Last Updated : 04 Jun, 2014 10:00 AM

 

Published : 04 Jun 2014 10:00 AM
Last Updated : 04 Jun 2014 10:00 AM

தொழிற்சாலையில் திரியும் பட்டாம்பூச்சிகள்

நவீன வாழ்க்கையின் சிக்கலை அதே காத்திரத்துடன் வெளிப்படுத்த மரபான பழைய வடிவங்களை உடைக்க வேண்டிய திருந்தது. அதன் பிரச்சினைகளும் மன அழுத்தங்களும் அவ்வளவு வீரியமிக்கதாக எழுந்தன. நவீனக் கவிதை இவ்வாறுதான் எழுந்தது எனலாம். அந்தத் துணிச்சல் தந்த உத்வேகத்துடன்தான் மரங்கொத்திச் சிரிப்பு கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 79 கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் அனைத்தும் ச.முத்துவேலின் அனுபவத்தில் விளைந்தவை. கவிதைகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதருடனும் காட்சியுடனும் முத்துவேலுக்கு ஒரு ஸ்திரமான தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பு, உரையாடலாகவோ அக உணர்வாகவோ கவிதைகளில் வெளிப்படுகிறது. இத்தொடர்புப் புள்ளியில்தான் முத்துவேல் தன் கவிதைகளை உருவாக்குகிறார்.

பால்ய கால நண்பன், தனது குழந்தை, அக்கம் பக்கத்து வீட்டு மனிதர்கள் எனப் பெரும்பாலும் மனிதர்களையே முத்துவேல் தன் கவிதைக்குள் சித்திரிக்கிறார். பெரும்பாலான இன்றைய நவீனக் கவிதைகள் மனிதர்களைத் தவிர்த்த உலகையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. இதைத் தவிர்த்து தனக்குள் பாதிப்பை உண்டாக்கிய மனிதர்களுடான அக உணர்வுகளைக் கவிதைகளின் வழியாக வெளிப்படுத்த விரும்புகிறார் என்பது கவனத்துக்குரியது.

அணுமின்சக்திக் கூடத்தில் பணியாற்றும் முத்துவேலின் மனம், தொழிற்கூடப் பூங்காவில் புகுந்த பட்டாம் பூச்சியைப் பிடிக்க ஆர்வம் கொள்கிறது; பயணத்தில் பார்த்த பெண்ணின் கழுத்தில் இருந்த தடத்தைத் தூக்குக் கயிற்றின் தடம் எனப் பிரித்தறிகிறது; தன் பால்ய நண்பனின் தற்போதைய நிலை பரிதாபத்துக்குரியது என்பதைச் சொல்லாமலேயே உணர்கிறது. இன்னும் சில கவிதைக் காட்சிகளில் கரிசனம், பரிவு, சமூக எதிர்வினை ஆகியவற்றையும் முத்துவேல் வெளிப்படுத்துகிறார். இப்படித் தொடர்ந்து கவிஞனின் தனிப்பட்ட குணங்கள் உணர்ச்சிபூர்வ கவிதைகளாக ஆகியுள்ளன. இப்பண்பு தொகுப்புக்குப் பலம் சேர்க்கவில்லை. அதுபோல் கவிதைகள் அனைத்தும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தும் அவற்றின் ஆதாரப் பொருள் தெளிவாக வெளிப்படவில்லை.

முத்துவேல் கவிதைகளுக்கான மிக எளிய மொழியைக் கண்டடைந் துள்ளார். இவரது கவிதைகளுக்குள் முதல் வாசிப்பிலேயே யாரும் எளிதாக நுழைந்து, வெளியேறிவிடவும் முடிகிறது. எளிமையான கவிமொழி பலம் சேர்க்கும்; ஆனால் உறுதியான கட்டமைப்பும், ஆழமும் சிறந்த வாசக அனுபவத்திற்கு அவசியமானவை.

நாங்கள் பார்த்த துறைமுகத்தில்/ தரையோடு பிணைக்கப்பட்டு கப்பல்/ தண்ணீரில் தளும்பிக்கொண்டிருக்க/ சுருட்டி மேலிழுத்து வைக்கப்பட்ட/ சேறு உலர்ந்த நங்கூரத்தில்/ அமர்ந்துகொண்டிருக்கிறது ஒரு பறவை/ நங்கூரம் மண்ணுக்கானது/ கப்பல் நீருக்கானது/ சிறகுகள் வானிற்கானது/ மூவுலகும் கைகுலுக்கும்/ ஒற்றைப் புள்ளி/ அவன் மட்டும் கண்டது. ஆற்றலுடன் வெளிப்பட்டுள்ள இந்தக் கவிதை ச.முத்துவேலின் அடுத்த தொகுப்பு சிறப்புடன் வெளிப்படும் என்பதைக் கட்டியம் கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x