

டாக்டர் கு.கணேசனுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது
‘இந்து தமிழ்’ நாளிதழுடன் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன், இந்திய மெடிக்கல் அசோசியேஷன், டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து, அர்ப்பணிப்போடு பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்குகிறார்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 190 மருத்துவர்கள் இந்த விருதால் கௌரவிக்கப்படவிருக்கிறார்கள். இதில், மருத்துவ எழுத்தாளர் கு.கணேசன் ‘விழிப்புணர்வு’ பிரிவில் விருது பெறுகிறார். கரோனா காலகட்டத்தில் மட்டும் இவர் எழுதிய கட்டுரைகள் 86. ‘கரோனாவை வெற்றிகொள்வோம்’ என்ற தலைப்பில் சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘இந்து தமிழ் திசை’ வெளியீடாகப் புத்தகமாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
70% தள்ளுபடியில் புத்தக விற்பனை
ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களுக்கு 70% தள்ளுபடி விலையில், புத்தக விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறது ‘பாரதி புத்தகாலயம்’. சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகிலுள்ள பாரதி புத்தகாலய குடோனில் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம். தொடர்புக்கு: 94430 66449
‘கனவு’ 100
திருப்பூர் வாழ்க்கையைத் தன் எழுத்துகள் வழியாகத் தொடர்ந்து ஆவணப்படுத்திவரும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். வேலை நிமித்தமாக அவர் செகந்திராபாத் சென்றிருந்தபோது, அங்கிருந்த தமிழர்களின் ஆதரவோடு தொடங்கிய இலக்கியக் காலாண்டிதழ்தான் ‘கனவு’. அவர் மீண்டும் திருப்பூர் திரும்பிய பிறகும் அந்தப் பயணத்தை விட்டுவிடவில்லை. 36 ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கும் ‘கனவு’ இதழ் இப்போது நூறாவது இதழாக மலர்ந்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. ‘கனவு’ இதழ் குழுவுக்கு வாழ்த்துகள்! தொடர்புக்கு: 94861 01003