Published : 31 Jul 2021 05:58 AM
Last Updated : 31 Jul 2021 05:58 AM
விடுபட்டவர்கள்: இவர்களும் குழந்தைகள்தான்
இனியன்
நாடற்றோர் பதிப்பகம்
இரத்தின சபாபதிபுரம், கோவை-02.
விலை: ரூ.100
தொடர்புக்கு: 94435 36779
பாரம்பரிய விளையாட்டுகளை அதன் வரலாற்றுடன் குழந்தைகளிடம் கொண்டுசேர்ப்பதையே வாழ்நாள் பணியாகச் செய்துவருபவர், குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர் இனியன். அது தொடர்பான கள அனுபவங்களை அப்படியே எழுத்தில் வடித்துள்ளார். குழந்தைகளுக்காகவே வாழ்கிறோம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பெற்றோர்கள் அவர்கள் நலனில், உரிமையில், பாதுகாப்பில் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என்ற உண்மையானது அப்பட்டமாகவும் ஆதங்கத்துடனும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தச் சமூகத்தில் மாற்றுத்திறன், ஆட்டிசம் மற்றும் ஹைப்பர்டென்ஷன், பார்வைக் குறைபாடு, காது மற்றும் வாய்க் குறைபாடு, கை மற்றும் கால் குறைபாடு, மனநலக் குறைபாடு, மரபணுக் கோளாறு, தசைநார்ச் சிதைவு கொண்ட சிறப்புக் குழந்தைகளை நவீனத் தீண்டாமையின் பெயரில் ஒதுக்கிவைத்து, அவர்களைக் குழந்தைகளின் பட்டியலிலிருந்து விடுபட்டவர்கள் ஆக்கிவிடாதீர்கள் என்பதையும் இந்நூல் அழுத்தமாக அறிவுறுத்துகிறது.
கல்விப் போராட்டத்தைச் சந்திக்கும் இருளர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், இரு மாநில எல்லையோரங்களில் வசிப்பதால் கல்வி தடைபட்டு நிற்கும் குழந்தைகள், ஊர், தெரு, சேரி, காலனி என்று எல்லைகளை உடைக்க முடியாமல் பிரிந்து கிடக்கும் குழந்தைகள், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள், குற்றச் செயல்களுக்குத் துணைபோகும் குழந்தைகள், அரசியல் புரியாமல் அதன் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகள், பாலினச் சமத்துவக் கல்வி இல்லாமையால் தவறே செய்யாமல் குற்ற உணர்வுக்கு ஆட்படும் குழந்தைகள், உணவு ஆதிக்கத்தைச் செலுத்தும் பள்ளிகளால் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகும் குழந்தைகள், கரோனா ஊரடங்கால் அவல நிலைக்குத் தள்ளப்பட்ட புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள், அகதி முகாம்களின் குழந்தைகள், தனிப் பெற்றோரின் குழந்தைகள் என்று பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படும் குழந்தைகளின் சூழல்கள் அடுக்கடுக்கான சம்பவங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன.
கடிதம் எழுதவைப்பது, விளையாட்டில் ஈடுபடுத்துவது, வாசிப்பதற்குத் தயார்படுத்துவது ஆகிய செயல்பாடுகள் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியமானவை என்பதும் அனுபவங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கோணங்களிலும் விளிம்புநிலையில் உள்ள குழந்தைகளின் கல்வி நிலை, குடும்பச் சூழல், பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து அதற்கான தீர்வுகளையும் நூலாசிரியர் இனியன் முன்வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT