Published : 07 Aug 2021 05:59 AM
Last Updated : 07 Aug 2021 05:59 AM

நூல்நோக்கு: வசீகரத் துயரில் உழலும் சஹிதா!

சம்பத்.ஜி

சஹிதா
கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ் வெளியீடு
டி.எம்.சாரோன், திருவண்ணாமலை-606601.
தொடர்புக்கு: 94458 70995
விலை: ரூ.300

பெண் தன்னுடைய வாழ்க்கையில் மூன்று விடுதலைகளுக்கான போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உடல் விடுதலை, சமூக விடுதலை, ஆன்ம விடுதலை. இதில் ஆன்ம விடுதலைக்குத் தான் எடுக்கும் முன்னெடுப்பையும் போராட்டத்தையும் முன்வைக்கிறது, மொழிபெயர்ப்பாளர் ஷைலஜாவின் முதல் நாவலான ‘சஹிதா’. துறவறமும் வீடுபேறும் ஆண்களுக்கானவை என்ற வழமையிலிருந்து விலகி, இறைமை என்பது பெண்களுக்குள் எப்போதுமே சூல் கொண்டியங்கும் பண்பு நிலை என்பதை இந்நாவல் உணர்த்துகிறது.

தினம் ஐந்து முறை தொழுகை நடத்தும் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த சஹிதாவுக்கு கண்ணன் மீது பெருமயக்கம் பற்றிக்கொள்வதைப் பேதமற்ற பக்தியின் உருகலாகவே அவதானிக்க முடிகிறது. திருவரங்க துலுக்க நாச்சியார், ஆண்டாள், பக்த மீரா, சாந்தா சக்குபாய், ராமாபாய், காரைக்கால் அம்மையார் போன்ற பெண் பக்தர்களையும் துறவிகளையும் நாம் ஏற்கெனவே அறிந்திருந்தாலும்கூட சமகால நவீனப் பெண் சஹிதா, தன் கட்டுக்கோப்பான இஸ்லாமியக் குடும்பம், அதன் மரபுத்தன்மைகள், உறவுகளிலிருந்து ஒரு அழகிய மீறலை நிகழ்த்துகிறாள். ஒரு வசீகரத் துயரை வலிந்து ஏற்றுக்கொள்கிறாள்.

பால்யம் தொட்டே கல்வியில் நாட்டம் இல்லாதது, இந்துக் கடவுள் மீதான தீவிர வழிபாடு போன்ற சஹிதாவின் தேடலை அவளின் சுற்றம் ஒவ்வாமையோடு அணுகுகிறது. அவளது திருமணத்துக்குப் பிறகு மாமியார் ஜரீனா இது குறித்துத் தொடர்ந்து எதிர்ப்புக் காட்டுகிறார். பலத்த புயலுக்கு நடுவிலும்கூட சீராக ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தைப் போல எந்த எதிர்ப்புகளுக்கும் சஞ்சலப்படாமல் சஹிதாவுக்கான தெய்விகநாடி ஓயாது துடித்துக்கொண்டே இருக்கிறது. அத்தனை புயல் காற்றுக்கும் நடுவே அசையாது நிழல் தரும் போதிமரமாய் அவளுடைய கணவன் நாசிம் இருக்கிறான். அதை, “தொப்புள்கொடி அறுபட்ட குழந்தை மூச்சுக் காற்றுக்காய்த் தவித்துத் திணறி, வெளிக் காற்றை சுவாசித்துத் தெளிவுற்றுப் பின் தனித்து நிற்கப் பழகினாள்... திடமாய் நின்றாள்... எல்லாவற்றையும் உரமேற்று எதிர்கொண்டாள்” என்று தன் கணவனின் வலுவான ஆதரவை மெச்சுகிறார். இந்தப் பிரபஞ்சம் முழுமையும் ஒற்றைத் தொப்புள்கொடியில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தொப்புள்கொடியிலும் வீசுவது பிரசவக் கவிச்சியல்ல. அதுதான் இறைமையின் நறுமணம். நாசிம் தனக்குப் பிறந்த பெண் குழந்தையை செவிலியரிடமிருந்து பெறும்போது “துணி சுத்தாம குடுங்க சிஸ்டர். என் மகளோட ஸ்பரிசத்தை உணரணும்” என்று கேட்டு வாங்கி, அப்படியே அணைத்து உச்சி முத்தமிட்டு அவளின் இளஞ்சூட்டைத் தன் உள்வரை அனுபவிக்கிறான். கருணை ததும்பி கண்வழி வழியும் காட்சியில் நாமும் அதே இளஞ்சூட்டை உணர முடிகிறது. அதேபோல், இளவுடல் தாயான சஹிதாவை சாந்தம்மா சேச்சி குளிப்பாட்டி வாசமிட்டுப் பராமரிக்கிற பாங்கும், பாரம்பரிய மூலிகைகளைக் கலந்து உணவூட்டும் முறையும் நமது வீட்டுக்குள்ளேயே பிரசவ வாசத்தைப் பரவவிடுகிற உயிர்ப்பான விவரிப்பு.

சந்நியாசம். அதுவும் ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு இந்து மார்க்க சந்நியாசம் எவ்வகையில் சாத்தியம்? சஹிதா வீட்டிலும் நாசிம் வீட்டிலும் எதிர்ப்பும் கலகமும் உச்சத்தை எட்டுகின்றன. ஓஷோ கூறியதுபோல் “சந்நியாசம் பெறுவதென்பது கடவுளின் போர் வீரனாவது” என்று திடமாக நம்புகிறான் நாசிம். எல்லா நெருக்கடிகளிலும் தாய்ப் பறவையாகவே மாறி சஹிதாவை அரவணைக்கிறான் நாசிம். முக்கோணக் காதலை, முக்கோணக் காமத்தை இலக்கியங்களும் திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் தொடர்ந்து பதிவுசெய்தபடியேதான் இருக்கின்றன. ஆனால், இந்நாவல் தொட்டுக்காட்டும் விஷயங்கள் அரிதானவை. உச்சபட்சப் புரிதலோடு கூடிய ஆதர்சத் தம்பதிதான் இங்கே நிர்ப்பந்த மணமுறிவை வேண்டுகிறது. கணவனே விவாகரத்துக்கான ஏற்பாட்டைச் செய்கிறான். இன்னொரு வீட்டுக்கு சஹிதாவை அனுப்பிவைக்கும் விசாலப் பொறுப்போடு தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறான். “இன்னொரு ஆணுடன் போய் சேர்ந்து வாழ்ந்து பார்” என்கிறான். இப்படிப்பட்ட கணவனைக் கட்டிக்கொண்டு அழுகிறாள். இவற்றையெல்லாம் நாம் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளப்போகிறோம்?

- சம்பத்.ஜி, தொடர்புக்கு: sampathnregs@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x