

என்றும் காந்தி
ஆசை
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொடர்புக்கு: 74012 96562
விலை: ரூ.280
ஆன்லைனில் வாங்க: http://store.hindutamil.in/publications
‘நீங்கள் காந்தியை மறந்தாலும், அவர் வலியுறுத்திய கருத்துகள் உலகின் வேறு பாகங்களில் வேறு வடிவங்களில் எழவே செய்யும். அவை ஒருபோதும் நம்மை காந்தியை மறக்கவிடாமல் செய்துவிடும். அவரது போதாமைகள், தவறுகளைக் கூறி அவரை நாம் கீழிறக்கிவிட முடியாது. ஏனெனில், மனித குலத்தின் அடிப்படையான அகத் தேவைகள் சிலவற்றோடு பிணைக்கப்பட்டவை அவரது எண்ணங்கள்’ என்று காந்தியைப் பற்றி ஆஷிஸ் நந்தி எழுதியிருக்கிறார். காந்தியின் 150-வது ஆண்டையொட்டி, ‘இந்து தமிழ்’ நாளிதழில் ‘காந்தியைப் பேசுதல்’ என்ற தலைப்பில் ஓராண்டுக்கு ஆசை எழுதிய தொடரும், ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் ‘என்றும் காந்தி’ என்ற தலைப்பில் ஆசை எழுதிய தொடரும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, 2019-ல் ஒரே நூலாக வெளியிடப்பட்டன. வாசகர்களிடையே பெரும் வரவேற்பை இந்த நூல், விளம்பரங்கள் இல்லாத பதிப்பாகத் தற்போது வெளியாகியிருக்கிறது. இரண்டு பிரிவுகளில் மொத்தம் 48 கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தின் முதல் பிரிவு, காந்தியினுடைய வாழ்க்கையின் வெவ்வேறு அத்தியாயங்களை இந்திய விடுதலைப் போராட்டத்தோடு இணைத்துச் சொல்கிறது என்றால், இரண்டாவது பிரிவு காந்தியைச் சித்தாந்தரீதியாக அணுகுகிறது. சாதியம், மதவாதம் போன்ற பிரிவினை சக்திகள் மீண்டும் தலைதூக்கியிருக்கும் நேரத்தில், காந்தி முன்னெப்போதைவிடவும் அதிகம் தேவைப்படுகிறார். காந்தியை அறிந்துகொள்ள மாணவர்கள் உட்பட அனைவருக்கும் நல்லதொரு அறிமுக நூல் இது.