

அகத்தைப் புதிதாக்கு வதுதான் ‘புத்தகம்’. ஆகவே, புத்தகம் படிப்பதையும், புத்தகத்தைக் கொண்டாடுவதையும் மிகவும் முக்கியமான வாழ்க்கைச் செயல்பாடுகளாக நாம் கருத வேண்டும். இதோ புத்தகங்களைக் கொண்டாடும் புத்தகத் திருவிழா திருச்சியில் தொடங்கிவிட்டது.
காவிரித் தாயின் பாலால் பயிர் மட்டுமல்ல, இலக்கிய உயிர் வளர்த்த ஊர் இது. தனது பெயரிலேயே ‘பள்ளி’யைக் கொண்டிருப்பதாலோ என்னவோ படிப்பின் வாசம் படிந்த ஊராக இருக்கிறது திருச்சிராப்பள்ளி. அகநானூற்று மருதனாரும் ‘சிராப்பள்ளிக் குன்றுடையானை’ பாடும் தேவாரமும் தமிழ் வளர்த்த ஊர் இது.
பன்னிரெண்டு ஆழ்வார்களில் பதினொரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருவரங்கத்தில் கம்பரின் ராமாயணம் அரங்கேறிய பெருமை படைத்த ஊர் இது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி வீரமா முனிவரின் பணியால் சிறந்த ஊர் திருச்சி.
புத்தகங்களைப் பதிப்பித்துப் பரப்பியதிலும் திருச்சிக்குத் தனி இடமுண்டு. தமிழ், சமஸ்கிருத இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிட்ட ‘ஸ்ரீவாணி விலாசம்’ பதிப்பகம் மிகப் பழமையானது. அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், சி.பி.சிற்றரசு போன்ற திராவிடத் தலைவர்களின் நூல்களைப் பதிப்பித்துப் பரப்பிய ‘திராவிடப் பண்ணை’ அதில் முக்கியமானது. 1948-ம் ஆண்டிலேயே அரு. இராமநாதனின் ‘காதல்’ வளர்த்த ஊரும் இதுதான் (பிரேமா பிரசுரம்).
இன்னும், ‘வைஷ்ணவ சுதர்சன வெளியீடு’, ராமகிருஷ்ண தபோவனம், சுத்தானந்த பாரதியின் நூல்களைப் பதிப்பித்த ‘அன்பு நிலையம்’, பல நல்ல இலக்கியங்களை, கிறிஸ்தவ நூல்களைப் பதிப்பித்த ‘தமிழ் இலக்கியக் கழகம்’, பெரியாரின் ‘சுயமரியாதைப் பிரச்சார வெளியீடு’ , பல்துறை நூல் பதிப்பகர் ‘பழனியப்பா பிரதர்ஸ்’, இஸ்லாமிய நூல்களை வெளியிட்ட பல பதிப்பகங்கள் இப்படி நிறைய பதிப்பகங்கள் திருச்சியில் இயங்கின, இயங்குகின்றன. புத்தக வெளியைத் தமிழகம் முழுக்க விரிவுபடுத்திய பெருமைக்குரிய ஊர் திருச்சி.
சங்க காலம் தொடங்கி, தாயுமானவர் வழியாக மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை என்று இதன் இலக்கியகர்த்தாக்கள் வரிசை நீளமானது. அண்ணல் காந்தியின் வரலாற்றை ‘காந்தி மகான் காதை’யாக ஒன்பதாயிரம் விருத்தப் பாக்களால் படைத்த புலவர் அரங்க. சீனிவாசன், திருவிளையாடல் புராணத்துக்குப் பேருரை எழுதிய சரவண முதலியார், அ.ச. ஞானசம்பந்தன், ஊரன் அடிகள், மார்க்சிய அறிஞர் கோ. கேசவன், மணவை முஸ்தபா, பிரேமா நந்தகுமார், அமுதன் அடிகள் என்று இந்த நதி இன்னும் விரியும். எழுத்தாளர்கள் குமுதன், கி.வா.சு, திருலோக சீத்தாராமன், டி.கே.சீனிவாசன், லட்சுமி, லா.ச.ரா, ராஜம் கிருஷ்ணன், வாலி, சுஜாதா இப்படி எழுத்துக்கும் பதிப்புக்கும் தன் நீண்ட பங்களிப்பைத் தந்த திருச்சியில்தான் இப்போது இந்த ‘புத்தகத் திருவிழா’ தொடங்கியிருக்கிறது.
த.மு.எ.க.ச-வின் ‘வயல்’, அரிமாவின் ‘களம்’, படிப்போம் பகிர்வோமின் ‘கார்முகில்’, கலை இலக்கியப் பெருமன்றம், கம்பன் கழகம், எஸ்.ஆர்.வி பள்ளி, தமிழ்ச்சங்கம், திருக்குறள் பேரவை என்று பல அமைப்புகள் இங்கு வாசிப்பை வளர்க்கும் விதத்தில் இயங்குகின்றன.
ரோட்டரி சங்கம் பல ஆண்டுகள் புத்தகக் கண்காட்சிகளை நடத்தியுள்ளது. எனினும், பபாசி நடத்தும் இந்நிகழ்வு ஒரு திருவிழாபோல் ஆகக்கூடும். பள்ளி, கல்லூரிகள் இதை சுவிகரித்துக்கொள்ள வேண்டும். பெற்றோரும்தான். ஊரே கூடிக் கொண்டாட வேண்டிய நிகழ்வு இது.