

பல் இல்லாத புலி
இந்தியாவின் தலையாய பிரச்சினைகளில் ஒன்று சட்டம், உரிமைகள் பற்றிய அறிவு பொதுமக்களிடம் போய் முறையாகச் சேராதது. மக்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் இடையே பெரிய சுவர்கள் எழுப்பும் சக்திகள் ஏராளம். நீதித்துறையில் இந்த சக்திகளின் ஆதிக்கம் அதிகம். இந்தச் சூழலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற துறைகளைச் சேர்ந்தவர்களே சில முயற்சிகள் மேற்கொண்டுவருவது ஓர் ஆறுதல். வழக்கறிஞர் வே. தங்கவேலின் முயற்சியும் அப்படிப்பட்டதுதான். மனித உரிமைகள், மனித உரிமைகள் ஆணையம் போன்றவையெல்லாம் வெற்றுச் சொற்களாகிவிட்டதை அவர் இந்த நூலில் தரவுகளுடன் அம்பலப்படுத்துகிறார்.
நிகழ்ந்தபோதே வரலாறு…
அறிஞர் வெ. சாமிநாத சர்மாவைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் இப்படிச் சொல்லியிருக்கிறார்: “உலகத்து அறிவையெல்லாம் ஒன்றுதிரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா.” இணையம் போன்ற நவீன வசதிகள் ஏதும் இல்லாத காலத்தில் தனது சமகால உலக அரசியலை உற்றுநோக்கிப் பல நூல்களை எழுதியிருக்கிறார். இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்படுவதற்கு முன்பு வெளியான நூல் இது. பாலஸ்தீன வரலாறு, யூதர்களின் வரலாறு, ஆக்கிரமிப்பு, போர்கள் என்று ஆழமாக இந்த நூல் அலசுகிறது.
நினைவுப் பூக்கள்
பத்திரிகையாளர் சுந்தரபுத்தன், தனது சிறு வயது கிராமத்து நினைவுகள், பத்திரிகை வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள், நகரத்து வாழ்க்கையின் சுவடுகள் என்றெல்லாம் இருவேறு உலகங்களின் வாழ்க்கையை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். எந்த இடத்தில் இருந்தாலும் மனது ஒருவிதச் சுதந்திரத்துக்கு ஏங்கும் அல்லவா! அந்தச் சுதந்திரத்தின் அடையாளமாகவே அவரது சிறு வயது நினைவுகள் வெளிப்படுகின்றன. அவருடைய நினைவுகள் மட்டுமல்ல, ஷோபாவைப் பற்றிய பாலு மகேந்திராவின் நினைவுகள், அவருடைய சொந்த கிராமத்தைப் பற்றிய அவரது தந்தையின் பதிவு போன்றவையும் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.