Published : 28 Aug 2021 06:31 AM
Last Updated : 28 Aug 2021 06:31 AM

நினைவுகளினூடாக வரலாற்றை எழுதுதல்

கிராமத்துத் தெருக்களின் வழியே...
ந.முருகேசபாண்டியன்
டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 87545 07070

நினைவுகளை எழுதுதல் என்பதும் நவீன இலக்கிய வகைமைகளில் ஒன்றாக இன்று நிலைபெற்றிருக்கிறது. ந.முருகேசபாண்டியனின் நினைவுகளாக இந்நூலில் நாற்பத்தோரு கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. 1961 முதல் 1980 வரையிலான 20 ஆண்டுகளில் இச்சமூகத்தில் நிகழ்ந்த பண்பாட்டு வரலாறு இப்பிரதியில் பதிவாகியிருக்கிறது.

ந.முருகேசபாண்டியனின் கிராமமான சமயநல்லூர், அவரது நினைவின் மையமாக இருந்தாலும் தமிழகத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் இக்கட்டுரைகளின் உள்ளடக்கம் பொருந்துவதாகவே உள்ளது. வாழ வழியற்று கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள்கூட, நகரத்தில் வசதியாக வாழ்ந்துகொண்டு ‘கிராமம்போல வருமா?’ என்று இன்றும் பெருமை பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ந.முருகேசபாண்டியனின் இந்தக் கட்டுரை நூல், இந்தப் பொதுப் புத்தி மனநிலையை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது. சாதியக் கட்டுமானத்தின் இறுக்கத்தைக் கிராமங்களே இன்றும் பாதுகாத்துவருகின்றன. ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் கால்களில் அணிந்த செருப்பைக் கைகளில் எடுக்கச் செய்யும் புனிதர்கள் கிராமங்களில்தாம் இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான ஒடுக்குதல்களுக்கும் கிராமங்களில் குறைவில்லை. இந்த இடத்தில் நின்றுதான் இந்நூல் நம்பகமான தரவுகளுடன் நம்முடன் உரையாடுகிறது.

20 வருடங்களின் காலமாற்றம் இப்பிரதியின் ஒவ்வொரு கட்டுரையிலும் பதிவாகியிருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டியும் மெட்ரிகுலேஷன் கல்வியும் வந்த பிறகு, கிராமங்களில் வாய்மொழியாக உலவிவந்த பேய்கள் தொடர்பான கதைகள் காணாமல் போயின. கடந்த 40 வருடங்களில் பெரும் சரிவைச் சந்தித்தது சினிமா கொட்டகைகள்தான் என்பதை நூலின் பல கட்டுரைகள் திரும்பத் திரும்ப நினைவுபடுத்துகின்றன.

தமிழ்ப் பண்பாடு சார்ந்த பல கட்டுரைகள் நூலில் உள்ளன. மழை பொய்த்துப்போன காலங்களில் ‘மழைச்சோறு’ உண்டு கைகழுவ மழை வேண்டுமெனக் கடவுளையே நெருக்கடிக்குள்ளாக்கிய சம்பவங்கள் கிராமங்களில் அதிகம் நடந்ததுண்டு. திருமணமான பெண்கள் தலையில் குங்குமம் வைத்துக்கொள்ளும் கலாச்சாரம் வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். காணி, மா, காலடி, சாண், அடி, முழம், கஜம், விரல்கடை, படி, வீசம், மூடை என்று தமிழர்கள் அளவையைக் குறிக்க அவ்வளவு சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இச்சொற்களை அதன் பயன்பாடுகளுடன் மிக நுட்பமாக அவதானித்து ந.முருகேசபாண்டியன் எழுதியிருக்கிறார். ‘மேடைப் பேச்சுகள் கட்டமைத்த அரசியல்’ என்ற கட்டுரையில் தி.மு.க.வின் மேடைப் பேச்சுத் திறன் குறித்து எழுதியுள்ளார். அதில் ஓர் சம்பவம் சமகாலத்துடன் பொருத்தமாக இருக்கிறது. மேடைப் பேச்சின் முடிவில் கட்சித் தொண்டர் ஒருவர் கட்சி நிதிக்காகச் சேவலை அளிக்கிறார். சேவலை ஏலம்விட்டுப் பணத்தை நிதியில் சேர்க்கிறார் கலைஞர்.

கிராமங்களில் பேசப்படும் வசவுச் சொற்கள் குறித்தும் ந.முருகேசபாண்டியன் வெளிப்படையாக எழுதியிருக்கிறார். வசவுச் சொற்கள் பெரும்பாலும் பாலியல் சார்ந்ததாகவே இருக்கும். இரண்டு பெண்கள் சண்டையிடும்போது வழக்கமாகப் பாலியல் சார்ந்த வசவுச் சொற்கள் அதிகமாக வெளியேறும். மாதந்தோறும் பெண்களுக்கு இயல்பாக நிகழக்கூடிய உதிரப்போக்கை, வசவுச் சொற்களாக மாற்றி அவர்களை மதிப்பிறக்கம் செய்யும் போக்கு ஆண்களின் வக்கிர புத்தியின் வெளிப்பாடாகக் கருத வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் ந.முருகேசபாண்டியன் ஒன்றைக் குறிப்பிடுகிறார். கடலின் புனிதம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் பெண்களை மீன்பிடிக்கச் சமூகம் அனுமதிப்பதில்லை என்கிறார்.

இந்த உலகத்தில் வாழ புழு, பூச்சி, பாம்பு, தவளை, குருவி உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் சம உரிமை உள்ளது என்ற குரல், இக்கட்டுரைகளின் அடிநாதமாக ஒலிக்கிறது. அந்தச் சமநிலை சிதையும்போது ஏற்படும் பின்விளைவுகளும் கட்டுரைகளாகியுள்ளன. எளிமையான மொழியும் கூர்ந்த அவதானிப்பும் கட்டுரைகளைச் சுவாரசியமாக்குகின்றன. ந.முருகேசபாண்டியன் பல கட்டுரைகளில் வெளியே நின்றுதான் எழுதியிருக்கிறார். தன்னை அக்கட்டுரைகளுடன் முழுமையாக இணைத்துக்கொண்டிருந்தால் பிரதிக்கு வேறொரு உருவம் கிடைத்திருக்கும்.

- சுப்பிரமணி இரமேஷ், ‘தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும்’ நூலின் தொகுப்பாசிரியர். தொடர்புக்கு: ramesh5480@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x