சமமாய்க் கலந்த, உடைந்த மேற்கோள்களும் விவிலியக் குறிப்புகளும் விரவிக்கிடக்கிற சார்லஸ் லேம்பின் நடை நகல் பண்ண முடியாதது. மொழிபெயர்ப்புக்கு மடங்காதது. 'எலியா' என்ற புனைபெயரில் அவர் எழுதியுள்ள புகழ்பெற்ற கட்டுரைகள் சிலவற்றைத் தமிழாக்கி இருக்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்.
புத்தகத்தின் முன்னுரையில் சா. தேவதாஸ் குறிப்பிடுவது போல, கிர் காட்டு சிங்கமென, களக்காட்டு சிங்கவால் குரங்கென, செண்பகத் தோப்பு சாம்பல் அணிலென அருகிவரும் கலை வடிவமாகவே சார்லஸ் லேம்பின் கட்டுரை எஞ்சியிருக்கிறது. லண்டன் மாநகரவாசியான சார்லஸ், வேதனை நிறைந்த தன்னுடைய அகவாழ்க்கையை சகமனிதர்கள் மீதானதும் தன் மீதானதுமான நேச-பரிகாசப் புன்னகையில் மறைத்துக்கொண்டவர். மழையும் வெயிலும் மாறி மாறி வருகிற லண்டன் நகரத்து வானிலை போல, கண்ணீரும் சிரிப்பும் அடுத்தடுத்துத் தோற்றம் காட்டுகிறது அவரது எழுத்தில். காதலில் தோல்வி அடைந்தவர்; மனநோயாளியான சகோதரியைப் பராமரிப்பதற்காகத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர்.
அவர் தன்னுடைய கற்பனைக் குழந்தைகளுக்குக் கதைசொல்வது போல் அமைந்தது, 'கனவுக் குழந்தைகள்- ஒரு பகற்கனவு' கட்டுரை, அது லேம்ப் எழுத்தின் நூதனத் தன்மையைப் பூரணமாகத் தன்னுள் பொதிந்துவைத்திருப்பது. அதை மிகவும் இயல்பாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் ரமேஷ்.
'தங்களுக்கு வயதில் மூத்தவர்கள் குழந்தைகளாய் இருந்த கதைகளைக் கேட்பதற்கே குழந்தைகள் விரும்புகின்றன'. சிறுசிறு நிகழ்ச்சிகளுக்கும் குழந்தைகள் காட்டும் நுண்ணிய எதிர் அசைவுகள் துல்லியமாகப் பதிவாகியிருக்கின்றன.
மெல்லிய அவலம் தொனிக்கும் இந்தக் கட்டுரை மூலத்துக்கு நெருக்கமான மொழி பெயர்ப்பில் வந்திருக்கிறது. அதீத வெம்மையில் தானே ஒரு கனியாகப் பழுத்துக்கொண்டிருப்பது போல் எலியா கற்பனை செய்துகொள்வதாக ஒரு கட்டுரையில் வருகிறது. சார்லஸ் லேம்ப் தமிழில் கனிந்துவந்திருப்பதை உணரமுடிகிறது, ரமேஷின் இயல்பான மொழிபெயர்ப்பில்.
- ந. ஜயபாஸ்கரன், கவிஞர்.