Last Updated : 05 Feb, 2016 09:55 AM

 

Published : 05 Feb 2016 09:55 AM
Last Updated : 05 Feb 2016 09:55 AM

மவுனத்தின் புன்னகை 6: ரயில்!

இன்று சிறுவர்களுக்கு ரயில் வண்டி கள் வியப்பைத் தருவதில்லை. ரயில் நிலையங்கள் விசேஷக் கட்டிடங்களாகத் தெரிவதில்லை. மெட்ரோ ரயில் ஓராண்டு முன் சென் னைக்கு வந்தபோது மத்திய வயதினர், வயதானவர்கள்தான் அதிகம் பார்க்கப் போனார்கள். பயணமும் செய்தார்கள். ஆனால் எனக்குச் சாதாரண ரயிலே ஒரு கணம் சிந்தனையை நிறுத்திவிடுகிறது.

ரயில்கள் முதன்முதலாக இங்கிலாந் தில் ஓடத் தொடங்கியபோது சில கவிஞர் கள் அது இங்கிலாந்தின் அழகிய இயற்கைக் காட்சிகளை அழித்துவிடும் என்று நம்பினார்கள். சிலர் அவை அழகூட்டும் என்று கூறினார்கள். இன்று வேர்ட்ஸ்வொர்த்தும் ஷெல்லியும் இல்லை. அவர்கள் பெரிய பெரிய போயிங் விமானங்களையும், விமான நிலையங்களையும் பார்த்தால் என்ன சொல்வார்கள்?

ரயில்களைப் பற்றி நம்ம ஊர் கவிஞர் கள் அதிகம் கவலைப்படவில்லை என்றே தோன்றுகிறது. தாகூர் எதை எதைப் பற்றியோ எழுதினார். ரயில்பற்றி ஒரு வரி எழுதினதாகத் தெரியவில்லை. ஆனால், தமிழ் உரைநடையாசிரியர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள்.

மௌனியின் ‘சாவில் பிறந்த சிருஷ்டி’ முழுவதும் ஒரு ரயில் பயணத்தில் நடந்துவிடுகிறது. இதுபோலவே கு.ப.ரா.வின் ‘விடியுமா’ சிறுகதையும். அழகிரிசாமி தன் ரயில் கதைக்கு அவரே ஒரு சிறு படம் வரைந்திருப்பார்.

20 ஆண்டுகளுக்கு முன்புகூட சென்னை எழும்பூர் நிலையம் சின்ன ரயில் நிலையம் என்றும் சென்ட்ரல் நிலையம் பெரிய ரயில் நிலையம் என்று அறியப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் சென்ட்ரல் நிலையம் எம்.எஸ்.எம். (மெட்ராஸ் அண்ட் சவுத் மராட்டா) என்ற நிறுவனத்தின் அதிகாரத்தில் இருந்தது. எழும்பூர், எஸ்.ஐ.ஆர். என்ற நிறுவனத்தின் அதிகாரத்தில் இருந்தது. இன்று அறிய ஆச்சரியமாக இருக்கும். இவை இங்கிலாந்தில் இருந்த ரயில்வே போர்டுகள் என்ற அமைப்பின் அதி காரத்துக்குள் இருந்தன. எம்.எஸ்.எம் இந்தியன் ரயில்வே சென்ட்ரல் நிலையத்தில் இருந்து பம்பாய், டெல்லி, கல்கத்தா செல்ல வண்டிகள் விட்டது.

எஸ்.ஐ.ஆர் மூலம் எழும்பூர் நிலை யத்தில் இருந்து இயங்கிய மூன்று முக்கிய ரயில்கள் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், போட் மெயில், செங்கோட்டை பாஸஞ் சர். சிலர் செங்கோட்டையைச் சேர்க்கக் கூடாது, மதுரை ஃபாஸ்ட் பாஸஞ்சரைத் தான் மூன்றாவது வண்டியாகச் சொல்ல வேண்டும் என்பார்கள். இந்த வண்டி யைப் பற்றிச் சில தகவல்கள். இது சென்னை எழும்பூரில் இரவு கிளம்பி மறுநாள் காலை விழுப்புரம் அடையும். அன்று மாலை திருச்சினாப்பள்ளி போகும். அங்கிருந்து கிளம்பி மறுநாள் காலை மதுரை அடையும். இதற்கு ஏன் ஃபாஸ்ட் பாஸஞ்சர் என்று பெயர் வைத் தார்கள்? சிலர் அதை, ஃபாஸ்ட் அல்ல, பார்சல் பாஸஞ்சர் என்று திருத்துவார்கள்.முன்பு கால அட்டவணை இரு ரயில் நிலையங்களுக்கும் தனித்தனியாக இருக்கும். நான் பயணம் மேற்கொள் கிறேனோ இல்லையோ, புதுக் கால அட்ட வணை வெளிவந்தவுடன் வாங்கி வந்து விடுவேன். பாதிக்கு மேல் விளம்பரங் கள். தமிழகத்தில் இவ்வளவு லாட்ஜு கள் உள்ளனவா என்று ஆச்சரியமாக இருக்கும். உண்மையில் அந்த விளம் பரங்கள்தான் கால அட்டவணை வெளியீட்டை நான்கணா, எட்டணாவுக் குள் கிடைக்க உதவின. இன்று கால அட்டவணை வெளியிடுவதை ரயில்வே நிர்வாகம் நிறுத்திவிட்டது என்று நினைக்கிறேன். எதை எடுத்தாலும் நெட்டில் பார்த்துக்கொள்ளுங்கள் என் கிறார்கள். நெட் அவ்வளவு சர்வ சாதாரணமாக ஆகிவிட்டதா?

ஒவ்வொரு ரயில் வரவு - செலவுத் தாக்கல் நடக்கும்போது அநேகமாக எல்லா மாநிலங்களும் தங்களுக்குப் புது ரயில்கள் விடவில்லை என்று முணுமுணுப்பார்கள். எனக்கென்னவோ எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்விட்டதோ என்று தோன்றுகிறது. நான் நினைத்துப் பார்த்ததே இல்லை - இன்று சென்னை சென்ட்ரல் நிலை யத்தில் ஒரு ரயிலில் ஏறி நேராகக் காசி போய்விடலாம். என் பெற்றோர் ஒருமுறை செகந்திராபாத்தில் இருந்து திரிவேணி - காசி - கயா சென்றார்கள். போகும்போது நான்கு ரயில்கள் மாற வேண்டியிருந்தது. ஒரு நிலையத்தில் காத்திருக்கும்போது அவர்களின் பணம் திருட்டுப் போய்விட்டது. இவ்வளவு துன்பங்கள் அனுபவித்து காசி யாத் திரை சென்ற பயன்தானோ என்று எண் ணும்படி, இருவருக்கும் அற்பாயுளில் மரணம்!

தமிழ்நாட்டில் ரயில்கள் ஓடினாலும் இன்றும் பல இடங்களைப் பேருந்து மூலம்தான் அடைய முடிகிறது. என் அம்மா பிறந்து வளர்ந்த ஊர் வத்தல குண்டு. அங்கு எளிதாகப் போக இன்றும் பேருந்தில்தான் முடிகிறது. டீசல் இன்ஜின் கள் வரும் வரை ஒரு ரயிலில் எட்டு அல்லது ஒன்பது பெட்டிகள்தான் இருக் கும். முதல் வகுப்புக்கு ஒரு பெட்டி. சரக்குக்கு ஒரு பெட்டி. கார்டுக்கு ஒரு பெட்டி. மீதம் இருப்பதில் ஒன்று இரண்டாம் வகுப்பு. ரயில் நிர்வாகத்துக்கு அதிக வருவாய் கொண்டுதரும் மூன்றாம் வகுப்புக்கு இரு பெட்டிகள். பல இன்னல்களை அனுபவித்து என் தாயார் கொடைக்கானல் ரோடு என்ற சிறு ரயில் நிலையத்தில் இறங்கி, வத்தல குண்டுக்கு 60 மைல்கள் பேருந்தில் செல்லவேண்டும். நினைப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் சிந்து கங்கை சம வெளியில் குறுக்கும் நெடுக்குமாக ரயில் பயணத்தைச் சாத்தியமாக்கினார்கள். அங்குள்ள மக்கள் மீதான தனி அன்பி னால் அல்ல; துருப்புகளை எளிதில் விரைவாகக் கொண்டு செல்ல முடியும் என்ற காரணத்தால். முதல் சுதந்திரப் போர் என்று நம் வரலாற்று நூல்களில் உள்ள 1857 - 58 புரட்சி தொண்ணூறு சதவீதம் அந்தப் பிரதேசத்தில்தான் நிகழ்ந்தது. இன்றும் முழு இந்திய வரைபடத்தைப் பார்த்தால் அப்பிரதேசத்தில்தான் ரயில் பாதையைக் குறிக்கும் கோடுகள் ஏராளமாக இருக்கும்.

இன்று ரயில் பயணத்தை அதிக சிரமம் இல்லாததாக மாற்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30 வருடத்துப் பழைய ரயில் அட்டவணையைப் பார்த் தால் ஒரு சில நிறுத்தங்களில்தான் ஆங்கில டபிள்யூ இருக்கும். அது தண் ணீருக்கு அடையாளம். ரயில் இன்ஜின் சரியாக ஒரு தடிமனான தூண் குழாய டியில் நிற்கும். ரயில் நிலையத்தில் எங்கோ ஓரிடத்தில் பயணிகளுக்குத் தண்ணீர்க் குழாய் இருக்கும். அங்குதான் பயணிகள் அடித்துப் பிடித் துக்கொண்டு தண்ணீர் பிடிக்க வேண் டும். அட்டவணையிலேயே சில ஊர்கள் பின்னால் ஆர் என்ற ஆங்கில எழுத்து இருக்கும். அங்கு உணவு கிடைக்கும் என்று அர்த்தம். அன்றும் சில ரயில் நிலையங்கள் நல்ல உணவுக்குப் பெயர் போனவை. சூளூர்பேட்டை ரயில் நிலைய காபி மிகவும் நன்றாக இருக்கும். பெங் களூரு ரயில் நிலையத்தில் சாப்பாடு மிகவும் திருப்திகரமாக இருக்கும். தஞ்சாவூர் நிலையத்தை க.நா.சு ‘வாழ்ந்தவர் கெட்டால்’ என்ற நாவலுக் குப் பயன்படுத்தியிருப்பார்.

ரயில் பற்றி எழுத சிலருக்கு நிறைய இருக்கும். பலருக்கு அது ஒரு மின்விளக்கு சுவிட்ச் போல மிகச் சாதாரணமான விஷயமாக இருக்கும்.

- புன்னகை படரும்…

ஓவியங்கள்: மனோகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x