

‘கலைஞர் பொற்கிழி’ விருது
‘கலைஞர் கருணாநிதி பொற்கிழி’ விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 2021-க்கான விருதுகளை அபி (கவிதை), இராசேந்திர சோழன் (புனைவிலக்கியம்), எஸ்.ராமகிருஷ்ணன் (உரைநடை), வெளி ரங்கராஜன் (நாடகம்), மருதநாயகம் (ஆங்கிலம்), நதித் சாகியா (காஷ்மீரி, பிற இந்திய மொழி இலக்கியம்) ஆகியோர் பெறுகின்றனர். இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகை வழங்கப்படும். 2007-ல் 30-வது சென்னை புத்தகக்காட்சியின்போது அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி பபாசியிடம் வழங்கிய ரூ.1 கோடியைக் கொண்டு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. தற்போதைய தெரிவுகள் சர்ச்சையின்றிப் பெரிதும் வரவேற்கப்பட்டிருப்பது ஆரோக்கியமான ஒன்று. விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்!
வெண்முரசுக்கு ஓர் இசை ஆராதனை
மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெயமோகன் எழுதிய ‘வெண்முரசு’ உலகின் மிகப் பெரிய நாவல் வரிசைகளுள் ஒன்று. 7 ஆண்டுகள், 26 நாவல்கள், 26 ஆயிரம் பக்கங்கள் என்று பிரம்மாண்டமாக விரியும் ‘வெண்முரசு’ நாவலைக் கொண்டாடும் விதமாக அமெரிக்காவின் ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ ‘வெண்முரசு கொண்டாட்டம்’ என்ற ஆவணப் படத்தை சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆவணப் படத்தில் ஜெர்மன் பிராஸ் இசைக் குழு, வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்களுடன் நடிகர் கமல் ஹாசன், பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோர் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் இசையில் பாடியிருக்கும் இசைத் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. இணையவழியில் இந்த இசைத் தொகுப்பு வெளியிடப்படும் நிகழ்வில் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், ரவிசுப்பிரமணியன், ஜெயமோகன், பாடகி சைந்தவி, இயக்குநர் அப்பு பட்டாத்ரி, சித்தார் ரிஷப் ஷர்மா, இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கக் கிளையின் நிறுவனர் ஆஸ்டின் செளந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கிறார்கள். அக்டோபர் 9 அன்று இந்த நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம் இந்த இசைத் தொகுப்பை வெளியிடுகிறார்.
நேரம்: மாலை 5.30.
தொடர்புக்கு: 9787050464