Last Updated : 24 Jul, 2021 04:06 AM

 

Published : 24 Jul 2021 04:06 AM
Last Updated : 24 Jul 2021 04:06 AM

பொன்முகலி கவிதைகள்: கால நதிக் காதல்

தாழம்பூ
பொன்முகலி
தமிழினி வெளியீடு
விலை: ரூ.160
தொடர்புக்கு: 86672 55103

‘மென்மையான ஒரு பெண்ணுடலுக்குச் சூரியனின் கதிர்கள் மட்டுமே உரிய மரியாதை செலுத்துகின்றன’ என்றார் ஸ்வீடிஷ் பெண் கவிஞர் எடித் சோடெர்கிரான். பொன்முகலியின் கவிதைகளைப் படிக்கும்போது ஒரு பெண்ணின் உடலுக்கு, காதலுக்கு நிலவொளியும் விண்மீன்களின் ஒளியும்தான் உரிய மரியாதை செலுத்துகின்றன என்று தோன்றுகிறது. இரவில் எழுதப்பட்ட கவிதைகளோ என்று நினைக்கும் அளவுக்கு இருளும் இரவும் நிலவும் விண்மீன்களும் அதிகமாக இடம்பிடிக்கின்றன. ‘உன் இரவுகளுக்கென நிலா வளர்க்கும்/ பிரத்யேகமான இரு கண்களைத்/ தேடிக் கண்டடை’ என்கிறார். ‘நிலவு ஒரு தும்பைப் பூவைப் போல/ வானத்தில் மலர்கிறது’ என்பது போலல்லாம் நவீனக் கவிதையில் யாரும் எழுதத் துணிய மாட்டார்கள். ஆனால், பொன்முகலி எழுதுகிறார். இவ்வரிகளின் எளிமை முதலில் இவ்வரிகளைச் சாதாரணமாகக் காட்டினாலும் நிதானமாக வாசிக்கும்போது அழகில் பொலிகிறது.

இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் பிரதான பாடுபொருள் காதல்தான். அதுவும் எப்படிப்பட்ட காதல்? ‘அவன் என்னை அந்தரத்தில் ஒரு வானவில்லாக’ மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கும் காதல். ‘இரவுகளில் நான் உறங்குவதில்லை/ எனது உடலில்/ மலர்ந்துதிர்கிற பூக்களைப்/ பார்த்தபடியிருக்கிறேன்’ என்பது போன்ற கவிதைகள் அவற்றின் கச்சிதத்தன்மையாலும் கவித்துவத்தாலும் பொருளாலும் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாகின்றன.

காதலின் முறுகுபதம் தாபம். ‘பசிய குளங்களின் கரைகளில்/ நிலவைச் சிறு துண்டுகளாக வெட்டிப் புதைத்துச் செல்பவளே./ உன் தடங்களின் மீது என் தாபம்/ எப்படி தூண்டிவிடப்பட்ட தீபத்தைப் போல/ பிரகாசமாய் எரிகிறது பார்’ என்ற வரிகள், பிரமிளின் ‘பசுந்தரை’ கவிதை வரிகளின் தாபத்தையும் அக சந்தத்தையும் தீவிரத்தையும் நினைவுபடுத்துகின்றன. காதலின் முறுகுபதம் தாபமென்றால் எரிபதம் புணர்ச்சி: ‘எனக்கு அப்போது தேவைப்பட்டதெல்லாம்/ பள்ளத்தாக்கில் வீசப்பட்ட உடலைப் போல/ என் உயிரைச் சிதறடித்துவிடக்கூடிய/ ஒரு புணர்ச்சி.’ உடலை அல்ல, உயிரை என்பதைக் கவனிக்க வேண்டும்.

உடலைக் கொண்டாடும் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் முக்கியமானவை. உடல் என்பது ‘வெறுமனே/ ஓர் ஆன்மா வசித்துச் செல்கிற/ கூடு இல்லை./ வேட்கைகளின் நீர் கொந்தளிக்கிற/ பசிய கடல்’ என்கிறார் பொன்முகலி. ‘ஆன்மா என்பது உடலின் சிறை’ என்றார் மிஷெல் ஃபூக்கோ. உடலைப் பழித்தும் இழித்தும் சாஸ்வதமற்றது என்றும் ஆன்மாவே நிலையானது என்றும் கூறுவது மரபு. உயிரைச் சிதறடித்துவிடும் புணர்ச்சியைக் கேட்பவருக்கு சாஸ்வதமாவது மண்ணாவது. உடல் என்பது நிரந்தரமின்மையின் அழகு, நிரந்தரமின்மையின் கவிதை. அதைப் பாடுகிறார் பொன்முகலி. ‘மனதின் பாசாங்குகளற்ற/ என் உடலை நான் நிச்சயமாய் நேசிக்கிறேன்’ என்கிறார்.

விடுதலை என்பது உண்மையில் வெளியில் இல்லை; அதை நாம்தான் குதிரைபோல நம் தோளில் சுமந்துகொண்டிருக்கிறோம் என்கிறார் கவிஞர். ‘தோளில் சுமக்கிற புரவியை/ கீழே விடு… அதன் மீதேறிப் பற, பற, பற… காற்றோடு கலந்துவிடு…’ எனும்போது ஒரு நெருக்கடியைக் கவிதை நம்முள் ஏற்படுத்திவிடுகிறது; நாம் சுமக்கும் புரவியை இறக்கிவிட வேண்டும் என்ற பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது; அப்படிச் செய்ய முடியாததன் குற்றவுணர்வையும் ஏற்படுத்துகிறது. இதைப் பெண்ணியக் கவிதையாக வாசிக்கச் சாத்தியம் இருக்கிறது என்றாலும், ஆண்-பெண் வேறுபாடின்றி எல்லோருடைய விடுதலைக்காகவும்தான் இந்த வரிகள் பேசுகின்றன. இதுபோன்ற சில கவிதைகள் அழகான கவித்துவப் பிரகடனங்களாக இருக்கின்றன.

பொன்முகலியைக் காலம் தொந்தரவு செய்கிறது. அதனால்தான், ‘காலம் ஓர் ஆறு என்று/ வசீகரமாக எழுதிய ஒருவனை’ காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், ‘காலநதி’ என்ற கருத்தாக்கத்தின்படி, காலமானது ஒரு நேர்க்கோட்டில் செல்வது. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற வரிசை அதற்குண்டு. கவிஞரோ தன் கவிதையில் காலத்தைக் குழம்பவிடுகிறார்; வரிசை மாற்றிவிடுகிறார். ஒரு கவிதையில் ஒருவன் நடந்து நடந்து ஓராயிரம் ஆண்டுகள் பின்னே வந்துவிட்டதை உணர்கிறான். ‘காலம் கடிகையைப் போலன்றி/ பின் நோக்கியும் நகரக்கூடியது/ என்கிற சிறு உண்மையைக் கண்டுபிடித்த களிப்பில்/ வானத்தைப் பார்த்துக் கிடந்தான்.’ இவ்வரிகளில் இடம்பெற்றிருக்கும் ‘சிறு உண்மையை’ என்ற சொற்கள்தான் இந்த வரிகளை ஆழமானதாக மாற்றுகின்றன. காலம் காலம் என்று சொல்லி, அதற்கு எல்லோரும் மண்டை பெருக்கச் செய்துவிட்டார்கள்; இவரோ சிறு உண்மைக்குள் அடைத்து, ஓரத்தில் உட்காரவைக்கிறார். ‘காலம் என்று சொல்லும்போது நிகழ்வது என்பதைத் தாண்டி நாம் வேறு எதையும் குறிக்கவில்லையென்றால், எல்லாமே காலம்தான்’ என்கிறார் இயற்பியலர் கார்லோ ரோவெல்லி. காதல் நிகழ்கிறது. அதனாலேயே காலமாக ஆகிறது. ‘யாருமில்லாத பிரதேசத்தில்/ என்ன நடந்துகொண்டிருக்கிறது?’ என்று நகுலன் கேட்கிறார். பொன்முகலியோ யாருமற்ற வீட்டில் கடிகாரத்தைப் பொருத்துகிறார். அந்த வீட்டை ‘உடைத்து உடைத்து/ நகர்கிற நொடிமுள்’ அங்கே காலத்தை நிகழச் செய்கிறது.

மெய்ம்மையின் பரிமாணங்களையும் சாத்தியங் களையும் கவிஞர் ஆழ்ந்தும் விரித்தும் பார்க்கிறார். ‘மூன்றாவது கண்/ எனக் கனவுக்குப் பெயரிட்டேன்.’ என்ற வரிகளில் கனவை ‘மூன்றாவது கண்’ என்று அழைக்கும்போது, சிவனின் ‘மூன்றாவது கண்’ என்ற மரபார்ந்த பொருளைத் தாண்டிப் பார்க்க வேண்டும்; மெய்ம்மையின் வேறு உலகங்களைப் பார்ப்பதற்கான திறப்பு என்று அதைக் கருதும்போது, அசாதாரணமான சாத்தியங்களை அது திறந்துவிடுகிறது. இன்னொரு கவிதையில் ‘காண முடியாதவையெல்லாம்/ இல்லாதவையா?’ என்ற வரிகள், குவாண்டம் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாமல், ‘நிலாவை நான் பார்க்காவிடில் அது இல்லை என்று அர்த்தமா?’ என்று குயுக்தியாகக் கேட்ட ஐன்ஸ்டைனின் கேள்வியை நினைவுபடுத்துகின்றன.
தொகுப்பில் கவிதைகளின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம். ‘ஒரு அன்பை மறுதலிக்க/ நீ நடந்த தொலைவுகள் அதிகம்’ போன்ற வரிகள் மனுஷ்ய புத்திரனின் பாணியை நினைவூட்டுகின்றன. ‘துயரம்’ என்பதைக் கவிஞர் சில இடங்களில் மிகைக் கற்பனைக்கு (romanticize) உள்ளாக்குகிறார்.

இந்தத் தொகுப்பு பொன்முகலிக்கு ஓர் இனிய தொடக்கம். இனி அவர் எழுதப்போகும் கவிதைகளுக்கான சாத்தியங்களையும் செல்திசைகளையும் இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது. இன்னும் விரிவான தளங்களை அவரது கவிதை சென்றடையட்டும்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x