Published : 07 Aug 2021 06:05 AM
Last Updated : 07 Aug 2021 06:05 AM

புத்தகத் திருடர்: பிடி சாபம்

‘புத்தகத்தைத் திருடுகிறவரின்/ காதலியையோ/ காதலனையோ/ வேறு யாராவது திருடிக்கொள்வார்கள் என/ ஆதி தெய்வத்தின்/ சாபத்தில் சொல்லப்பட்டிருக்கிறது’ என்ற மனுஷ்யபுத்திரனின் கவிதையைப் போன்ற சாபங்களைத் தமிழ்நாட்டிலுள்ள பல கல்வெட்டுகளில் காணலாம். ஒரு கோயிலுக்கு நிலத்தை எழுதிவைத்துவிட்டு, அதைச் சரியாகக் கண்காணிக்காவிட்டால் ‘அவர் கங்கைக் கரையில் மேயும் காராம்பசு ஒன்றைக் கொன்ற பாவத்தை அடைவர்’ என்று ஒரு சாபம் சொல்கிறது. ஆய்வாளர்கள் இதை ‘ஓம்படைக்கிளவி’ என்று குறிப்பிடுவர். புத்தகங்களை எடுத்துச்செல்வோருக்கும் கவிஞர் சொல்வதுபோல ஒரு கிளவி செயல்பட்டால் நல்லது.

எனது புத்தக அறை எங்கள் வரவேற்பு அறையை ஒட்டியே இருக்கிறது. நண்பர்களிடம் பேசும்போது அடிக்கடி புத்தகங்களை எடுத்து அவர்களுக்குக் காட்டிப் பேசுவது உண்டு. அதிலும் நூலாசிரியர்கள் கையெழுத்திட்டு எனக்குக் கொடுத்த நூல்களைப் பெருமையுடன் காட்டுவதுண்டு. இந்தப் பழக்கத்தால் பல அரிய நூல்களை நான் இழந்திருக்கிறேன். எனது நூல் ‘தி அய் ஆஃப் தி செர்பென்ட்’ (The Eye of the Serpent) குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கத்தைப் பெற்றபோது, அதே விழாவில் பரிசு பெற்ற கமல் ஹாசன், புத்ததேவ் தாஸ் குப்தா போன்ற பலரிடம் ஒரு பிரதியின் முதல் பக்கத்தில் கையெழுத்து வாங்கிவைத்திருந்தேன். ஒருநாள் இந்தப் பிரதியைத் தேடும்போது அதைக் காணவில்லை.

அதேபோல், ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில், ராமகிருஷ்ணன் என் பங்களிப்பை மெச்சி, கையெழுத்திட்டுக் கொடுத்திருந்த முதல் பதிப்புப் பிரதி மறைந்துவிட்டது. ‘அவ்வையார்’ படம் பற்றி ஆர்.கே.நாராயணனை நான் நேர்காணல் செய்தபோது அவரது ‘வெயிட்டிங் ஃபார் தி மகாத்மா’ (Waiting for the Mahatma) பிரதியில் என் பெயருடன் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அதையும் காணோம். (அவர் அந்தப் படத்துக்கு ஒரு ஸ்க்ரிப்ட் எழுதினார். அது பயன்படுத்தப்படவில்லை.) ஆனால், என் புத்தக அடுக்கில் ஏணி போட்டு எடுக்க வேண்டிய மேல்தட்டிலுள்ள நூல்கள், முல்க் ராஜ் ஆனந்த், ம.பொ.சி., நீலகண்ட சாஸ்திரி கையெழுத்திட்டுக் கொடுத்த நூல்கள் அடங்க, பத்திரமாக இருக்கின்றன. தொலைந்துபோன புத்தகங்களின் பட்டியல் நீளமானது.

இரவல் வாங்குபவர்கள் பலரும் திருப்பித் தருவதில்லை. 1998-ல் எனது நண்பர் எஸ்.வி.ராஜதுரை, தான் எழுதிய ‘நான்-பிராமின் மில்லீனியம்’ (Non-Brahmin Millennium) நூலில் அன்புடன் சில வார்த்தைகள் எழுதிக் கொடுத்திருந்த பிரதியை எனது அலுவலக மேசை மேல் வைத்திருந்தேன். அங்கு வந்த நண்பரொருவர் சில நாட்களில் திருப்பித் தருகிறேன் என்று வாங்கிப்போனார். அவர் அந்நூலை வாங்கிய காட்சி என் மனதில் இருக்கிறது. ஆனால், முகம் மறந்துவிட்டது. அந்நூல் இப்போது கிடைக்கவில்லை.

தமிழக அரசியல் வரலாறு பற்றி ஆய்வுசெய்த பெர்னாட் பேட், தான் எழுதிய ‘தமிழ் ஆரட்டரி அண்ட் தி திராவிடியன் ஏஸ்தெடிக்’ (Tamil Oratory and the Dravidian Aesthetic) நூலை எனக்குக் கொடுத்தார். அதை என் வீட்டில் பார்த்த ஒரு நண்பர், கெஞ்சிக் கூத்தாடி இரவல் வாங்கிப்போனார். சில மாதங்கள் கழித்து நான் கேட்டபோது, “திருப்பிக் கொடுத்துவிட்டேனே… மறந்துவிட்டீர்களா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். முதுமையின் பிரச்சினைகளில் இது ஒன்று. “நீங்கள் மறந்துவிட்டீர்கள்” என்பார்கள். அவர் என் நண்பர், என்ன செய்வது! துயரம் என்னவென்றால், பெர்னார்ட் காலமாகிவிட்டிருந்தார். அந்த நூலுக்கும் என் மனதளவில் விடை கொடுத்துவிட்டேன். ஆனால், நான் கேட்ட ஒரு வாரத்தில் அந்த நூலை என் நண்பர் ஒரு உதவியாளர் மூலம் திருப்பி அனுப்பிவைத்தார்.

நான் 1963-ல் தமிழ்நாடு ஆவணக்களரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, அந்தச் சொற்ப சம்பளத்தில் மாதம் ஒரு புத்தகம் வாங்குவதுண்டு. அப்போது எனக்கு பெட்ராண்டு ரசல், சார்த்ர் போன்றவர்களின் எழுத்துகளில் ஈடுபாடு. அணு ஆயுத எதிர்ப்பு பற்றி ரசல் எழுதிய ‘தி அனார்ம்டு விக்டரி’ (The Unarmed Victory) நூலை வாங்கிப் படித்தேன். இந்திய-சீனப் போர், ‘பே ஆஃப் பிக்ஸ்’ (Bay of Pigs) நெருக்கடி இவற்றைப் பற்றி விவரமாக அலசியிருப்பார். அந்த நூலும் காணாமல் போய்விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது அந்தப் புத்தகம் தொலைந்து 56 ஆண்டுகள் கழித்து கோவை சென்றிருந்தபோது, சினிமா ஆர்வலர் நண்பர் அமர்நாத் ஒரு கவரைக் கொடுத்தார். எடுத்துப்பார்த்தால் உள்ளே எனது ரசலின் புத்தகம். ஒரு பழைய புத்தகக்கடையில் இதைப் பார்த்து, அதில் உங்கள் பெயரைக் கண்டு வாங்கிவிட்டேன் என்றார்.

புத்தகங்கள் மீதுள்ள ஆர்வத்தால் திருடுபவர்கள் உண்டு. ஒரு மனநிலை உந்துதலால் திருடுபவர்களும் உண்டு. உளவியல் இவர்களை ‘பிப்லியோக்ளெப்ட்’ (Biblioklept) என்று குறிப்பிடுகிறது. அப்படித் திருடிச்செல்லும் புத்தகங்களை அவர்கள் படிக்கக்கூட மாட்டார்கள். இதில் அவலம் என்னவென்றால், இதற்கு எந்த மருத்துவமும் கிடையாது.

ஆனால், ஒரு ஆறுதல். எனக்குப் பின் இந்த நூல்களெல்லாம் பத்திரமாக இருக்கும் என்று தெரியும். என் சேகரிப்பை ரோஜா முத்தையா நூலகத்துக்கு எழுதிவைத்துவிட்டேன்!

- தியடோர் பாஸ்கரன், ‘கையிலிருக்கும் பூமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x