

ஈழத் தமிழ்க் கவிதைகளின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு தொகுப்பு நூலான ‘Le messager de l'hiver’, [‘ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன்'] கடந்த ஜூன் மூன்றாம் தேதி அன்று, பாரீஸ் மையத்தில் அமைந்துள்ள சிற்றரங்கில் எளிமையுடன் சிறப்பாக வெளியிடப்பட்டது.
தமிழ்-பிரெஞ்சு என இரண்டு மொழிகளில் அமைந்துள்ள இந்நூலில் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் கி.பி. அரவிந்தனின் முப்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகளை மொழியியலாளரும், பிரெஞ்சு உயர் கல்வி ஆய்வு நிறுவன ஆய்வாளரும், கல்வெட்டியலில் சிறப்புத் தகமை பெற்றவருமான அப்பாசாமி முருகையன் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலை ‘றிவநெவ்’(RIVENEUVE) என்ற பிரஞ்சு வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நூலின் அட்டைப் படத்தை ஓவியர் மருது வரைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
புலம்பெயர் சூழலில் மொழிபெயர்ப்பு நூல்களின் தேவை குறித்து அப்பாசாமி முருகையன், “புலம்பெயர்ச் சூழலில், மூன்றாவது தலைமுறைக்குப் பின், முன்னோர் மொழியைத் தக்கவைத்துக்கொள்வது என்பது படிப்படியாகக் குறைந்து ஒரு காலகட்டத்தில் மறைந்துவிடும் என்பது ஒரு கண்டறிந்த கருத்து. இவ்வாறான மொழி பண்பாட்டு இழப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்காகப் புலம்பெயர் சமுதாயங்கள் பல உத்திகளைக் கையாளுகின்றன.
அவற்றுள் முக்கியமான ஒன்றுதான் மொழிபெயர்ப்பு முயற்சியும். ஆனால் மற்ற முயற்சிகளோடு ஒப்பிடும்போது மொழிபெயர்ப்பு சிறிது சிக்கலானது. இருமொழியப் பண்பாட்டினை உள்வாங்கிச் செயல்பட வேண்டியுள்ளதால், பல புலம்பெயர் சூழல்களுள் இருமொழியத் தேர்ச்சி பெறும் முன்பே மூதாதையர் மொழிப் பண்பாட்டு இழப்பு காலூன்றிவிடுகின்றது.
தமிழ் மொழி இலக்கியங்களை ஃபிரஞ்சு, ஆங்கிலம் போன்ற தாங்கள் வாழுகின்ற பகுதியின் முக்கியமான மொழிகளில் மொழிபெயர்ப்பது பின் வரும் தலைமுறையினருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் மிகவும் பயன் உள்ளதாகவும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.