Published : 21 Feb 2016 12:39 PM
Last Updated : 21 Feb 2016 12:39 PM

அஞ்சலி: உம்பர்டோ ஈக்கோ - ரோஜாவின் பெயர்

லகப் புகழ் பெற்ற இத்தாலிய நாவலாசிரியரும் குறியியியல் (semiotics) அறிஞருமான உம்பர்டோ ஈக்கோ 2016 பிப்ரவரி 19 அன்று மிலான் நகரில் மரணமடைந்தார். 1980களின் மத்தியிலிருந்து தமிழின் இலக்கியச் சிறுபத்திரிகைகளிலும், கல்விப் புலத்திலும் அமைப்பியல், குறியியல் ஆகிய சிந்தனைத் துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதிகமும் விவாதிக்கப்பட்டு சிந்தனைத் துறை மாற்றங்களை விளைவித்துவந்தன. அதன் ஒரு பகுதியாக உம்பர்டோ ஈக்கோவின் சிந்தனைகளும் படைப்புலகமும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஈக்கோவின் புகழ்பெற்ற ‘ரோஜாவின் பெயர்’ (Name of the rose) நாவலைப் பற்றிய மிக விரிவான அறிமுகத்தைத் தமிழில் பிரேம்-ரமேஷ் 1990களின் மத்தியில் எழுதியிருக்கிறார்கள்.

‘ரோஜாவின் பெயர்’ நாவல் ஒரு துப்பறியும் கதை. பதினான்காம் நூற்றாண்டு இத்தாலிய கிறிஸ்தவ மடாலயம் ஒன்றில் மத குருமார்கள் மர்மமான முறையில் ஒவ்வொருவராக இறந்துபோகிறார்கள். மத குருமார்களின் சாவுகளுக்குக் காரணங்களையும் கொலைகாரனையும் கண்டுபிடிக்க ஃபிரான்ஸிஸ்கன் சபையைச் சார்ந்த வில்லியம் என்பவரும் அவருக்குத் துணையாக வரும் இளம் துறவியான அட்ஸோ என்பவரும் வருகிறார்கள். நாவல் அட்ஸோவின் பார்வையில் சொல்லப்படுகிறது. அட்ஸோவின் கைப்பிரதியைக் கண்டுபிடிக்கும் ஈக்கோ அது தொலைந்துபோனதையும், மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதையும், அதில் அவர் மாற்றங்களைத் திருத்தியதாகவும் சொல்கிறார். அட்ஸோ தன்னுடைய வயதான காலத்தில் வில்லியத்துடன் கழித்த இளமையை நினைவுகூரும் விதமாக நாவலின் கதையைச் சொல்கிறார்.

மடாலயக் கொலைகளை ஆராயும் வில்லியம் அவற்றைத் துப்பறிய அரிஸ்டாட்டிலின் தர்க்கம், தாமஸ் அக்வினாஸின் தத்துவம், கிறித்தவ இறையியல் தர்க்கங்கள் ஆகியவற்றையும், பல மாடி மடலாயத்தின் பகுதிகளில் கிடைக்கும் சாட்சியங்களையும் பயன்படுத்துகிறார். அதனால் நாவல், கதை சொல்வது என்பது மட்டுமாக இல்லாமல் தத்துவம், வரலாறு, வார்த்தை விளையாட்டுகள், பல்வேறு இலக்கியப் பிரதிகளின் நினைவுத் தூண்டல்கள் என்பனவாகவும் மாறுகிறது. நாவலின் வாசிப்பின்பம் இவ்வாறாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கதையிலோ கொலைகளுக்கான மர்மங்களை அவிழ்ப்பதில் தத்துவமும், மொழி விளையாட்டும் பயனற்றுப்போக, அட்ஸோ தற்செயலாகச் சொல்லும் வெவ்வேறு பேச்சுகளே வில்லியத்துக்குக் கொலைகளுக்குப் பின்னணியான மர்மங்களை அவிழ்க்க உதவுகின்றன. ரோஜா என்ற மலரும் ரோஜா என்ற பெயரும் எப்படித் தற்செயலாய், இடுகுறியாய் இணைந்திருக்கின்றனவோ அது போலவே மடாலயக் கொலைகளுக்குக்கான துப்புகள் அட்ஸோவின் தற்செயலான பேச்சுகளின் மூலமாகவே துலங்குகின்றன. பொருளுக்கும் வார்த்தைக்கும் உண்மைக்கும் உள்ள உறவை யாரே அறிவர்?

கொலைகளுக்குக் காரணம் யார்?

‘ரோமியோவும் ஜூலியட்டும்’ நாடகத்தில் ஷேக்ஸ்பியர் ரோஜாவை வேறு பெயரிட்டு அழைத்தாலும் அதன் மணம் வேறாகவா மாறிவிடும் என்ற புகழ்பெற்ற வசனத்தை எழுதவில்லையா என்ன? ‘ரோஜாவின் பெயர்’ அட்ஸோ என்ற கதை சொல்லி வளர்ந்து, உலக அனுபவம் பெற்று, ‘வயதுக்கு வருவ’தையும் சொல்கிற நாவல். இளம் துறவியான அட்ஸோ குடியானவ இளம் பெண் ஒருவருடன் உடலுறவு கொள்வது, கிறிஸ்தவ இறையியல் தர்க்கங்களில் நேரடியாகப் பங்கேற்றுத் தத்துவ அறிவைப் பெறுவது எனப் பல வகைகளிலும் அட்ஸோ ‘வயதுக்கு வருவது’ நாவலில் நடந்தேறுகிறது.

கடைசியில் மடாலயக் கொலைகளுக்குக் காரணம் மத குருவும் பார்வையிழந்த நூலகப் பாதுகாப்பாளருமான ஜோர்ஜ் போர்கோ என்பவர்தான். அர்ஜெண்டினாவின் புகழ்பெற்ற கவிஞரும் சிறுகதையாளருமான போர்ஹெஸின் பெயரை நினைவில் தூண்டுகிற பெயர் அது. துன்பியலுக்கான இலக்கணத்தை எழுதிய அரிஸ்டாட்டில் நகைச்சுவைக்கான இலக்கணத்தையும் எழுதியிருக்கிறார்; அந்தப் பனுவல் நமக்குக் கிடைக்காமலேயே போய்விட்டது என்றொரு கதை ஐரோப்பியத் தத்துவ வரலாற்றில் உண்டு. ஈக்கோ அந்தக் கதையைப் பயன்படுத்திக்கொள்கிறார். மடாலயத்தில் அரிஸ்டாட்டிலின் நகைச்சுவை இலக்கணத்துக்கான பனுவல் ஒரே ஒரு பிரதி எஞ்சியிருந்ததாகவும், அந்தப் பனுவல் எல்லோருக்கும் கிடைத்துவிட்டால், நகைச்சுவையாளர்களால் உலகம் நிரம்பிவிடும் என்றும் கடவுள், மத நம்பிக்கை அனைத்துமே நகைச்சுவையாய் மாறிவிடும் என்றும் ஜோர்ஜ் போர்கோ நம்புகிறார். அரிஸ்டாட்டிலின் நகைச்சுவை இலக்கணப் பனுவலை யார் யாரெல்லாம் தற்செயலாய் அறிய வருகிறார்களோ அவர்களையெல்லாம் கொன்று தள்ளுகிறார்.

நாவலில், தற்செயல்களின் தொகுதியாகக் கொலைகள் இருப்பதால் அதில் ஒரு ஒழுங்கையும் வில்லிய மால் கண்டுபிடிக்க முடியவில்லை. மனித வாழ்க்கையைப் போலவே நாவலும் தற்செயல்களின் தொகுதியாக இருக்கிறது. தற்செயல்களின் பின்புலமாக இவ்வாறாக இருக்கக்கூடிய நகைச்சுவையை நாம் உணர்வதில்லை. நாவலிலும் அரிஸ்டாட்டிலின் நகைச்சுவைக்கான இலக்கணப் பனுவல் தீயில் கருகி ஜோர்ஜ் போர்கோவுடன் அழிந்துவிடுகிறது. இந்நாவல் இதே பெயரில் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

பொய்யின் கோட்பாடு

அர்த்த உருவாக்கமும் தற்செயலாகவே வார்த்தைக்கும், பொருளுக்கும், உண்மைக்கும் இடையிலுள்ள இடுகுறி உறவுகளால் நிகழ்வதால் உமப்ர்ட்டோ ஈக்கோ குறியியலைப் பொய்யின் கோட்பாடு (A theory of lie) என்று அழைத்தார். ஆனால் அர்த்தங்கள் எல்லையற்றவை; அவை தொடர்ந்து இலக்கியப் பிரதிகளிலும், தத்துவப் பிரதிகளிலும் தள்ளிப்போடப்படுகின்றன என்ற தெரிதாவின் (Derrida) கோட்பாட்டை உம்பர்ட்டோ ஈக்கோ எதிர்த்தார். ஈக்கோவின் குறியியல், அர்த்தங்களின் நழுவுதல் எப்படி நடக்கிறது, அதன் எல்லைகள் எப்படித் தீர்மானமாகின்றன என்று விளக்குகிறது.

ஈக்கோவின் ‘Foucault’s pendulum’, ‘Island of the day before’ ஆகியனவும் புகழ்பெற்ற நாவல்களாகத் திகழ்ந்தாலும் அவை ‘Name of the rose’ அளவு செல்வாக்கை இலக்கிய, தத்துவ உலகில் செலுத்தவில்லை. ‘Foucault’s pendulum’ நாவலை சல்மான் ருஷ்டி நகைச்சுவையற்ற, பேச்சு மொழிக்கு அருகிலேயே வராத தனித்துவமற்ற படைப்பு என்று கடுமையாக விமர்சித்தார். படிப்பதற்கு அவ்வளவு எளிமையாக இல்லாத ஈக்கோவின் நாவல்கள் இவ்வளவு அதிகமாகப் புகழ்பெற்று அதிக விற்பனையாகும் நாவல்களாக இருப்பது அதிசயமே.

குறியியல் என்ற துறையின் மூலம், மேற்கத்தியக் கலாச்சாரத்தில் அழகும் அசிங்கமும் கலைப் படைப்புகளின் வழி எப்படி நிறுவப்பட்டுள்ளன என்பது குறித்து ஈக்கோ எழுதிய புத்தகங்கள் முக்கியமானவை. தவறான நம்பிக்கைகள் வரலாற்றை எப்படி நடத்திச் சென்றிருக்கின்றன என்பதை விளக்கும் அவருடைய கட்டுரைத் தொகுப்பு, “Serendipities: Language and Lunacy” அவசியம் வாசிக்கப்பட வேண்டியது; தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியது.

- எம்.டி.முத்துக்குமாரசாமி எழுத்தாளர், தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையத்தின் இயக்குநர், தொடர்புக்கு: mdmuthukumaraswamy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x