Last Updated : 14 Aug, 2021 03:18 AM

 

Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 03:18 AM

பா.வெங்கடேசன் தாண்டவமாடிய கதை

மனித குலம் இதுவரை சந்தித்துவந்திருக்கும் பேரழிவுகள், பெரும் போர்கள், துயரங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது, ‘வாழ்க்கை என்பது யாரோ முட்டாள் சொன்ன கதை’ என்ற ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற வாசகங்கள் உண்மைதான்போல என்று தோன்றலாம். ஆனால், மனித குல வரலாறு அது மட்டுமல்ல; அது அறிவிலும் கற்பனையிலும் அடைந்த உயரங்களாக இருக்கும். தத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்றவற்றைப் பார்க்கும்போது ஷேக்ஸ்பியரின் முட்டாள், உண்மையில் அதீத கற்பனை சக்தி கொண்டவரோ என்று தோன்றுகிறது. பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ படிக்கும்போதும் நாம் யாருடைய அதியற்புதக் கதையில் இருக்கிறோம் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 846 பக்கங்கள் கொண்ட பிரம்மாண்டமான இந்நாவல், தமிழின் மகத்தான படைப்புகளுள் ஒன்று.

தன் மனைவி எலினாரின் பார்வையிழப்புக்கு மருந்து தேடிக் கதைகளின் நிலமான இந்தியாவுக்குக் கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியனாக வருகிறான் ட்ரிஸ்ட்ராம். அவன் உட்பட வெவ்வேறு நபர்களுக்கு, வெவ்வேறு காலங்களில் ஒரே மாதிரியான கற்பனை தோன்றுகிறது. அந்தக் கற்பனை இடம்பெற்றிருக்கும் சுவடியைக் காண திப்பு சுல்தானின் நூலகத்துக்குச் செல்லும்போது, காலவெளியைக் குழப்பும் சம்பவத்தை ட்ரிஸ்ட்ராம் காண்கிறான். ட்ரிஸ்ட்ராம் வாழ்ந்துகொண்டிருப்பது ஒரு கதையினுள் என்ற உண்மையை அவனுக்கு உணரவைக்கிறார் கிரிஃபித். கதைக்குள் வாழ்ந்தபடியே ஹூடேதுர்க்கம் காட்டுக்குள் சென்று கெங்கம்மா, சொக்க கௌட துணையுடன் பல்குணம் முதலியாரின் அபினி சாம்ராஜ்யத்தைச் சிதைக்கிறான். இறுதியில் அவனும் பார்வையிழப்புக்கு உள்ளாகிறான்.

பிரதிகளின் தொகுப்பு

இந்த நாவல் பல்வேறு அடுக்குகளையும் அர்த்தத் தளங்களையும் கொண்டிருக்கிறது. நாவல் முழுவதையும் ஒரே கதை என்று கொண்டால், அதற்குள் அவ்வளவு கதைகள். சாபக்காடு, வனமோகினி கதை, தாண்டவராயன் கதை, துயிலார்கள் சரித்திரம் என்று ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன. கதைகள் தவிர சம்பவங்கள், வரலாற்றுப் பின்னணி போன்றவையும். இங்கிலாந்தின் ஃபென் சதுப்பு நிலத்தின் பூர்வகுடிகள், பிரெஞ்சுப் புரட்சி, இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம், திப்பு சுல்தானுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையிலான போர்கள், அதற்கிடையே சிக்கிச் சீரழியும் மக்கள் என்று நிறையச் சொல்லலாம்.

எலினாருக்கு ஏற்பட்டிருப்பது வெண்ணந்தகம். அதற்கு ட்ரிஸ்ட்ராம் மருந்து தேடிவரும் கதையாக இந்த நாவலை ஒரு தளத்தில் படிக்கலாம். நாவல் முழுவதும் பார்வை-பார்வையின்மை தொடர்பான குறிப்புகள், கதைகள் இழையோடுகின்றன. இன்னொரு தளத்தில் உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடியினர் போன்றோரை அரசுகள், கிழக்கிந்திய கம்பெனி, பல்குணம் முதலியார் போன்ற வியாபாரச் சுரண்டல்காரர்கள் எப்படி மேலும் மேலும் விளிம்புக்குத் தள்ளுகிறார்கள் என்ற கோணத்தில் இந்த நாவலை வாசிக்கலாம். இதன் தொடர்ச்சியாக, காலனியாதிக்கத்தின் ஒரு துண்டு வரலாற்றையும், அது இந்தியாவில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் இந்த நாவல் சொல்கிறது.

இந்திய-மையப் பார்வைக்கெதிரான கலகம்

நாவலில் இந்திய-மையப் பார்வையொன்று இழையோடிக்கொண்டிருக்கிறது. வில்லியம் ஜோன்ஸாலும் மேக்ஸ்முல்லரின் மொழிபெயர்ப்புகளாலும் வடிவமைக்கப்பட்ட சம்ஸ்கிருதமையப் பார்வை, இந்தியாதான் சர்வரோக நிவாரணி, இந்தியாதான் எல்லாவற்றுக்கும் மீட்சி என்று 1960-களில் ஹிப்பிகள் கொண்டிருந்த பார்வை, தற்போதைய காலகட்டத்தின் தேசியவாதப் பார்வை போன்றவற்றோடு தூரத்துத் தொடர்புடையது இந்த இழை. அதே நேரத்தில், அந்த இழையை அறுக்கும் அம்சங்களும் இருப்பது நாவலை ஒரு தேசியவாதப் பிரதியாவதிலிருந்து காப்பாற்றுகிறது. சேரிப் பெண்ணான கெங்கம்மா, தாண்டவராயன், துயிலார்கள் ஆகியோர்தான் அந்த மீட்பர்கள். ‘உடல்கள் வஞ்சிக்கப்படும் நாடு இது துரை, ஊமையாக்கப்பட்ட வாய்கள், குருடாக்கப்பட்ட கண்கள், தீட்டுப்பட்ட உடல்கள் இறைந்து கிடக்கும் நிலம்’ என்று ட்ரிஸ்ட்ராமிடம் வாதிடுகிறாள் கெங்கம்மா. மேலும், ‘பறவையைக் கண்டால் பிரமிக்கவும் மலத்தைக் கண்டால் சுளிக்கவும் இங்கே சில முகங்களுக்கு உரிமையில்லை’ என்கிறாள் கெங்கம்மா. துயிலார்கள் என்ற இனத்தின் வரலாறும் தொன்மமும் இந்த நாவலை ஓர் இனவரைவியல் நாவலாக வாசிக்கும் சாத்தியத்தையும் தருகிறது. தங்கள் வரலாறு பற்றிய நினைவுகளை விலையாகக் கொடுத்து நீண்ட ஆயுள் பெற்றிருக்கும் துயிலார்களுக்குச் சொந்தமான ‘தாண்டவராயன் கதை’யில் வரும் ஒரு பகுதியை, துயிலார் இனத்தவர் ஒருவரிடம் கெஞ்சிக் கேட்டுகொண்டு, ஒரு பிராமணர் அதைத் தன்னுடைய பிரதிக்குள் இணைத்துக்கொள்வது காலம்தோறும் நடந்துவரும் பிராமணியமயமாக்கலைச் சொல்லும் கதை.

தமிழில் ஓர் உலக நாவல்

முதல் இருநூறு பக்கங்களில் இங்கிலாந்தின் அரசியல், பிரெஞ்சுப் புரட்சி போன்றவை பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. அதன் பிறகு, இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் செயல்பாடுகள், திப்பு சுல்தான் – ஹைதரலி வரலாறு, இரண்டு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தங்கள்-போர்கள், கதையின் இறுதிப் பகுதியில் வரும் சீனர்களுடனான அபினி வர்த்தகம் என்று ஒரு உலகளாவிய நாவலாகத் தன் இட-காலப் பரப்புகளின் வீச்சாலும் கற்பனைப் பெருக்காலும் ‘தாண்டவராயன் கதை’ விரிவுபெறுகிறது. தமிழில் இப்படி உலகளாவிய நாவல்களாக ப.சிங்காரத்தின் நாவல்களையும், பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’யையும் மட்டுமே முன்வைக்க முடியும்.

ஹோலோகிராஃபிக் பிரபஞ்சம்

பா.வெங்கடேசனின் உலகம் ஒரு ஹோலோகிராஃபிக் பிரபஞ்சத்தை (holographic universe) போன்றது. ஹோலோகிராஃபிக் பிரபஞ்சம் என்றொரு கருதுகோள், கடந்த 40 ஆண்டுகளாக அறிவியலாளர்களால் விவாதிக்கப்படுகிறது. இதன்படி நம்மை உள்ளடக்கி நாம் உணரும் மெய்ம்மையானது படத்திரையில் விழும் படம் போன்றதுதான். அதற்குள் இருக்கும் நாம் நம்மை முப்பரிமாணம் கொண்டவர்களாக உணர்ந்தாலும் இந்தக் கோட்பாட்டின்படி நாம் இருபரிமாணம் கொண்டவர்கள்தான். நம்மைப் படம்போல் வீழ்த்துவதற்கான எல்லாத் தரவுகளும் வெகு தொலைவில் உள்ள ஒரு இருபரிமாணப் பரப்பில்தான் இருக்கின்றன. ‘இது ஒன்றும் சும்மா அவிழ்த்துவிடப்படும் ஊகம் அல்ல… இயற்பியலில் சில சிக்கல்களைத் தீர்க்கும் கருவியாக இந்தக் கோட்பாடு இருக்கிறது’ என்கிறார் இயற்பியலர் லெனார்டு சஸ்கிண்ட். இதை மறுக்கும் அறிவியலர்களும் இருக்கிறார்கள். ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ என்ற மௌனியின் புகழ்பெற்ற வரி நினைவுக்கு வருகிறதல்லவா. ‘தாண்டவராயன் கதை’யில் வெவ்வேறு இடங்களில் வரும் கீழ்க்கண்ட வரிகளைப் பாருங்கள்:

‘தன் பார்வையால் அவனுடைய அசைவுகளை விடாமல் தொடர்ந்துகொண்டேயிருந்ததன் மூலம், அவனுடைய தனிமையைச் சிதறடித்து அவனை அவன் கற்பனைகளோடு சேர்த்தே தன் விழிகள் உருவாக்கும் காட்சியாக மாற்றியமைத்துக்கொண்டிருந்தாள்.’ (பக். 266)

‘அப்போதெல்லாம், காட்சி நடைபெறும் அரங்கே கெங்கம்மாவின் விழிகள்தானென்றால் அதில் பிரதிபலிப்பதும் எப்படி அவளாக இருக்க முடியும்…’ (பக்.272)

நாவலின் நாயகன் ட்ரிஸ்ட்ராமே, கதையின் திரையில் கதைசொல்லி எலினார் வீழ்த்தும் படத்தின் பாத்திரம்தானே.

கதைசொல்லலின் மாயாஜாலம்

இந்த நாவல் எலினார் சொல்லும் கதை என்றால், எலினாரை உள்ளடக்கிய மகத்தான கதைசொல்லலை யார் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? இதற்கான சிறு வெளிச்சம் நாவலுக்குள் நீலகண்டப் பண்டிதர் இயற்றிய ‘துயிலார்கள் சரித்திர’த்தைப் பற்றிய சர்க்கத்தில் விழுகிறது. துயிலார்கள் சொல்லும் கதைகள் ‘இறந்த காலத்தின் சரித்ரத்தைச் சொல்லாமல் வருங்காலத்தின் ஆரூடங்களையே கதைகளாக்கியியம்புவனவென்றும்’ என்றும், அவர்கள் சொல்லும் கதைகளுள் ‘பிரசவிக்காத கர்ப்பஸ்திரீயின் கதை’யும் அடங்கும் என்கிறார் நீலகண்டப் பண்டிதர். எலினாரும் பிரசவிக்காத கர்ப்பஸ்திரீதான். அதாவது ட்ரிஸ்ட்ராம், நீலகண்டப் பண்டிதர், துயிலார்கள் போன்றோரைக் கதாபாத்திரங்களாக வைத்துக் கதை சொல்லும் எலினாரே அவளது கதாபாத்திரத்தின் கற்பனைதான் என்று, கதைசொல்லல் எனும் பாம்பை அதன் வாலையே விழுங்கவைத்து அதை முதலும் முடிவும் அற்றதாக ஆக்குகிறார் பா.வெங்கடேசன்.

தாண்டவராயன் கதை யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் போல முக்கியமானது அது யாருக்குச் சொல்லப்படுகிறது என்பதும் முக்கியமானது. ஷேக்ஸ்பியர் சொன்னதுபோல யாரோ ஒரு முட்டாள் சொன்ன கதையல்ல; யாரோ ஒரு பைத்தியத்துக்கு (அதாவது, மனநலம் பாதிக்கப்பட்ட எலினாரின் சகோதரி ஹெலனுக்கு) சொல்லப்பட்ட கதை இது. ஹெலன் வேறு யாரும் அல்ல; வாசகராகிய நாம்தான். ஆரோக்கியமான மனநலம் கொண்ட ஒருவருடைய மனது ரசம் பூசப்படாத கண்ணாடியைப் போன்றது. அதன் வழியாகப் பார்த்தால் மெய்ம்மை (மெய்ம்மை என்று ஒன்று இருந்தால்) அப்படியே தெரியும். மனநலம் பாதிக்கப்பட்டவருடைய மனது அப்படியல்ல. அது வைரம் போன்றது. அதன் வழியே ஒளியை (அதாவது, மெய்ம்மையை) பார்த்தால் அது ஒளியை வளைத்துச் சிதறடித்துப் பல வண்ணங்களாகத்தான் காட்டும். ஆக, பா.வெங்கடேசன் தன் வாசகர் யார் என்பதை நாவலுக்குள்ளேயே தேர்ந்தெடுத்துவிட்டார். மெய்ம்மையை அப்படியே எடுத்துக்கொள்ளும் கண்ணாடியல்ல, அதைச் சிதறடிக்கும் வைரமே அவரது வாசகர்.

நடையும் அதன் வகைமைகளும்

பல்வேறு அர்த்தத் தளங்களையும் யதார்த்தத்தின், கற்பனையின் அனைத்துத் திசைகளையும் அடுக்கிச் செல்லும் வகையில் நீண்ட வாக்கியங்களை எழுதுபவர் பா.வெங்கடேசன். கொஞ்சம் உழைப்பைச் செலுத்தத் தயாராக இருக்கும் வாசகருக்கு இந்த நடை அள்ளிக்கொடுப்பது ஏராளம். சமயத்தில் ஒரே வாக்கியம் இரண்டு பக்கங்கள் வரை நீள்வதுண்டு. நீண்ட வாக்கியங்களைப் போல அடைப்புக்குறிகளையும் பா.வெங்கடேசன் அதிகம் பயன்படுத்துகிறார். 18-ம் நூற்றாண்டு தமிழை ஒட்டிய நடை, கூத்தில் வரும் கட்டியங்காரனின் மொழிநடை, புராணிக நடை, சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய பண்டிதர் ஒருவரின் நடை, பிராமணப் பெண்ணின் நடை என்று பல நடைகளின் தொகுப்பாக இந்த நாவல் காட்சியளிக்கிறது. இதில் தாண்டவராயன், கோணய்யன் சரித்திரம் மட்டும் 27 பக்கங்கள் கதைப்பாடலாக எழுதப்பட்டிருக்கிறது. பா.வெங்கடேசனை ஒரு சன்னதம் பிடித்து ஆட்டிவைத்திருப்பதை இந்தப் பக்கங்களிலிருந்து உணரலாம்.

மொழியழகும் கற்பனை அழகும்

நடைகளின் வகைமை இப்படி என்றால், அசாத்தியமான மொழி அழகையும் கற்பனை அழகையும் கொண்டவர் பா.வெங்கடேசன். பல இடங்களில் வரிகளை உடைத்து உடைத்துப் போட்டிருந்தால் அது கவிதையாகவே தோன்றியிருக்கும். ‘நீலவேணியின் பாதை’ என்ற பகுதி பிரமிக்கவைக்கும் கற்பனை. தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல், உலக இலக்கியத்திலும் சிறந்த பகுதிகளுள் ஒன்று இது. மொழியழகுடன் கற்பனை வீச்சும் சேர்ந்துகொள்ளும்போது அசாதாரணமான உயரங்களை பா.வெங்கடேசன் எட்டுகிறார். திரையில் பார்க்கும் படத்திலிருந்து ஒரு பாத்திரம் திரையிலிருந்து வெளியே வந்து உலவுவதுபோலவும், திரைக்கு வெளியே இருக்கும் நிஜ மனிதர் திரைக்குள் செல்வதுபோலும் இருக்கிறது கதைக்குள் வாழ்தல் எனும் கற்பனை. ‘உற்றுப்பார்ப்பதன் மூலம் என்னை ஒரு கதையாக மாற்றப் பார்க்கிறார்கள்’ என்று ஒரு வரி வருகிறது. என்ன அசாதாரணமான கற்பனை இது!

மொழியின் பேரதிசயம்

எத்தனை துறைகளின் அறிவு, எத்தனை உழைப்பு இந்த நாவலை உருவாக்கியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கும்போது பெருவியப்பு ஏற்படுகிறது. இவற்றின் கலைடஸ்கோப்பை வாசகர் கையில் கொடுத்திருக்கிறார் பா.வெங்கடேசன். வாசகர்களாகிய நாம் அந்தக் கலைடஸ்கோப்பைக் குலுக்கிக் குலுக்கி வண்ணச் சேர்க்கைகளின் சாத்தியங்களை உருவாக்குகிறோம்.

சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழ் இலக்கியத்தின் பெரும் சாதனைகளுள் ஒன்று ‘தாண்டவராயன் கதை’ நாவல். “பிற மொழி நாவல்களைப் பார்த்து தமிழன் ஏங்கும் காலம் முடிந்துவிட்டது. தராசில் வைக்க ‘தாண்டவராயன் கதை’ இருக்கும்போது, எந்த மொழியிடமும் சென்று மார்தட்டலாம்” என்று பேராசிரியர் ராஜன் குறை இந்த நூலின் பின்னட்டையில் கூறுகிறார். ஒரு மொழியில் எப்போதாவது நிகழும் அதிசயங்களுள் ஒன்று ‘தாண்டவராயன் கதை’. இந்த நாவல் எதிர்கொண்டிருக்கும் புறக்கணிப்பு தமிழ் இலக்கியச் சூழலின் பேரவலங்களுள் ஒன்று. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தாண்டவராயன் கதை’ மறுபதிப்பு கண்டிருக்கிறது. இனியாவது அதற்குரிய அங்கீகாரத்தை அது பெறும் என்று நம்புவோம். அதே நேரத்தில், மகத்தான இந்தப் படைப்பை உருவாக்கிய படைப்பாளியை அவர் வாழும் காலத்திலேயே கொண்டாடுவோம்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

---

தாண்டவராயன் கதை
பா.வெங்கடேசன்
காலச்சுவடு வெளியீடு
கே.பி.சாலை, நாகர்கோவில்-629001.
தொடர்புக்கு: 96777 78863, விலை: ரூ.1,390

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x