

பிறவிக் கவிஞன் பிரான்சிஸ்! - தேவதேவன், கவிஞர்.
பிரான்சிஸின் ‘கன்னி’ நாவலின் கதைத் தலைவன், தேவதேவன் கவிதைகளை ஆய்வுசெய்கிற கல்வித் துறை மாணவன். ஒரு நேர்காணல் கருதி தேவதேவனைச் சந்திக்க வருகிறான். இதற்காகவே ஒரு நாள் தூத்துக்குடி வந்து தேவதேவனைச் சந்தித்துவிட்டு, அதைத் தன் நாவலின் சிறு பக்கங்களில் அவர் எழுதிய சித்திரம் அற்புதமானது. கவிதைகள் குறித்த காதல்தான், கிடைத்த ஒரு வாய்ப்பில் தேவதேவனைப் பற்றிய ஒரு ஆவணப் படம் எடுக்க அவரைத் தூண்டியிருக்க வேண்டும். கவிதை காதலுடனும் மெய்(மை)யியலுடனும் தொடர்புடையது. உரைநடையோ உலகியல் சார்ந்தது. கவிதையை உரைநடைக்குக் கொண்டுவருவதில் பிரச்சினைக்குள்ளாகிற ஒரு மனிதனின் தவறிவிழுந்துவிட்ட பாதைதான் ‘குடி’ என்பேன். குடிப்பழக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு பகட்டாகவும் ஊதாரித்தனமாகவும் வாழும் மனிதர்களைப் போலில்லாமல் சிறு உணவு மட்டுமே போதும் எனும்படி வாழ்ந்த மிக எளிமையான மனிதர் கிருபா. இன்னும் அவர் கூர்மையாகத் தன்னை அறிந்து, தன் பழக்கங்களிலிருந்தும் விடுபட்டிருந்தால் எத்துணை பெரிய காப்பியமாயிருக்கும் இந்த உலகம் என்பதே அஞ்சலியும் ஏக்கமுமாக இருக்கிறது, அவரை அறிந்த அன்பர்களுக்கு.
******
உன்னதமான கலைஞன்- சுசீந்திரன், இயக்குநர்.
கே.கே.நகரில் உள்ள ஒரு டீக்கடையில் பாஸ்கர் சக்தி மூலமாக எதிர்பாராத விதமாகத்தான் பிரான்சிஸுடன் முதல் சந்திப்பு நடந்தது. நான் உதவி இயக்குநராக இருந்த காலம் அது. பிரான்சிஸ் கிருபா, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இயக்குநர் லெனின்பாரதி, நடிகர் ராமச்சந்திரன் என்று நாங்கள் எல்லோரும் அப்போது சந்தித்துப் பேசிக்கொண்டிருப்போம். என்னுடைய முதல் படமான ‘வெண்ணிலா கபடி குழு’வை இயக்கியபோது, நான்தான் அவரிடம் பாடல் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். தனக்குச் சினிமா பாடல் எழுத வருமா என்று ஆரம்பத்தில் அவர் தயங்கினார். ‘மண்ணைத் தொடு மார்பில் இடு’ என்று அந்தப் படத்தின் ‘தீம்’ பாடலை அவர்தான் எழுதினார். பிறகு, ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் இளையராஜா இசையமைத்துப் பாடிய ‘குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி’ பாடலையும் எழுதினார். அவருடைய ‘கன்னி’ நாவல் யாருமே மறந்துவிட முடியாத அற்புதமான படைப்பு. உன்னதமான கலைஞன். எல்லோரிடமும் அன்போடு பழகக்கூடிய மனிதர்.
*****
வாழ்விடமிருந்து ஒன்றையும் கோராதவன்- கோணங்கி, ‘நீர்வளரி’ நாவலில் பிரான்சிஸ் கிருபா பற்றி எழுதிய பகுதி
தடையின்றிப் பாதையோரங்களில் உழைப்போரின் எல்லாக் கனவுகளையும் ஏற்றிருந்தான். அவன் அலைவுக்குத் தடையின்றி சிகரெட் கேட்டு நின்ற வேளை வேனில் ஏற்றப்பட்டுக் கொண்டுசெல்லப்படுகிறான். எழும்போது எதுவும் தெரியவில்லை. அவன் சாத்தியமான எல்லா மனிதரையும் யதேச்சையில் தோற்றமான பெண்களையும் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக அகவெழுச்சியைக் கொண்டுவந்து, லட்சியார்த்த அவலத்தை விட்டு வெளியேறியிருந்தான். வாழ்விடமிருந்து ஒன்றையும் கோராத சாதாரணமானவர்களோடு இறந்துகொண்டிருக்கும் ஒரு அனாதையைக் கைவிட முடியவில்லை அவனுக்கு… கனவுகளின் மயக்கத்தில் தன்னை ஆட்படுத்திக்கொண்டான். மனதின் வடிவம் உப்பு நிலங்களில் நீர்க்கன்னியைக் கடற்கோரையில் வரைந்த உலகத்தைத்தான் தேடியலைந்தான்.
******
அன்பொளி- லெனின்பாரதி, இயக்குநர்.
சுயதம்பட்டமும், வணிக நோக்கில் தன்னைத் தானே விற்பவர்களும் நிறைந்த இன்றைய மலிவான உலகில் பிரான்சிஸ் கிருபா அன்பைக் கொண்டு சகல இடைவெளிகளையும் இட்டு நிரப்ப முயற்சி செய்துகொண்டே இருந்த ஈரமான கவிமனம் கொண்டவன். அந்த ஈர மனதைக் கவனிக்க, காது கொடுத்துக் கேட்க இன்றைய அவசர உலகம் தயாராக இல்லை. ஆனாலும், அவனுக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. வலியோடு முறிந்து அன்பொளியாய் மின்னி மறைந்துவிட்டான். லவ் யூ பிரான்சி!
நின்று எரியும் சுடர்!
கவிஞர்கள் எப்போதும்
சொல்பேச்சு கேட்காதவர்கள்.
அன்புக்கு ஏங்குபவர்களும்
மனிதர்களின் அருகாமையை
மூர்க்கத்தோடு புறந்தள்ளுகிறவர்களும்
அவர்களே.
கவிஞனின் இறப்பில்
இயற்கையின் பங்கு ஒன்றுமேயில்லை.
அவன் இறப்புக்கு
அவனே அரசன்.
யானைகளின் காலால் இடறப்படுவதை,
நேர்த்தியாய் உடைகளை
அடுக்கி வைத்துவிட்டு
நீருக்குள் பாய்வதை,
குழந்தைகளுக்கு
உணவு தயாரித்த பின்
தலையைத் தீக்குத் தின்னக் கொடுப்பதை
குடியை,
மன அழுத்தத்தை,
உறக்க மாத்திரையை,
வேறு பல
நெடுங்காலச் சுய அழிப்பை
அவன் விரும்பித் தேர்கிறான்.
கவிஞனுக்கு இறப்பு
ஒரு சாகசம்.
எத்தனை அச்சமோ,
அத்தனை ஆர்வம்.
எல்லா புதிய வழிகளிலும்
அவன் இடுகாட்டின் சிறு வெளிச்சத்தைத்
தன் நுணுங்கிய கண்களால்
தேடிக்கொண்டே இருப்பவன்.
இறப்பின் கிளர்ச்சிக்குத்
தன்னை விற்கத் துணிகிற மடையன்.
அலைகளில் இழுபட்டு இழுபட்டு
சமுத்திரத்தின் ஆழத்திற்கு
மீண்டும் செல்லும்
வெண்சங்கினைப் போல
நிகழ்கிறது
எழுதுகிற ஒருவனின் மரணம்.
முழுதாய் மறைந்த ஒன்றென்று
எதுவும் இங்கே இல்லை,
இருப்பின்மையின் புழுக்கத்தை
அவன் விட்டுச்சென்ற கவிதைகள்
படபடத்துக் கலைக்கின்றன.
சுடர்
அது பாட்டுக்கு நின்று எரிகிறது.
முன் பின் என்கிற
இருள் கணக்குகளை
எல்லாம் பொய்யாக்கி.
- பொன்முகலி, கவிஞர்