

மலையாள எழுத்தாளர் மறைவு
மலையாள இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அக்பர் கக்கட்டில் கடந்த 17-ம் தேதி கோழிக் கோட்டில் காலமானார். அங்கதச் சுவை ததும்பும் எழுத்துக்குப் பெயர் போனவர் கக்கட்டில். இதுவரை 54 நூல்களை எழுதியுள்ளார். ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அந்தப் பின்புலத்தில் கதைகள் எழுதினார். கேரள சாகித்ய அகாடமி விருதை இருமுறை பெற்றுள்ளார். அடூர் கோபாலகிருஷ்ணன் குறித்து, அக்பர் கக்கட்டில் எழுதிய ‘வரூ, அடூரிலேக்கு போகாம்’ என்னும் கட்டுரை நூலின் தமிழாக்கம் குளச்சல் மு.யூசுப் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ‘இடம் பொருள் கலை’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
2 லட்சம் பிரதிகள்
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை ‘நூறு நாற்காலிகள்’. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தக் கதை, தனி நூலாகவும் வெளிவந்து கவனம் பெற்றது. (விஜயா பதிப்பக வெளியீடு). இதே கதை மலையாளத்தில் ‘நூறு சிம்மாசனங்கள்’ என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் படித்து ஐஏஎஸ் அதிகாரியாகிறார். அவரை எதிர்கொள்ளும் பொதுச் சமூகத்தின் மனநிலையை ஜெயமோகன் இந்தக் கதையில் காட்சிப்படுத்துகிறார். அவரது அடையாளத்தின் ஒரு பிம்பமாக அவருடைய தாயைக் காண்பிக்கிறார். இந்தக் கதை, கைரளி, மாத்ருபூமி உள்ளிட்ட எட்டுப் பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டு 2 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது.
ஹார்பர் லீ காலமானார்
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளார் ஹார்பர் லீ கடந்த 19-ம் தேதி அமெரிக்காவில் காலமானார். அவரது நாவலான ‘To Kill a Mocking Bird’ அமெரிக்காவின் தேசிய நாவலாகக் கருதப்படுகிறது. கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்காவில் நடந்த அடக்குமுறைகளை ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து லீ தன் நாவலில் காட்சிப்படுத்தினார். இந்த நாவல் அமெரிக்கர்களின் மனநிலையிலேயே பெரும் மாற்றத்தை விளைவித்தது. இந்த நாவலுக்காக புலிட்சர் விருதையும் அவர் பெற்றுள்ளார். 1926-ல் அமெரிக்காவில் பிறந்த லீ, இதுவரை இரு நாவல்கள் மட்டுமே எழுதியுள்ளார். அவரது இரண்டாவது நாவலான ‘Go Set a Watchman’ சென்ற ஆண்டு ஜூலையில்தான் வெளிவந்தது.