Last Updated : 04 Sep, 2021 05:48 AM

 

Published : 04 Sep 2021 05:48 AM
Last Updated : 04 Sep 2021 05:48 AM

நூல்நோக்கு: வருமானத்தை வளர்ப்பதற்கான வழிகாட்டல்கள்

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள். தொழிலில் முன்னேறுவதற்கான பாதைகள் தடைபட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் பல துறைகளில் நீண்ட அனுபவம் கொண்ட இராம்குமார் சிங்காரம் எழுதியிருக்கும் ‘நீங்க இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ என்னும் நூல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொருவரும் வருமானத்தை உயர்த்தி வசதியாக வாழ்வதற்கான 25 உத்திகளைத் தரும் 25 அத்தியாயங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கைந்து பக்கங்களில் சுருக்கமாக எளிய மொழியில் நடைமுறை உதாரணங்களுடன் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் தன் வாசிப்பு அறிவு, அனுபவ அறிவு ஆகியவற்றோடு பல கோடிப் பிரதிகள் விற்பனை ஆன ‘தி சீக்ரெட்’ என்னும் பொருளாதார முன்னேற்ற ஆலோசனை நூலை எழுதிய ரோண்டா பைர்ன், உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய நாவலாசிரியர் ஹாருகி முரகாமி தொடங்கி இளம் வயதில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகிப் பல வெற்றிகளைக் குவித்துவரும் விராட் கோலிவரை பல பெரும் சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளை முன்வைத்து பொருளாதார வெற்றிக்கான சூத்திரங்களை விளக்குகிறார். அதோடு, ஒவ்வொரு அத்தியாயத்திலும் தனிப் பெட்டிகளில் வழங்கப்படும் சுருக்கமான ஆலோசனைகள் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளவை. ஒரு இலக்குக்காக இன்னொரு இலக்கை அழிக்கக் கூடாது என்பது போன்ற உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய பல அறிவுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. நகைத் திட்டங்கள், ஏலச் சீட்டுகள் முதலீடு செய்யும்போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்த பயனுள்ள தகவல்களும் இடம்பெற்றுள்ளன. உபதொழில் வாய்ப்புகளுக்கான பரிந்துரைகள், அதற்கு எப்படி நேரத்தை ஒதுக்குவது போன்றவற்றுக்கான ஆலோசனைகளும் இருக்கின்றன.

நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?
இராம்குமார் சிங்காரம்
தாய் வெளியீடு
துர்காபாய் தேஷ்முக் சாலை, சென்னை-28
தொடர்புக்கு : 7904718349
விலை:ரூ.120

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x