Published : 18 Sep 2021 05:14 am

Updated : 18 Sep 2021 05:14 am

 

Published : 18 Sep 2021 05:14 AM
Last Updated : 18 Sep 2021 05:14 AM

பிரான்சிஸ் ஏன் உங்களைக் கைவிட்டீர்?

francis-kirupa

மறைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் (1974 - 2021) மொத்தக் கவிதைகள் திரட்டை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் 2018-ல் வெளியிட்டது. அந்தப் பதிப்பின் அட்டையில் ஒரு பசுமையான பூவரச இலையொன்று எந்த வாடலும் இல்லாமல் மணற்பரப்பில் செங்குத்தாகச் செருகியபடி இருக்கும். அது காற்றில் உதிர்ந்த இலைபோலவோ யாரும் பறித்து மணலில் செருகிய இலைபோலவோ இருக்காது. அந்த இலையே தன்னைத் தானே மரத்திடமிருந்து விடுவித்துக்கொண்டு மணலில் செருகிக்கொண்டதுபோல்தான் இருக்கும். பிரான்சிஸ் கிருபாவும் அப்படித் தன்னைத் தானே கொண்டுபோய் காலத்தில் செருகிக்கொண்டுவிட்டார். அகாலத்தில் பிரான்ஸிஸை மரணம் கொத்திக்கொண்டுபோய்விடக் கூடாது என்று அவருடைய நண்பர்களும் வாசகர்களும் துடித்துக்கொண்டிருந்தாலும் அவர் கவிதைகளிலும் நாவலிலும் வரும் கடற்கரையைப் போலத் தன்னை, பெருங்கடலென அலை வீசும் மரணத்திடம் முழுமையாகத் திறந்துகாட்டிக்கொண்டு அவர் நின்றிருந்தார்.

பிரான்சிஸின் மறைவுக்கு இன்று ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியச் சூழலும் துக்கம் அனுசரித்துக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் சிறிய படைப்புலகம் அவருடையது. ‘மெசியாவின் காயங்கள்’, ‘வலியோடு முறியும் மின்னல்கள்’, ‘நிழலின்றி ஏதுமற்றவன்’, ‘மல்லிகைக் கிழமைகள்’, ‘ஏழுவால் நட்சத்திரம்’, ‘சம்மனசுக்காடு’, ‘பிரான்சிஸ் கிருபா கவிதைகள்’, ‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ ஆகிய எட்டுக் கவிதைத் தொகுப்புகளும் ‘கன்னி’ என்ற ஒரு நாவலும் வெளியாகியிருக்கின்றன. இன்னும் சில படைப்புகளுக்கான கனவுகளுடன் பிரான்சிஸ் இருந்ததாக அவருடைய நண்பர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

பிரான்சிஸ் உயிரோடு இருந்தபோது வாசகர்கள் கொண்டாடிய அளவுக்குத் தீவிர இலக்கியவாதிகள் கொண்டாடவில்லை என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம், பிரான்சிஸின் படைப்புகளில் காணப்பட்ட ரொமாண்டிசிசம் (கற்பனாவாதம்). ‘பஞ்சுப் பாறைகளின் பரஸ்பர முத்தத்தால்/ பேரொளி நிறைந்து/ ஆகாயம் நெஞ்சு ததும்ப நேரிட/ வீடுகளின் உட்சுவரில்/ நிழல் ஜன்னல்களை/ தற்காலிகமாகப் பொறிக்கிறது/ மின்னல்’ என்ற வரிகளில் காணப்படும் அழகு, பெரும்பாலான நவீன இலக்கிய விமர்சகர்களுக்கும் நவீனக் கவிகளுக்கும் ஒவ்வாதது. இதுபோன்ற கற்பனாவாதக் கூறுகளை பிரமிள், தேவதேவன் ஆகியோரின் கவிதைகளிலும் காணலாம். கற்பனைத் திறனின் உச்சபட்ச சாத்தியங்களை நோக்கிக் கவிஞர்களை அழைத்துச்செல்கிறது என்ற வகையில் கற்பனாவாதத்துக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது.

ஒரே நேரத்தில் அழகையும் வலியையும் பாடிய கவிஞர் பிரான்சிஸ். அவரது கவிதைகளில் வலியானது அழகையும் அழகானது வலியையும் பரஸ்பரம் உண்டுபண்ணுகின்றன. இதற்கான திறவுகோல் அவரது ‘கன்னி’ நாவலில் இருக்கிறது. பிரான்சிஸின் தொகுப்பில் முதலாவதாக இடம்பெற்ற கவிதையில் ‘சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு/ மத்தியில் மல்லாத்தியிட்டு/ தன் வயிற்றில் இறங்கி முழு/ வட்டமடித்த கத்தியைத்/ தலை தூக்கி எட்டிப் பார்த்தது/ ஆமை’ என்று எழுதியிருப்பார். அந்த ஆமையின் கண்களில் ‘உயிர் பிரியும் கணத்தில்/ தம் காயங்களை/ கடைசியாய் பார்வையிட்ட/ மெசியாவின் கண்களை/ பல நூற்றாண்டுகள் கழித்து’ சந்தித்ததாக பிரான்சிஸ் கூறுவார். ஆமையின் கண்களில் மெசியாவை மட்டுமல்ல, தனது மரணத்தையும் முன்கூட்டியே கண்டுணர்ந்து எழுதியிருப்பது போன்ற கவிதை அது.

உடலுக்குள் உயிர் எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கிறது. காற்றடித்தும் அணையாத சுடர் போன்றது அது. அந்தச் சுடரைப் பற்றியும் சூரியன், ஒளி பற்றியும் பாரதி தீராமல் எழுதியிருக்கிறார், பிரான்சிஸ் கிருபாவும் எழுதியிருக்கிறார். உயிரை, ஆன்மாவை ‘இம்மெழுகுவர்த்தியின்/ உச்சியிலேறி வெளிச்சத்தை/ திரியில் கட்டும் சுடர்’ என்கிறார். ஒளியைச் சூரியன், நிலா, விண்மீன், மின்னல், ஏசுவுக்கு ஏற்றிய மெழுகுவர்த்திச் சுடர் என்று பல வடிவங்களில் போற்றிப்பரவுகிறார் பிரான்சிஸ். ‘புல்லின் தளிர் விரல் நுனியில்/ பனிக்காலம்/ கட்டி முடித்த கண்ணாடித் தீவுக்கு/ விளக்கேற்றுகிறது ஒரு/ விடிவெள்ளியின் முகம்’ என்பதெல்லாம் தூய அழகியல்.

இன்னொரு பக்கம் வலியில் அழகு காண்கிறார் பிரான்சிஸ். ‘தூண்டில்காரனிடம்/ சிக்கிவிட்ட மீன்/ நாசியில் ஊசி நுழைந்த வேதனையோடும்/ புதிய நம்பிக்கையோடும்/ மீதி வாழ்வின் முன்வாசலில்/ மெல்ல நீந்திப் பார்க்கிறது/ பாதியளவு நீர் நிரப்பிய தோள்பையுள்’ என்றொரு கவிதை. இந்தக் காட்சியில் ஒரே நேரத்தில் எவ்வளவு வலியும் நம்பிக்கையும் அழகும் நிரம்பியிருக்கிறது. இந்த மூன்றின் சமனும் வாழ்தலுக்கு மிகவும் முக்கியம். ஆனால், நம்பிக்கையை விடுத்து வலியையும் அழகையும் மட்டும் பிரான்சிஸ் தேர்ந்தெடுத்துக்கொண்டதுதான் அவரை நம்மைவிட்டு இவ்வளவு சீக்கிரம் கொண்டு சென்றுவிட்டதோ என்று தோன்றுகிறது.

‘காணி நிலம் வேண்டும்’ என்று பாரதி கேட்டதுபோல் ‘ஒரு துண்டு பூமி/ இரண்டு துண்டு வானம்/…குட்டியாய் ஒரு சாத்தான்/ உடல் நிறைய உயிர்/ மனம் புதைய காதல்/ குருதி நனைய உள்ளொளி/ இறவாத முத்தம்/ என் உலகளவு எனக்கன்பு’ என்று வாழ்தலுக்கான கனவை பிரான்சிஸ் அரிதாக வெளிப்படுத்தியிருந்தாலும் அதை அவர் தன் வாழ்க்கை முழுவதும் தக்கவைத்துக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் தன்னைத் தானே அவர் தண்டித்துக்கொண்டுதானே இருந்தார். இந்த உலகில் எத்தனையோ பேர் நம்மைத் தண்டிக்கட்டும், ஆனால் நம்மை மன்னிப்பதற்கு நாம் மட்டுமாவது இருக்க வேண்டும் அல்லவா. ஆனால், ‘கணங்கள்தோறும்/ என்னை நானே தண்டித்துக்கொண்டிருக்கும்/ போது/ ஏன்/ நீயேனும் கொஞ்சம்/ என்னை மன்னிக்கக்கூடாது!’ என்று யாரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்தார்?

பிரான்சிஸ் மறைந்ததும் ஓவியர் சுபராமன் வரைந்த ஓவியம் பலரையும் உருக்கியிருக்கிறது. ஏசுவைப் போன்று அங்கியணிந்த தோற்றம் கொண்ட ஒருவர், உயிர் பிரிந்த ஏசுவைப் போல இடுப்பில் மட்டும் துணியைக் கொண்டிருக்கும் இறந்த மனிதர் ஒருவரின் சடலத்தை மடியில் தாங்கியிருப்பது போன்ற ஓவியம் அது. இரண்டு பேருமே பிரான்சிஸ்தான். அவரின் கவிதைகள், ‘கன்னி’ நாவல் என அனைத்தையும் வாசித்திருப்பவர்களுக்குத் தெரியும், ஏசு அவரது படைப்புகளில் மிக முக்கியமான ஒரு பாத்திரம், குறியீடு என்று. ‘கன்னி’ நாவலின் தொடக்கத்தில் 90 வயசுக்கும் மேற்பட்ட கிழவராக ஏசு (பெயர் குறிப்பிடப்படாமல்) வருவார். அப்படியென்றால் சிலுவையில் ஏறியது யார்? அது அந்த நாவலின் நாயகனான பாண்டியன்தான் (பிரான்சிஸ் கிருபா). வழிதவறிச் சென்ற ஆட்டுக்குட்டியான தன்னை அணைத்துக்கொள்ள ஒரு அன்னை மரியாளையும், கால்களுக்குப் பரிமளத் தைலம் தடவிவிடும் பெண்ணையும், சிலுவையையும் ஒரே நேரத்தில் வேண்டும் ஒருவராக பிரான்சிஸ் கிருபா தன் படைப்புகளில் தெரிகிறார். ஆனால், நமக்கோ ‘பிரான்சிஸ் பிரான்சிஸ் ஏன் உங்களைக் கைவிட்டீர்?’ என்று கேட்கத் தோன்றுகிறது.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in
கவிஞர் பிரான்சிஸ் கிருபாபிரான்சிஸ் கிருபா மறைவுபிரான்சிஸ் கிருபா கவிதைகள்‘மெசியாவின் காயங்கள்’‘வலியோடு முறியும் மின்னல்கள்’‘நிழலின்றி ஏதுமற்றவன்’‘மல்லிகைக் கிழமைகள்’‘ஏழுவால் நட்சத்திரம்’‘சம்மனசுக்காடு’Francis kirupa

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x