

கவிஞர் பிரம்மராஜனின்
மொழிபெயர்ப்புக் கவிதைகள் வழியாகத் தமிழ் நவீனக் கவிதைச் சூழலுக்கு முக்கியமான பங்களிப்பு செய்துவரும் கவிஞர் பிரம்மராஜனின் புதிய மொழிபெயர்ப்பு நூல் வெளியாகவிருக்கிறது. பாப்லோ நெருதாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை ‘கேள்விகளின் புத்தகம்’ என்ற தலைப்பில் சென்ற ஆண்டு கொண்டுவந்திருந்தார். உள்ளடக்கம், மொழியாக்கம், வடிவமைப்பு என அடர்த்தியும் நுட்பமும் கூடியிருந்த தொகுப்பாக அது இருந்தது. அந்த வரிசையில் இப்போது தமிழுக்கு வரவிருக்கிறார் மைக்கேல் ஒண்டாச்சி. கவிதைக்கு நிகராகப் புனைவெழுத்திலும் தனித்துவம் கொண்ட ஒண்டாச்சியின் கவிதைவெளியானது கனடாவாக இருந்தாலும் கீழைத்தேய நிலப்பரப்பின் சர்ரியல்தன்மையும் கொண்டதாகும். ‘சொற்கள்’ பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவரவிருக்கிறது. தொடர்புக்கு: 95666 51567
கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது
2021-க்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. 74 வயதாகும் விக்ரமாதித்யன் 40 ஆண்டுகளுக்கும் மேல் கவிதை எழுதிவருகிறார். மரபின் ஆன்மாவை விட்டுவிடாத நவீன கவிஞர் இவர். எளிமையான சொற்களும் சந்தமும் சேர்ந்து ஒருவித வசீகரத்தைத் தருபவை இவரது கவிதைகள். அது மட்டுமல்லாமல், சம காலக் கவிஞர்கள் பலரைப் பற்றியும் எழுதிவருபவர் விக்ரமாதித்யன். விஷ்ணுபுரம் விருது பெறும் விக்ரமாதித்யனுக்கு வாழ்த்துகள்!