Published : 25 Sep 2021 06:11 AM
Last Updated : 25 Sep 2021 06:11 AM
மலையாளத்துக்குச் செல்கிறார் சுகிர்தராணி
கவிஞர் சுகிர்தராணியின் கவிதைகள் மலையாள தேசத்துக்குச் செல்கின்றன. சுகிர்தராணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கவிஞரும் பேராசிரியருமான பி.எஸ்.மனோஜ்குமார் மொழிபெயர்த்திருக்கிறார். புத்தகத்தின் தலைப்பு ‘நதியெந்நாணு என்றே பேரு’ (நதி என்பது என் பெயர்). ஃபேபியன் புக்ஸ் என்ற பதிப்பகம் இந்த நூலை அடுத்த வாரம் வெளியிடுகிறது. வாழ்த்துகள் சுகிர்தராணி!
காலச்சுவடு பதிப்பகம்-25
காலச்சுவடு பதிப்பகம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அந்தப் பதிப்பகம் ஜூம் செயலி வழியாக ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, காலச்சுவடு இணையதளத்தைத் திறந்து வைக்கிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன். முக்கியமான எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நிறைவுரை ஆற்றுகிறார்.
வாசகசாலை விருதுகள்
இலக்கியத்துக்கான மின்னிதழ், விமர்சனக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்திவரும் வாசகசாலை அமைப்பு விருதுகளும் வழங்கிவருகிறது. கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாவல், சிறுகதைத் தொகுப்பு, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு, அறிமுக எழுத்தாளர் ஆகிய பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது. விருதுத் தொகை ரூ. 5,000. புத்தகத்தின் ஒரு பிரதியை வாசகசாலை அமைப்புக்கு அனுப்பிவைக்கலாம். புத்தகங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 25.10.2021. தொடர்புக்கு: 9942633833
இரண்டு பிள்ளைகள்... இரண்டு நற்செயல்கள்!
எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் திரைப்படம் ஆகிறது என்ற செய்தி சமீபத்தில் இலக்கிய உலகில் அதிகம் பேசப்பட்டது. இந்தக் கதைக்கான உரிமை ரூ. 1 கோடிக்குப் பெறப்பட்டது இந்த கவன ஈர்ப்புக்குக் காரணம். அதைத் தொடர்ந்து கதைக்குப் பெற்ற உரிமைத் தொகையிலிருந்து சி.சு.செல்லப்பாவின் மகன் சி.சுப்பிரமணியன் ரூ.5 லட்சத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித் துறைக்கு ‘சி.சு.செல்லப்பா அறக்கட்டளை நிதி’யாக வழங்கியிருக்கிறார். இதனைக் கொண்டு ஆண்டுதோறும் சி.சு.செல்லப்பா நினைவு உரை நிகழ்வுகள் நடைபெறும். அதேபோல், அசோகமித்திரனின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மூத்த மகன் ரவிஷங்கர் குமுடிமூலை கிராமத்தில் உள்ள குளமொன்றைச் சீரமைத்து, மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார். சென்னையில் நிலவிய தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் பற்றி ‘தண்ணீர்’ நாவலை எழுதியிருக்கும் அசோகமித்திரனுக்குச் சிறப்பான அஞ்சலி இது.
பிரான்சிஸ் கிருபா நினைவேந்தல் நிகழ்வுகள்
சமீபத்தில் மறைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபாவுக்குத் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் தமிழின் முக்கியமான இலக்கிய ஆளுமைகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் ‘குதிரைவீரன் பயணம் நண்பர் வட்டம்’ ஒரு அஞ்சலிக் கூட்டத்தை நாளை (ஞாயிறு) காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் கவிஞர்கள், திரைப்பட ஆளுமைகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள். நாகர்கோவிலில் உள்ள நெய்தல் வெளி அரங்கில், நாளை 4 மணிக்கு பிரான்சிஸ் கிருபாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘உரையும் கவிதாஞ்சலியும்’ என்ற நிகழ்வு நடைபெறுகிறது. ஓசூரிலும் நாளை மாலை 6 மணிக்கு பைரவி கலைப்பள்ளியில் பிரான்சிஸ் கிருபாவுக்கான நினைவஞ்சலி நடைபெறுகிறது.
புத்தகக் காட்சிகள்
ஓஎம்ஆர் புத்தகக்காட்சி: சென்னை பெருங்குடி அருகிலுள்ள சீவரத்தில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய புத்தகக்காட்சி அக்டோபர் 10 வரை நடைபெறுகிறது.
‘5 ஆயிரம் தலைப்புகள் 5 லட்சம் புத்தகங்கள்’ என்ற முழக்கத்தோடு இந்தப் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. இதன் ஒரு அங்கமாக குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியும் நடைபெறுகிறது. ஓவியங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்: 8668134540. இந்து தமிழ் திசையின் வெளியீடுகள் உள்ளிட்ட அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% கழிவு உண்டு.
இடம்: வள்ளலார் சன்மார்க்க அரங்கம்.
நேரம் காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை.
தொடர்புக்கு: 9884515879.
தூத்துக்குடி புத்தகக்காட்சி: தூத்துக்குடியில் மதுரை மீனாட்சி புக் ஷாப் நடத்தும் புத்தகக்காட்சி கடந்த 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 10 வரை நடைபெறுகிறது. இந்து தமிழ் திசையின் வெளியீடுகள் உள்ளிட்ட அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% கழிவு உண்டு.
இடம்: ராமையா மஹால், பாளையங்கோட்டை சாலை.
நேரம். காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை.
தொடர்புக்கு: 9443262763.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT