Published : 17 Jul 2021 03:12 AM
Last Updated : 17 Jul 2021 03:12 AM

படைப்புச் சுதந்திரம் விலக்கப்பட்ட கனியா?

ஆதாம்-ஏவாள் கதையும், ஒவ்வொரு காலகட்டத்திலும், மக்களை நேர்வழிப்படுத்த இறைத் தூதர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதும் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட மதங்களின் அடிப்படை நம்பிக்கைகள். இதை உருவகமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்தான், நோபல் பரிசுபெற்ற எகிப்திய எழுத்தாளர் நஜீப் மஹ்பூஸ் எழுதிய ‘நம் சேரிப் பிள்ளைகள்’ (Children Of Alley).

எகிப்து கெய்ரோவில் ஒரு பாலைவனப் பகுதியையொட்டி செல்வச் செழிப்புமிக்க ஒரு மாளிகை இருக்கிறது. அதன் உரிமையாளரான ஜப்லாவி, சர்வ அதிகாரம் படைத்தவர். அவருக்கு ஐந்து மகன்கள். அவர்களுள் ஒருவனான அத்ஹம் மட்டும் அவரது மாளிகையிலுள்ள பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன். ஒருநாள் ஜப்லாவி தன் மகன்களை அழைத்து, தன் சொத்துகளை நிர்வகிக்க அத்ஹமைத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொல்கிறார். இது மற்ற நால்வருக்கும் அதிர்ச்சியூட்டுகிறது. ஜப்லாவியிடம் மூத்த மகனான இத்ரீஸ் கோபமுறுகிறான். இத்ரீஸை மாளிகையை விட்டு வெளியேறக் கட்டளையிடுகிறார் ஜப்லாவி.

ஜப்லாவியின் நம்பிக்கைக்குரிய மகனாக அத்ஹம் அந்த மாளிகையைக் கவனிக்கத் தொடங்குகிறான். பணிப்பெண் ஒருத்தி மீது காதல்கொள்கிறான் அத்ஹம். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இனிதான வாழ்க்கை. இன்னொருபுறம், மாளிகைக்கு வெளியே இத்ரீஸ் மிக மோசமான குணம் கொண்டவனாக மாறிக்கொண்டிருக்கிறான். ஒருநாள் மாளிகைக்குள் நுழைந்து, அத்ஹமிடம் உள்நோக்கத்துடன் உதவி கோருகிறான். ஜப்லாவி தனது உயிலில் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் பார்த்துச் சொல்ல வேண்டும் என்பதுதான் அது. அத்ஹம் மறுக்கிறான். அதன் மூலம் நாமும் நம் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதாக அத்ஹமின் மனைவி உமைமா தூண்டுகிறாள். அத்ஹமும் உமைமாவும் உயில் இருக்கும் அறைக்குச் செல்லும்போது ஜப்லாவி வந்துவிடுகிறார். இருவரையும் மாளிகையை விட்டு வெளியேறக் கட்டளையிடுகிறார். பாலைவனத்தில் நிர்க்கதியாக விடப்படும் அந்தத் தம்பதிக்குச் சந்ததிகள் உருவாகின்றனர். கூடவே, அதிகாரமும் போட்டியும் பொறாமையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் வன்முறையும்!

கடவுளாக ஜப்லாவி, ஆதாமாக அத்ஹம், ஏவாளாக உமைமா, சைத்தானாக இத்ரீஸ் உருவகப்படுத்தப்படுகிறார்கள். இந்நாவல் அத்ஹம், ஜபல், ரிபாஆ, காஸிம், அரபா என்ற ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மேலே நாம் பார்த்தது நாவலின் முதல் பகுதி. அத்ஹம் - உமைமா சந்ததிகள் வழியே மாளிகையின் எதிர்ப்புறத்தில் உருவான சேரியில் வாழும் மக்கள் தங்களை ஜப்லாவியின் வாரிசுகளாகக் கருதிக்கொள்கின்றனர். ஜப்லாவி தன் அறையில் இருப்பதாக அச்சேரி மக்கள் நம்புகின்றனர். ஆதாம் - இத்ரீஸ் வரலாறானது தொன்மக் கதைகளாக அவர்களிடம் புழங்குகிறது.

நாவலின் ஏனைய நான்கு பகுதிகளிலும் இதுதான் கதைக்களம். ஆனால், காலகட்டம் வேறானது. ரெளடிகளின் அதிகாரப் போக்குக்கு எதிராக, மக்களுக்குச் சம உரிமை, தன்மான வாழ்வைப் பெற்றுத்தர, மக்களைப் பாவச் செயல்களிலிருந்து விடுவிக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் தோன்றுகிறார். அப்படி நாவலின் இரண்டாம் பகுதியில் தோன்றுவது ஜபல்; அவர் இறைத் தூதர் மோசஸை நினைவூட்டுகிறார், ஏசுவை மூன்றாம் பகுதியில் வரும் ரிபாஆ, முகம்மது நபியை நான்காம் பாகத்தில் வரும் காஸிம் நினைவூட்டுகிறார்கள்.

நாவலின் இறுதிப் பகுதி, நவீன அறிவியல் கண்டுபிடிப்பின் ஆரம்ப காலகட்டத்தில் நடப்பதான தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் நாயகனான அரபா, நாவலின் ஏனைய பகுதிகளில் வரும் ஜபல், ரிபாஆ, காஸிம் போன்ற நல்வழியைக் காட்டும் தூதுவராக இல்லை. அரபா ஒரு தனியன். அரபா நவீன மனிதனின் சிக்கல்களைப் பிரதிபலிக்கக்கூடியவனாக இருக்கிறான். அறவிழுமியங்கள் அழிந்துபோன காலகட்டத்தில், சராசரி மனிதன் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை, அதிலிருந்து தப்ப முயல அவன் கைக்கொள்ளும் சாத்தியங்களை இப்பகுதிப் பேசுகிறது. ‘பாரிஸ் ரிவ்யூ’வுக்கு நஜீப் மஹ்பூஸ் அளித்த நேர்காணலில், ‘நம் சேரிப் பிள்ளைகள்’ நாவல் தொடர்பான ஒரு கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் கூறுகிறார்: “ஒரு சமூகத்தில், ஒரு புதிய மதம்போல் அறிவியலுக்கான தேவையும் இருக்கிறது என்பதையும், மதக் கோட்பாடுகளுடன் அறிவியல் மோத வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் காட்டவே விரும்பினேன்.”

இந்நாவல் முதலில் 1958-ல் எகிப்திய வாரப் பத்திரிகையில் தொடராக வந்தது. அது பெரும் சர்ச்சைக்கு உள்ளானதால், புத்தகமாக வெளியிட அப்போதைய எகிப்து அரசு தடைவிதித்தது. பிறகு, 1967-ல் பெய்ரூத்தில்தான் முதன்முதலாகப் புத்தகமாக வெளிவந்தது. 14 ஆண்டுகள் கழித்து, இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது. 30-க்கும் மேற்பட்ட நாவல்களும், 350-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியிருக்கும் நஜீப் மஹ்பஸ், 2006-ல் தன்னுடைய 95-ம் வயதில் காலமானார். இவர்தான் அரபு உலகிலிருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்ற முதல் எழுத்தாளர். ‘தி கெய்ரோ டிரையாலஜி’ (The Cairo Triology), ‘நம் சேரிப் பிள்ளைகள்’ (Children Of Alley), ‘தி ஹாராபிஷ்’ (The Harafish) ஆகிய நாவல்கள்தான் நோபல் பரிசு கிடைக்க முதன்மைக் காரணங்கள்.

சல்மான் ருஷ்டிக்கு பத்வா கொடுக்கப்பட்ட சமயம், எகிப்தைச் சேர்ந்த முல்லாவான சேக் உமர் அப்துல் ரஹ்மான், “இந்த பத்வா நடவடிக்கையை நஜீப் மஹ்பூஸ் ‘நம் சேரிப் பிள்ளைகள்’ நாவலை எழுதியபோதே மேற்கொண்டிருந்தால், சல்மான் ருஷ்டி, அவர் எந்த எல்லைக்குள் நின்று எழுத வேண்டும் என்பதை உணர்ந்திருப்பார்” என்றார். ருஷ்டிக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த எழுத்தாளர்களில் மஹ்பூஸும் ஒருவர். அவர் ருஷ்டி எழுதிய விஷயத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், ருஷ்டி அவர் நினைக்கக்கூடியதை எழுதுவதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறார் என்பதன் அடிப்படையில் ஆதரவுக் குரல்கொடுத்தார். அதைத் தொடர்ந்து, 1994 அக்டோபர் 14 அன்று நஜீப் மஹ்பூஸை ஒருவன் கத்தியால் குத்திவிடுகிறான். ருஷ்டிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக மட்டுமல்ல; ‘நம் சேரிப் பிள்ளைகள்’ நாவலுக்காகவும் நிகழ்ந்த தாக்குதல் அது. “மதம் என்பது திறந்த தன்மையுடையதாக இருக்க வேண்டும். இறுக்கமான தன்மை என்பது ஒரு சாபம்” என்று கூறும் மஹ்பூஸ், தன் முதிய வயதிலும் தொழுகையைக் கடைப்பிடித்தவர்.

இந்நாவலை அரபுவிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் பஷிர் அஹ்மது ஜமாலி. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்த இவர், அந்தப் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் ஆப்பிரிக்க ஆய்வு மையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். அரபுவிலிருந்து நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பு என்பதால், வாசிக்கையில் புத்துணர்வூட்டுகிறது!

- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

****************************

நம் சேரிப் பிள்ளைகள்

நஜீப் மஹ்பூஸ்

அரபுவிலிருந்து தமிழுக்கு: பஷிர் அஹ்மது ஜமாலி

ஜேஎன்யுவின் அரபு மற்றும் ஆப்பிரிக்க ஆய்வு மையம் வெளியீடு

விலை: ரூ.895

தொடர்புக்கு: 96502 14138

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x