

நிழற்காடு
விஜயராவணன்
சால்ட் வெளியீடு
விலை: ரூ.200
தொடர்புக்கு: 90940 05600
விஜயராவணனின் ‘நிழற்காடு’ சிறுகதைத் தொகுப்பானது, ஒரே வாசிப்பில் வாசிக்க இயலாத கதைகளால் நிரம்பியிருக்கிறது. இருப்பது பத்து கதைகள்தான். ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் மிக்கவை. இந்தத் தொகுப்பில் வலம்வரும் கதாமாந்தர்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் புதிதாய்த் தடம் பதிக்கிறார்கள். இந்த அபத்தமான வாழ்வின் வலிகளிலிருந்து தப்பிக்க முகமூடிகள் அணிந்துகொள்கிறார்கள். உடலிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு நிழல்களாய் அலைகிறார்கள். ஆலமரக்காட்டில் பேச்சியின் சாபத்தின் விளைவாய், மனிதர்கள் உடம்பின்றி அலையும் ‘நிழற்காடு’ கதை, நாட்டில் நடக்கும் ஆணவக்கொலைகளை மையப்படுத்துகிறது.
மனிதர்களை விடவும் மனித உடல்கள் சகல மரியாதையுடன் கௌரவமான முறையில் அடக்கம் செய்யப்படுவதால், சவப்பெட்டிக்குள் நிம்மதியாய்க் கால்நீட்டிப் படுத்துக்கொள்ளும் பிணமாய் வாழ்வது மேல் என்று நினைக்கும் பிணங்களின் கதை ‘சவப்பெட்டி’. சவப்பெட்டிக்குள் முதலில் அப்பா, பிறகு பொம்மையுடன் உள்ளே இறங்கும் எட்டு வயது மகன், பிறகு பாதி உடல் சிதைந்த அம்மா மூவரும் நிம்மதியாய்ப் படுத்தாலும், பெட்டிக்கு வெளியே குண்டு முழக்கங்கள் கேட்கின்றன. கதை கேட்கும் சிறுவனுக்கு அவனது அம்மா, வீதிகளில் குண்டுகள் விழாத, வீடுகள் சிதையாத ‘ஆசிர்வதிக்கப்பட்ட ஊ’ரின் கதையைச் சொல்லும்போது, மத்தியக் கிழக்கு நாடுகளின் யுத்தக் காட்சிகள் மனக்கண்ணில் ஓடுகின்றன. சவப்பெட்டிக்குள் வராத சிறுவர்கள், ஆப்பிரிக்க உள்நாட்டு யுத்தத்தில் கால்பந்து விளையாட்டைத் துறந்து, கைகளில் துப்பாக்கி ஏந்தி அலையும் அவலத்தை ‘உதைக்கப்படாத கால்பந்து’ சிறுகதை சொல்கிறது.
‘உயிர்த் தியாகத்தைவிட ஆகச் சிறந்த உன்னதம் வேறென்ன இருக்க முடியும்’ என்று சொல்லும் புத்தனுக்கும், ‘அது மிகப்பெரும் அபத்தம்’ என்று சொல்லும் வழிப்போக்கனுக்கும் இடையே நடக்கும் தர்க்கம்தான் ‘போதிசத்வா’ கதை. வாடகை வீட்டிலிருந்து புதிதாய்க் கட்டிய சொந்த வீட்டுக்குச் செல்லும் ஒருவரின் கதை ‘சிட்டுக்குருவி’. ஹாலில் தொங்கவிடப்பட்டுள்ள சரவிளக்கில் கூடு கட்டியிருக்கிறது குருவி ஒன்று. அதைக் கலைக்க விரும்பாமல், குருவிகளையும் குஞ்சுகளையும் ரசனையுடன் அணுகும் ஒரு வயதானவரின் பார்வையில் கதை செல்கிறது. காலையில் செய்தித்தாள் படிப்பது, செம்பருத்தி பூப்பதைப் பார்ப்பது; வாசலில் வைத்த தென்னை துளிர்விடுவதுபோல் குருவிகளின் உயிரோட்டமான வாழ்வை அவர் ரசிக்கிறார். மனிதர்களின் குழந்தைமை உணர்வை மீட்டெடுக்கும் கதை இது.
தனது முதல் தொகுப்பிலேயே விரிந்து பரந்த களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜயராவணன். மொழிநடை, கதை சொல்லும் முறையிலும் தனித்துவம் மிளிர்கிறது. எழுத்துகளில் வீரியம் இருக்கிறது. தாமிரபரணிக் கரையிலிருந்து மற்றுமொரு படைப்பாளி புறப்பட்டிருக்கிறார்!