Published : 03 Oct 2021 05:14 AM
Last Updated : 03 Oct 2021 05:14 AM

பிரான்சிஸ் கிருபா படைப்புகளுக்கான தேடல்

பிரான்சிஸ் கிருபா படைப்புகளுக்கான தேடல்

கடந்த வாரம் ஞாயிறு அன்று சென்னையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற பிரான்சிஸ் கிருபாவுக்கான அஞ்சலிக் கூட்டத்தில் எழுத்தாளர்கள், பிரான்சிஸ் கிருபாவின் நண்பர்கள் என்று பலரும் கலந்துகொண்டனர். பிரான்சிஸ் கிருபாவின் வெளிவராத படைப்புகள் குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிரான்சிஸ் கிருபா அடிக்கடி அறைகளையும் இடங்களையும் மாற்றிக்கொண்டே இருந்ததால், அவருடைய படைப்புகளைப் பல நண்பர்களிடம் விட்டுச் சென்றுவிட்டிருக்கிறார். அப்படி விட்டுச் சென்றவற்றுள் முக்கியமானது ‘ஏறக்குறைய இறைவன்’ என்ற முற்றுப்பெறாத நாவல். அதனை எப்படியாவது எழுதி முடித்துவிட வேண்டும் என்ற பிரான்சிஸ் கிருபாவின் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. நல்வாய்ப்பாக, அந்த முற்றுப்பெறாத நாவலின் கைப்பிரதி, அவருடைய நண்பர்களிடம் பத்திரமாக இருக்கிறது. அதேபோல் கிடைத்த கவிதைகளையெல்லாம் நண்பர்கள் சிலர் அந்த அஞ்சலிக் கூட்டத்தில் கொண்டுவந்து ஒப்படைத்தார்கள். இன்னும் அங்கே வராத பல நண்பர்களிடம் பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆகவே, கையெழுத்துப் பிரதியாகவோ, பத்திரிகைகளில் வெளிவந்த பிரதியாகவோ பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளை வைத்திருப்பவர்கள் கவிஞர் யூமா வாசுகியிடம் அவற்றை ஒப்படைக்குமாறு அந்த அஞ்சலிக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பிரான்சிஸ் கிருபாவின் படைப்புகளை வைத்திருப்பவர்கள் இது தொடர்பாக யூமா வாசுகியைத் தொடர்புகொள்ளலாம். அவரது எண்: 9840306118.

நகுலன் நூற்றாண்டைக் கொண்டாடும் கனலி

முக்கியமான எழுத்தாளர்களுக்கு அவ்வப்போது சிறப்பிதழ் கொண்டுவரும் ‘கனலி’ மின்னிதழ் தற்போது நகுலன் நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறது. நாஞ்சில் நாடன், பாவண்ணன், ரவிசுப்பிரமணியன், நா.விச்வநாதன், சு.வேணுகோபால், சுகுமாரன், யுவன் சந்திரசேகர், நாராயணன், வெளி ரங்கராஜன், சர்வோத்தமன் சடகோபன், சாகிப் கிரான், வியாகுலன், பாலா கருப்பசாமி, ராணி திலக், சுரேஷ் பிரதீப், ஜீவன் பென்னி, அரிசங்கர், விக்ரம் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழுக்குப் பங்களித்திருக்கிறார்கள். இந்த மின்னிதழுக்கான இணைப்பு: https://bit.ly/39UFzyR

புத்தகக் காட்சிகள்

தூத்துக்குடி புத்தகக்காட்சி: தூத்துக்குடியில் மதுரை மீனாட்சி புக் ஷாப் நடத்தும் புத்தகக்காட்சி கடந்த 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 10 வரை நடைபெறுகிறது. இந்து தமிழ் திசையின் வெளியீடுகள் உள்ளிட்ட அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% கழிவு உண்டு. இடம்: ராமையா மஹால், பாளையங்கோட்டை சாலை. நேரம். காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9443262763.

பூந்தமல்லி புத்தகக்காட்சி: சென்னை பூந்தமல்லியில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய புத்தகக்காட்சி அக்டோபர் 10 வரை நடைபெறுகிறது. இந்து தமிழ் திசையின் வெளியீடுகள் உள்ளிட்ட அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% கழிவு உண்டு. இடம்: ஜெயின் திருமண மண்டபம், அர்ச்சனா ஸ்வீட்ஸ் பின்புறம். நேரம். காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணி வரை. தொடர்புக்கு: 9884355516.

தாந்தே நினைவு-700

மறுமலர்ச்சிக் காலத்தின் மாபெரும் கவிஞர் தாந்தே. அவரது 700-வது நினைவு நாளை செப்.13 அன்று இத்தாலி கொண்டாடியது. இந்தக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடும் தன் பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. தாந்தே நினைவு நாளன்று அவர் பிறந்த ப்ளாரென்ஸ் நகரத்தில் ‘டிவைன் காமெடி’யின் பல்வேறு மொழியாக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்திய மொழிகளில் வங்காளத்திலும் மலையாளத்திலும் மட்டுமே ‘டிவைன் காமெடி’யின் மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளதாகச் சொல்லப்பட்டுவந்த நிலையில், அதன் தமிழ் மொழிபெயர்ப்பைத் தற்போது உலகின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளார் ஸ்ரீரங்கம் கலை அறிவியல் கல்லூரியின் முதுநிலை ஆங்கிலத் துறைத் தலைவரான கார்த்திக் சுந்தரராஜன். சுவாமி சுத்தானந்த பாரதியார் ‘டிவைன் காமெடி’ காவியத்தை ஆங்கிலம், பிரெஞ்சு மொழியாக்கங்கள் வழியாகப் படித்து, அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். திருச்சி இராமச்சந்திரபுரத்திலிருந்து அன்பு நிலையம் ‘மகாகவி தாந்தே’ என்ற தலைப்பில் 1940-ல் வெளியிட்ட அந்நூலை மின்னுருவாக்கித் தமிழ் இணைய மின்னூலகத்துடனும் பகிர்ந்துகொண்டுள்ளார் கார்த்திக் சுந்தரராஜன். சுத்தானந்த பாரதியின் வார்த்தைகளில் தாந்தேவைப் படிக்க: https:/y/3/bit.lzCaKcy

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x