அதிகாரத்துக்கு எதிரான குரல்

அதிகாரத்துக்கு எதிரான குரல்
Updated on
1 min read

தொல்குடித் தழும்புகள்
செம்பேன் உஸ்மான்
தமிழில்: லிங்கராஜா வெங்கடேஷ்
கலப்பை வெளியீடு
வடபழனி,
சென்னை-26.
விலை: ரூ.180
தொடர்புக்கு: 94448 38389

ஆப்பிரிக்காவின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகப் பார்க்கப்படும் செம்பேன் உஸ்மானின் வாழ்க்கையே ஒரு நாவலைப் போல சுவாரயஸ்மானது. எழுத்தறிவற்ற தம் மக்களிடம் இலக்கியம் வழியாக நெருங்க முடியாததுதான் அவரை சினிமாவை நோக்கித் தள்ளியது. அது அவரை ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை எனும் அளவுக்கு இட்டுச்சென்றது. சினிமாவுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே அவருடைய மூன்று நாவல்களும், ‘தொல்குடித் தழும்புகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வந்திருந்தன. பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பை, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் லிங்கராஜா வெங்கடேஷ். சரளமான மொழிபெயர்ப்பு. அதிகாரத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிரான தீர்க்கமான குரலாக இருக்கின்றன செம்பேன் உஸ்மானின் கதைகள். அடிமை முறை, காலனிய ஆதிக்கம், இனப் பாகுபாடு, பெண்களுக்கு எதிரான சுரண்டல், மத அடிப்படைவாதம், கலாச்சாரச் சிக்கல்கள் போன்றவற்றுக்கு எதிராக, நிதானமான தொனியில் பேசுகிறார். பெரும்பாலும் ஒரு நபரையோ, ஒரு குடும்பத்தையோ மையப்படுத்திக் கதைகள் விவரிக்கப்பட்டாலும் பெருந்திரளான மக்கள் கூட்டத்தைச் சின்னக் கதைக்குள் விரவவிடுகிறார். இந்த உத்தியானது கதை எடுத்துக்கொள்ளும் சிக்கலின் தீவிரத்தையும் பன்முகத்தன்மையையும் அதிகப்படுத்துவதாக இருக்கிறது. சமூகத்தினரை ஒடுக்கும், ஏய்க்கும் அதிகார மையங்கள் சில குறிப்பிட்ட தருணங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றன. அந்தத் தருணங்கள் இவ்வளவு காலமும் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளிலிருந்து மக்களை விடுவிப்பதாக இருக்கின்றன. அத்தகைய தருணங்களை உருவாக்குவதையும், அதன் வழியே புதிய யதார்த்தங்களைப் பிரக்ஞைக்குக் கொண்டுவருவதையும்தான் செம்பேன் உஸ்மானின் கதைகள் செய்கின்றன. அவருடைய வாழ்க்கைப் பின்னணியும், சமூக வரலாற்றுப் போக்கும், கம்யூனிஸ்ட் இயக்கப் பரிச்சயமும் அவருடைய கதைகளுக்கு மேலும் வலுசேர்க்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in