Published : 21 Aug 2021 08:18 AM
Last Updated : 21 Aug 2021 08:18 AM

நூல்நோக்கு: ஒரு நீதிபதியின் ஹாஸ்யக் கதைகள்

கொனஷ்டை படைப்புகள்
தொகுப்பாசிரியர்: ராணிதிலக்
எழுத்து பிரசுரம்
அண்ணா நகர், சென்னை-40
விலை: ரூ.370
தொடர்புக்கு: 98400 65000

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய எஸ்.ஜி.ஸ்ரீநிவாஸாச்சாரி, ‘கொனஷ்டை’ என்ற புனைபெயரில் எழுதிய கதைகளில் தற்போது கிடைக்கப்பெறுபவற்றைத் தொகுத்து ‘எழுத்து பிரசுரம்’ வழியாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார் கவிஞர் ராணிதிலக். தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகிலுள்ள தென்சருக்கையைச் சொந்த ஊராகக் கொண்ட கொனஷ்டையின் படைப்புகள் பெரும்பாலும் ‘கலைமகள்’ இதழில் வெளியாகியுள்ளன. இவரது எழுத்துகளில் வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை இழையோடிக்கொண்டே இருக்கிறது. பெரிதும், கணவன் மனைவிக்கு இடையிலான உரையாடல்கள்தான். ‘அரைகுறைக் கதைகள்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ‘தேவயானி-சர்மிஷ்டை’ கதையும் அப்படித்தான் இருக்கிறது. ‘பார்வைக்கு இவ்விருவரும் சிநேகிதிகளாயிருந்தார்கள்’ என்று தொடங்குகிறது அறிமுக வாக்கியம்.

ஹாஸ்யக் கதைகளின் வழக்கமான அசட்டுத்தனங்களைத் தவிர்த்து, அறிவார்த்தமாக எழுதப்பட்ட கதைகள் இவை. உள்ளடக்கம், வடிவம் இரண்டிலும் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்துபார்த்திருக்கிறார் கொனஷ்டை. புனைபெயரே ஒரு கதாபாத்திரமாகவும் சில பல கதைகளில் வந்துபோகிறது. ‘மைண்ட் வாய்ஸ் வெளியில் கேட்கிறது’ என்ற இன்றைய பிரபலத் திரைவசனம் அவரது ‘குற்றாலம்’ கதையில் அப்போதே எழுதப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து ரயிலில் காசிக்குப் போகும் புரூரவஸின் நினைவுகளைப் பற்றிய கதை, இன்றைய நவீனச் சிறுகதையொன்றைப் படிக்கும் அதே அனுபவத்தை அளிக்கிறது. எழுதப்பட்டு வெகுகாலமான பின்னும், அதுதான் இந்தக் கதைகளை வாசிப்பதைக் கொண்டாட்டமாக்குகிறது.

பொய்கள் புனையும் வல்லமையோடு சங்கீத ஆர்வமும் தொற்றிக்கொண்ட லலிதா, எதைச் சொன்னாலும் ‘இருக்கே’ என்ற வார்த்தையுடன் தொடங்கும் ககரபாஷைக்காரரான வேங்கடராமையர், அவரது பழக்கத்துக்குத் தனது பகரபாஷையால் முற்றுப்புள்ளி வைக்கும் அம்மாளு என்று பல பாத்திரங்கள் நிச்சயம் நினைவைவிட்டு அகலாதவை. ‘நக்ஷத்திர பூஜை’ கதை அப்போதே உச்சத்துக்கு வந்துவிட்ட திரைப்பட நாயகர்கள் வழிபாட்டையும் ரசிகர்களின் அறியாமையையும் சொல்கிறது. விசுவநாதையரின் வார்த்தைகளில், நடிகர்கள் மீதான கோபமும்கூடக் கொப்பளிக்கிறது.

கதை எழுதுவது இழிவான தொழில் என்றும், புனைபெயருக்குள் ஒளிந்துகொள்வது பயந்தாங்கொள்ளித்தனம் என்றும் ஒரு எழுத்தாளராக கொனஷ்டையின் சுயபகடிகள் ரசிக்கவைக்கின்றன. நீதிபதியாயிற்றே, அவரது எழுத்துகளில் அந்தப் பணியனுபவங்களைக் குறித்து ஏதேனும் பதிவுகள் தென்படுகின்றனவா என்று தேடிப்பார்த்தால் ஏமாற்றமே. கிராமங்களில் வழக்கமாக நடக்கும் ஒரு வேலித் தகராறு நீதிமன்ற வழக்காகி, பொய் சாட்சிகளின் காரணமாக தோற்றுப்போவதைப் பற்றி ‘மந்திரசக்தி’ என்ற கதையில் ஒருசில வாக்கியங்கள் வருகின்றன. ‘எங்கள் ஊர்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ப்ரிவி கவுன்சில் தீர்ப்பு ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறார். அதுவும் கங்கையைப் பற்றிய மாகாத்மியம்.

எஸ்.ஜி.ஸ்ரீநிவாஸாச்சாரி, நீதித் துறையின் பின்னணியில் கதை எழுதுவதைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார் என்றே புரிந்துகொள்ள முடிகிறது. உள்ளார்ந்த இலக்கிய ஆர்வத்தாலோ, நல்லதொரு பொழுதுபோக்கு என்று எண்ணியோ புனைபெயரில் அவர் எழுதிய கதைகளை ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கவிஞர் தேடிப் பிடித்துப் பதிப்பித்திருக்கிறார். ஒரு நீதிபதியாக அவர் எழுதிய தீர்ப்புகள் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியெழுதியிருக்குமோ; ஆனால், அவரது முகத்தைக்கூட இன்று நினைவில் கொள்ள முடியவில்லை. வாழ்வின் அபத்தங்களைக் காட்டிலும் சிறந்த ஹாஸ்யம் ஒன்றிருக்க முடியுமா என்ன?

கொனஷ்டை கதைகளின் இரண்டாம் பாகம், தமிழ் இணைய கல்விக் கழகத்தின் அரிய நூல்களை மின்னூலாக்கம் செய்யும் திட்டத்தால் மீண்டும் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து கும்பகோணம் சிவகுருநாதன் நூலகத்திலிருந்து அவரது ‘கல்யாணப் பேச்சு’ சிறுகதைத் தொகுப்பு, ‘கலைமகள்’, ‘மணிக்கொடி’ இதழ்களில் வெளிவந்த சில கட்டுரைகள் ஆகியவற்றையும் சேர்த்து இந்தத் தொகுப்பை ராணிதிலக் உருவாக்கியிருக்கிறார். அவரைப் போலவே இந்நூலை வாசிப்பவர்களும் கொனஷ்டையின் மற்ற எழுத்துகளுக்காக நிச்சயம் காத்திருப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x