

குழந்தைகளின் மனவுலகம் எப்போதும் வண்ணங்களாலானது. குழந்தைகள் சிரிப்பதும் விளையாடுவதும் படிப்பதும்கூட அவர்களின் போக்கில் இயல்பாய் நடக்கும்போது ரசனைக்குரிய ஒன்றே. நம்மால் திணிக்கப்படுகிற எதையும் செரிக்க முடியாமல் திணறித்தான் போகிறார்கள் குழந்தைகள்.
கற்றலும் கற்பித்தலும் குழந்தைகளின் மனவுலகத்தோடு நெருங்கி வருகையில் இனிப்பானதாகிறது. கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை ’ஒன்றுக்கும் உதவாதவர்கள்’ என்கிற பார்வையோடு ஒதுக்கி வைத்துவிடாமல், கூடுதல் அன்பும் கொஞ்சம் கவனமும் செலுத்தினால் போதும். அவர்களாலும் சிறப்பான திறனை வெளிப்படுத்த முடியுமென்கிற நம்பிக்கையை விதைக்கிறது ‘கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்’ நூல்.
வாழ்க்கை அனுபவத்தோடு, வகுப்பறையின் தகவமைப்பையும், கற்றலில் குழந்தைகள் காட்டும் ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு, எளிய உதாரணங்களோடு எழுதப்பட்டுள்ள இந்நூல் நம் வாசிப்பில் கற்கண்டில்லாமல் வேறென்ன…?