Published : 04 Sep 2021 05:51 AM
Last Updated : 04 Sep 2021 05:51 AM

பத்மநாப ஐயர்-80: புத்தகங்களை ஆராதிக்கும் மாமனிதர்

என் வாழ்வில் நான் சந்திக்க நேர்ந்த மிக அபூர்வமான மனிதர் பத்மநாப ஐயர். புத்தகங்கள் மீது இத்தகைய பிரேமை மிகுந்த ஒருவரை நான் எங்குமே சந்தித்ததில்லை.

மாத்தளையில் ஓர் ஆசிரியராக, யாழ்ப்பாணத்தில் கச்சேரியில் வேலைசெய்யும் ஒருவராக, நல்லூர் சங்கிலியன் வீதியில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்தவராக, ஒரு சைக்கிள் வைத்திருந்தவராக, மூன்று பெண் மக்களின் தந்தையாக பத்மநாப ஐயர் வெளித் தோற்றத்தில் நமக்குத் தெரிந்தாலும், இந்த சடத் தோற்றத்துக்கு அப்பால், கணமும் பொழுதும் புத்தகங்களே வாழ்வாய், ஜீவனாய், ஜீவனின் நாதமாய்த் திகழும் மனிதர்தான் அவர்.

புத்தகங்கள் மீது அவர் கொண்டுள்ள அபாரமான காதலைக் காலமும் வயதும் உடல் அவஸ்தைகளும் பண நெருக்கடிகளும் வசைகளும் பழிகளும் இயலாமைகளும் புறக்கணிப்புகளும் பெருங் கடன்களும் தேசங்களின் எல்லைகளும் தொழில்களும் குடும்பப் பொறுப்புகளும் எதுவுமே தடைப்படுத்தியது கிடையாது. புத்தகங்கள் அவருக்குத் தீராத கவர்ச்சி தரும் மாயமோகினிகள்; சேகரித்துக் குவித்து வைத்துக்கொள்ளத் துடிக்கும் வைரத் துண்டங்கள்; நுட்பமாகச் செதுக்கப்பட்ட கலைப் படைப்புகள்; ஸ்பரிசித்து மகிழ எண்ணும் பண்டங்கள்; பிறருக்கு வழங்கி மகிழ விழையும் விருந்துணவு; வியக்கவைக்கும் மந்திரக்கோல்; சரித்திரத்தின் பதிவு; அடுத்த தலைமுறையினருக்குக் கையளிக்கவிருக்கும் முத்துசம்; அவரது வங்கிக்கணக்கின் பற்றுப் பக்கம்.

பதுளை என்ற சிறுநகரில், 1965-ல் சென்னையிலிருந்து வாசகர் வட்ட வெளியீடாக ராஜாஜியின் ‘ஸோக்ரதர் ஆத்ம சிந்தனை’ என்ற அழகிய பதிப்பில் வெளியான நூலை வாசிக்கக் கிடைத்த தருணங்களின் பின்னால், மாத்தளையில் பத்மநாப ஐயர் என்ற புத்தகப் பிரேமியின் மாயக்கரங்கள் நின்றிருப்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால், பத்மநாப ஐயருடன் நான் கொண்டிருக்கும் தொடர்பு 50 ஆண்டுகளைக் கடந்தது.

யாழ்ப்பாணத்தில் வைகறை வெளியீட்டின் மூலம் தெளிவத்தை ஜோசப்பின் ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுப்பினை நான் வெளியிட்டதன் பின்னரே, ஐயர் எனக்கு நேரடியாக அறிமுகமானார். அதற்குப் பிந்தைய ஐயருடனான உறவு பல அடுக்குகளையும் நுண்ணறைகளையும் கொண்ட விரிந்த உலகமாகியது. ஆத்மார்த்த நண்பராக- ஆலோசகராக- நல்ல துணையாக- என் வாழ்வின் எல்லாத் தளங்களிலும் கஷ்டநஷ்டங்களிலும் ஊடாடி ஒன்றியவர் அவர். வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள்ளும், கண்காணிப்புக் கெடுபிடிகளுக்கும் தேவையான தகவல்களை மட்டுமல்ல, புத்தகங்கள், சஞ்சிகைகளையும் கிரமமாகக் கொண்டுவந்து சேர்த்தவர் ஐயர். எங்கு எந்த நூலைக் கண்டாலும், அந்த நூல் யாருக்கு உகந்தது என்று பார்த்து, அவருக்குத் தனது சொந்தச் செலவில் புத்தகத்தை வாங்கிச் சேர்ப்பிப்பதில் இன்பம் காண்பவர் அவர்.

ஈழத்து இலக்கியங்களைச் சேகரிப்பதிலும் தொகுப்பதிலும் நூலாகக் கொண்டுவருவதிலும் என்றும் தீவிரமாக இயங்கிவந்திருக்கிறார். ஈழத்து ஆக்கங்களைத் தமிழகத்தில் வெளியிடுவதற்கு இந்த மனிதர் காணாத, சந்திக்காத பதிப்பாளர்கள் இல்லை எனலாம். இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும்போது, பெட்டிபெட்டியாகப் புத்தகங்களைக் கொண்டுவந்து இறக்கும் ஐயர், தனது மனைவி, பிள்ளைகளுக்கு ஒருபோதும் துணிமணிகள் வாங்கிவந்ததை நான் பார்த்ததில்லை.

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட பின், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்குடா நாடெங்கும் ஒரே நாளில் சேகரித்த பணத்திலிருந்து, தமிழகத்திலிருந்து நூல்களை வாங்கி வருவதற்கு பத்மநாப ஐயரை நான் பரிந்துரை செய்தபோது, மாணவ அமைப்புகள் அதனை ஏற்றுக்கொண்டன. பெருந்தொகைப் புத்தகங்களைத் தேடி வாங்கிக் கப்பலின் மூலம் தலைமன்னாரிலிருந்து புத்தகப் பொதிகளைச் சுமந்து, யாழ்ப்பாணம் கொண்டுவந்து சேர்த்தவர் பத்மநாப ஐயர்.

ஒரு யுத்தச் சூழலில், இயக்கப் படகுகளை இலங்கைக் கடற்படையினர் கண்ணுக்குள் விளக்கெண்ணெய் விட்டு, ரோந்து பார்த்துக்கொண்டிருந்த நிலையில், ஒரு வரலாற்று ஆய்வேட்டைத் தமிழகத்தில் அச்சிடுவதற்காக, உயிராபத்தையும் பொருட்படுத்தாமல், படகில் சென்று தமிழ்நாட்டுக் கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார். நூல் வெளியீடுகள் பற்றிய ஐயரின் கனவு மிக விசாலமானது. இலக்கியம், ஓவியம், அரசியல் என விரிந்தது. சில நூல்களின் ஆக்கத்துக்காக லட்சக்கணக்கில் காசைக் கொட்டியிருக்கிறார். டெல்லி புத்தகக்காட்சியில் யாரோ ஒருவர் தனது நூல் வெளியீட்டை அதன் வடிவமைப்புக்காக ஒரு பிரதியை வாங்கினார் என்ற தகவல் மட்டும் அவருக்குப் போதுமானது.

நூலின் பதிப்பில் ஐயர் காட்டும் அக்கறை மிகமிக நுட்பமானது. கையெழுத்துப் படிகளை நுணுக்கமாகப் பார்த்து, பிழைகளைத் திருத்தி, சொற்களின் பிரயோகம் அனைத்து இடங்களிலும் சீராக அமைந்திருக்கின்றனவா என்று பார்ப்பதில் ஐயர் சமர்த்தர். பெங்குயின் போன்ற பெரும் பதிப்பகங்கள் வெளியிட்ட ஈழத் தமிழ் இலக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்புகளில் எண்ணற்ற பதிப்புப் பிழைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை ஒழுங்குணரக் கொண்டுவந்ததில் ஐயரின் பங்கு கணிசமானது. ஐயரின் துணை இல்லாமல் ஈழத்து இலக்கியம் குறித்த பல ஆங்கிலத் தொகுப்புகள் வந்திருக்கவே முடியாது.

நூல்கள் மீது கொண்டிருக்கும் அவரது பேரார்வத்தின் விஸ்தரிப்பாகவே நூலகம் என்ற எண்ணிம ஆவண வலைதளத்தில் ஐயரின் ஈடுபாட்டை நோக்க வேண்டும். நூலகம் இன்று ஆற்றலுடன் செயற்பட்டுவருவதற்கு ஐயரின் அர்ப்பணிப்பும் பேருழைப்புமே காரணம். நூலகத்தின் நிதிக்காக அவர் நண்பர்கள், ஆலயங்கள், சமூக அமைப்புகள் என்று அனைவரையும் அணுகி, யாசித்து நிற்பதை நான் பார்த்திருக்கிறேன்.

தமிழியல் என்ற வெளியீட்டை நிறுவி காலச்சுவடு உள்ளிட்ட பதிப்பகங்களுடன் சேர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை ஐயர் வெளியிட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் க்ரியா, நர்மதா, அன்னம் போன்ற பதிப்பகங்கள் மூலமும் ஈழத் தமிழ்ப் படைப்புகள் வெளிவருவதில் பத்மநாப ஐயர் பங்காற்றியிருக்கிறார். சிறந்த இசை ரசிகரான பத்மநாப ஐயர், இசையுலகின் கொடுமுடியான தவில் மேதை தட்சிணாமூர்த்தி, மணக்கால் ரங்கராஜன் போன்றோர் பற்றிய ஆவணப் படங்களை அம்சன்குமார் மூலம் தயாரித்து வெளியிட்ட பணி மகத்தானது. பத்மநாப ஐயரின் 75-வது வயதில் வெளியிடப்பட்ட ‘நூலை ஆராதித்தல்’ என்ற நூலில் ஐயரின் நண்பர்களும் படைப்பாளிகளும் ஐயருடனான நட்பையும் அவரது பங்களிப்புகளையும் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.

நண்பர்களின் துயர்களைக் களைவதற்கு என்றும் முன்நிற்பவர். ஈரம் கொண்ட நெஞ்சம் அவருடையது. எண்பது வயதைக் கடந்திருக்கும் பத்மநாப ஐயர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து ஈழ இலக்கிய உலகுக்குச் சேவையாற்ற வேண்டும்.

- மு.நித்தியானந்தன். ‘கூலித்தமிழ்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு: nithimeena@hotmail.com

***

பத்மநாப ஐயரைப் பற்றிய ‘நூலை ஆராதித்தல்’ புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகத்திடம் பெறலாம். இந்தப் புத்தகத்தை ‘நூலகம்’ இணையதளத்தின் இந்த இணைப்பில் இலவசமாகத் தரவிறக்கியும் படிக்கலாம்: https://bit.ly/3yLItjj

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x