

இந்த ஆண்டுக்கான ‘விஜயா வாசகர் வட்ட கி.ராஜநாராயணன் விருது’ எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படுகிறது.
ரூ. 5 லட்சம் விருதுத் தொகை. அநேகமாகத் தமிழில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதுத் தொகை இதுவாகத்தான் இருக்கும். கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. கிட்டத்தட்ட நூறு சிறுகதைகளும், நான்கு நாவல்களையும் எழுதியிருப்பதோடு, தமிழ் இலக்கியச் சூழலில் தனது மதிப்பைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கும் ‘கல்குதிரை’ எனும் சிற்றிதழை முப்பதாண்டுகளாகச் சீரற்ற இடைவெளிகளில் நடத்திவருகிறார். கல்மண்டபங்களிலிருந்து லோத்தல் கடலடி வரை, குன்றங்களிலிருந்து குகைகள் வரை இந்தியாவின் நாற்திசைகளிலும் பயணித்திருக்கிறார். ஒருமுறை லண்டன் பயணித்திருக்கிறார். ஒவ்வொரு நாவலுக்காகவும் ஓய்வில்லாது மரநிழல் படிந்த சாலைகளிலும், கடுமையான தெற்கத்தி வெயிலில் பாளம்பாளமாய் உடல் வெடித்திருக்கும் கருப்பு நிற நிலங்களிலும் பயணிப்பவர். முழு நேர எழுத்தாளர்களே அருகிப்போயிருக்கும் தமிழ் இலக்கியச் சூழலில், நீண்ட தொடர்ச்சியில் மிச்சமிருப்பவர். கூட்டுறவு வங்கி வேலையை எழுத்துக்காகவே உதறியவர். வெயில் உலைபோல் இருக்கும் கோவில்பட்டி நகரில் இருப்புப் பாதையின் அருகே உள்ள வீட்டில் வசிக்கிறார். நாடக ஆசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் வழிப் பேரன், நேருவின் நண்பரும், பர்மாவில் தினகரன் நாளிதழைத் தொடங்கியவருமான தினகரனின் பேரனும் ஆவார். இருவரைப் பற்றியும் ‘த’ நாவலில் எழுதியுள்ளார்.
நவீனத் தமிழ் இலக்கியம் ஐரோப்பிய பாணியிலிருந்து விலகி வர, அதற்குச் சுதேச நிறங்களை அளித்தவர்களில் முக்கியமானவர் கி.ராஜநாராயணன். மக்களின் பேச்சு மொழியைப் பேச்சாகவே அச்சில் ஏற்றிய படைப்புகளை எழுதியவர். எழுதுதல் என்பது மறைந்து சொல்லுதல் இலக்கியத்தில் நிகழ்ந்தது. கி.ரா.வை கதைசொல்லி என்றே அழைத்தனர். அவரைத் தொடர்ந்து மற்றொரு மாற்றம், கதை என்பது மறைந்து புனைவு உருவானது. கோணங்கி கதை சொல்லத் தொடங்கிப் புனைவுக்குள் குடிபுகுந்தவர்.
முதல் பகுதி கோணங்கி நிலத்தில் காலூன்றி நின்று கதை சொல்லத் தொடங்கியவர். இரண்டாம் பகுதியில் மொழியைச் சிறகுகளாக்கி தூர தூர நிலங்களுக்கும் பறந்தவர். ‘மதினிமார்கள் கதை’, ‘கொல்லனின் ஆறு பெண் மக்கள்’ என இரு சிறுகதைத் தொகுப்புகளை வாசகர்கள் எளிதில் வாசிக்க முடியும். ‘உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை’ தொகுப்பிலிருந்து தொடங்கி சமீபத்திய நாவலான ‘நீர்வளரி’ வரையிலான படைப்புகளை அவ்வளவு எளிதாக வாசிக்க முடியாது. அவை கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தாலும் கதைகள் சொல்வதில்லை. மாறாக இடங்கள், பொருட்கள், உயிரிகளின் இருப்பைக் குறிப்பிட்ட கால, சூழலில் விவரிப்பவை. வழமையான வாசகர்கள் இப்படைப்புகளை வாசிக்கத் துணிய மாட்டார்கள். எனினும் தமிழ் மொழியின் வீச்சை விரிவாக்கும் படைப்புகள் இவை. இவர் தொடர் உழைப்பினால் உருவாக்கிக்கொண்ட மொழி தற்காலத்தைச் சேர்ந்ததல்ல. அதே சமயம், கற்காலத்தைச் சேர்ந்ததும் அல்ல. மொழியில் சகல காலங்களின் அனுபவங்கள், நிகழ்வுகள், நம்பிக்கைகள், உறவுகள் படிந்திருக்கின்றன. அவை ஒருவகையில் கட்புலனாகாதபோதும் இறந்தவை அல்ல. மறைந்திருப்பவை. எடுத்துக்காட்டாக, வளரி எனும் எறி ஆயுதம் பழங்காலத்தைச் சேர்ந்தது, பல்வேறு குடிகள் வேட்டைக்காகவும் போரிலும் பயன்படுத்தியிருக்கின்றன. வளரியை கோணங்கி தனது படைப்பின் பேசுபொருளாகப் பல்வேறு நிலங்களில் வாழும் குடிகளை இணைத்துப் பேசுவதற்காகப் பயன்படுத்துகிறார். உணர்நிலைகளாக, தன்மையாக, சாராம்சமாக மறைந்திருப்பவற்றை கோணங்கி எழுதுகிறார்.
மனித உறவுகளை, மனித மனத்தைக் கதையாகச் சொல்வதைக் கடந்து, மொழி பற்றிய குன்றாத கவனத்தோடு எழுதப்படுபவை புனைவுகள். தான் சொல்ல வருபவற்றோடு பிணைந்திருக்கும் வரலாறு, தொன்மம், நம்பிக்கை இவற்றையும் சேர்த்துப் படைப்பாக்குபவை. புனைவுகள் வாசிக்கும் வாசகர்களுக்கு இரு வாய்ப்புகள் உண்டு. ஒன்று, கதையில் மிதத்தல். மற்றொன்று, மொழியில் மிதத்தல். பிற்கால கோணங்கியின் புனைவுகள் வாசிப்பவர்களை மொழியில் மிதக்கச் செய்பவை. சொல்லப்படும்போதே படைப்புக்கான தர்க்கத்தை உருவாக்கும் படைப்புகள் அல்ல கோணங்கியுடையவை. மாறாக, தர்க்கத்தைத் திரவ நிலையில் வைத்து, சொல்லப்படுபவற்றின் தன்மையைக் கலங்கலாக முன்வைப்பவை. கதையைத் தேடும் வாசகர், கண்கட்டு வித்தைக்காரனிடம் ஏமாறுவதைப் போல கோணங்கியிடம் ஏமாறுவார். அவரது ஏமாற்றம், அழகாகத் தயாரிக்கப்படும் கோணங்கியின் படைப்புகள் வாசிக்கப்படாமலே புத்தக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்படும் ஆபத்தாக மாறுகிறது. கோணங்கி இந்த ஆபத்தை அறியாதவரல்ல, ஆயினும் தனது சொல்முறையில் நீங்காப் பற்றுடையவராக இருக்கிறார். வாசகர்கள் வாசிக்காமல் போகலாமே ஒழிய, ‘இவ்வாறு தா’ எனக் கேட்க முடியாது.
லத்தீன் அமெரிக்க இலக்கிய அலை தமிழ் நிலத்தையும் மோதியபோது, எண்பதுகளில் அதன் உள்ளோட்டங்களைக் கச்சிதமாக அறிந்து, தங்கள் படைப்புகளின் பயணத் திசையை மாற்றிக்கொண்டவர்களில் கோணங்கி முதன்மையானவர். தமிழ் நிலத்தின் சுதேசிக் கப்பலை லத்தீன் அமெரிக்க நிறங்களில் வரைந்தவர். காப்ரியல் கார்சியா மார்க்கேஸ் சிறப்பிதழாக வந்த ‘கல்குதிரை’ அந்நாட்களில் பெரிதும் வரவேற்கப்பட்டது, எனினும் அன்றிலிருந்து எதிர்மறை விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. இவரது ஒரு புனைவை சுஜாதா அறிவியல் புனைவு என அழைக்கலாம் என்றார். கோணங்கியின் படைப்புகளில் வரும் படிமங்கள் அறிவியல் மொழியின் துல்லியத்துக்கு அருகே செல்வதற்குத் தேவையான எரிபொருளைக் கொண்டவை.
சுருங்கக் கூறின், ஓவியம் ஒன்றைச் சொற்களாக்க முனைந்தால் அவையே கோணங்கியின் படைப்புகள். முதல் 75 கதைகள் ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ எனும் தொகுப்பாக வந்துள்ளது. வாசகர்கள் அதிலிருந்து தொடங்கலாம். கோணங்கியின் கதைகளில் அல்லது மொழியில் ஒன்றுவதற்கு வாசகருக்கு வாய்ப்பு கிடைக்கும். கதையோ அல்லது புனைவோ, கோணங்கி முதற்கண் ஒரு வசியக்காரர். எழுத்தாளரின் தலையாய பணி வசியக்காரராக இருப்பதுவே என்றார் நபக்கோவ். அவ்வகையில், தமிழின் தனிச் சிறப்பான வசியக்காரரான கோணங்கியிடம் நாம் ஏமாற்றம் அடைந்தாலும் வெறுங்கையோடு வீடு திரும்ப மாட்டோம்.
- பாலசுப்ரமணியன் பொன்ராஜ், ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: tweet2bala@gmail.com
****
கோணங்கியின் நூல்கள்: சலூன் நாற்காலியில் சுழன்றபடி (சிறுகதைகள்), பாழி (நாவல்), பிதிரா (நாவல்), த (நாவல்), நீர்வளரி (நாவல்) இந்த 5 புத்தகங்களும் அடையாளம் பதிப்பகம் வெளியீடுகள். தொடர்புக்கு: 04332 273444
வெள்ளரிப்பெண் (சிறுகதைகள்), புலம் வெளியீடு, தொடர்புக்கு: 98406 03499
காவேரியின் பூர்வ காதை (ஆய்வு நூல்), டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு, தொடர்புக்கு: 8754507070