

மனிதர்களுக்கு இடையே பலவிதமான பாகுபாடுகள் உள்ளன. இந்தியாவில் அதன் வடிவம் சாதிகளாய் இருக்கிறது. அது மனிதர்களுக்குள்ளே ஏற்படுத்தும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும் என்று விரும்புகிற உணர்வுகளின் தொகுப்பே இந்த நூல்.
நவீனத்துவம் வேரூன்ற ஆரம்பித்த காலகட்டத்தில் சாதியப் பாகுபாடுகள் சற்றே பலவீனப்பட ஆரம்பித்தது உண்மை தான். இந்நிலையில், நவீனத்துவம் ஏற்படுத்திய அசைவை மீறியும் சாதி நம் சமூகத்தின் மீது இன்னும் அழுத்தமான ஆதிக்கத்தைக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் சாதியின் தோற்றம், அதன் செயல்பாடு, பற்றிய பல்வேறு விவரங்களைத் தொகுத்து ஒரு விவாதத்தை நடத்துகிறார் உதயசங்கர்.
சமூகத்தின் பழக்கவழக்கங்களில் உள்ள பல்வேறு சாதிய - பாலினப் பாகுபாடுகளை விரிவாக அடையாளம் காட்டுகிறது நூல். நமது சொந்த உடலின் இடது,வலது பாகங்களில் நாம் காட்டுகிற பாகுபாட்டின் வேர்களையும் அவர் விளக்குவது சுவாரஸ்யம்.
இந்திய வம்சாவளியினர் பல்வேறு நாடுகளில் இன்று குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். அங்கும் அவர்கள் சாதியத்தைக் கொண்டுபோகிறார்கள். அந்தந்த நாடுகளின் சமத்துவச் சிந்தனைக்கான சவாலாகவும் சாதியம் இன்று உருவாகி ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சாதியமும் உலகமயமாகும் அபாயம் ஓர் விசித்திரச் சூழலே. மனிதர்கள் அனைவருக்கும் கண்ணியமான சமத்துவ வாழ்க்கையை மறுக்கும் கொடுமையான அமைப்புதான் சாதியம். அதை அடித்து நொறுக்க வேண்டும் என்று விரும்புவோருக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் தூண்டுவது இந்த நூலின் சிறப்பு.