

குரலற்றவர்கள்
ஹரிஷ் குணசேகரன்
வாசகசாலை வெளியீடு
ராஜ கீழ்ப்பாக்கம், சென்னை-73.
விலை: ரூ.150
தொடர்புக்கு: 99426 33833
தாராளமயமாக்கலுக்கும், இணையத்தின் அசுர வளர்ச்சிக்கும் பிறகு தொழில்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு வகையில் மத்தியதர வர்க்கத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரும் பங்காற்றின. இன்னொரு புறம், இந்த மாற்றங்களெல்லாம் பிரத்யேகமான சிக்கல்களையும் கூடவே கொண்டுவந்தன. ஹரிஷ் குணசேகரனின் புதிய சிறுகதைத் தொகுப்பான ‘குரலற்றவர்கள்’ முழுக்கவும் இப்படியான நெருக்கடிகளே நிறைந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பில் உலவும் கதாபாத்திரங்கள் முழுக்கவும் புதிய நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். வேறு எந்தத் தலைமுறையும் அனுபவித்திராத பிரச்சினைகளை இவர்கள் எதிர்கொள்கிறார்கள். அதுவும் குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் உருவாகியிருக்கும் பிரச்சினைகள். கரோனா காலத்தை மையமிட்ட கதைகளும் தொகுப்பில் உண்டு. அந்த வகையில், சமகால அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதிலேயே கதைகளுக்கு ஒரு புத்துணர்வு கிடைத்துவிடுகிறது. கூடுதலாக, அனுபவங்களைச் சுவாரஸ்யமாகவும் நுணுக்கமாகவும் எடுத்துரைக்கும் மொழியும் ஹரிஷ் குணசேகரனுக்கு வாய்த்திருக்கிறது. மென்பொருள் துறையின் நுட்பமான பிரச்சினைகள், சமூக ஊடகங்களாலும் இணையதளங்களாலும் சந்திக்க நேரும் சிக்கல்கள், நவீனக் கருத்தமைவுகளால் மண உறவுக்குள் வரும் மோதல்கள், வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் வெளிவராத துயரார்ந்த பக்கம், ஊரடங்குக் கால இருள் என சமகாலத் துயரங்களின் தொகுப்பு இது.