Last Updated : 07 Feb, 2016 12:53 PM

Published : 07 Feb 2016 12:53 PM
Last Updated : 07 Feb 2016 12:53 PM

சங்கப் பாணர்களின் நீட்சியான கவிஞர்

பலன் எதிர்பாராமல் அரும்பெரும் பணிகளில் ஈடுபடுவது சென்ற தலைமுறையினரில் பெரும்பாலானோர் கொண்டிருந்த மாண்பு. எல்லாமே பிரதிபலன் நோக்கிய செயல்பாடுகள் எனச் சமூகம் பயணிக்கும் வேளையில் மாண்புடன் விளங்கிய அந்தத் தலைமுறையினரின் குணநலன்களை வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் கடமை தற்காலத் தலைமுறையினருக்கு உண்டு. அதிலும் கலை சார்ந்த செயல்பாடுகளில் தன்னைப் பிணைத்திருப்போர் தன்னலம் கருதாமல் செய்ய வேண்டிய அரும் பணி இது. அப்படிப்பட்ட ஆளுமைகள் பற்றிய செய்திகள், தகவல்கள், சம்பவங்கள் அடங்கிய வாழ்க்கை வரலாற்றைப் புதிய தலைமுறையினர் அறிந்துகொண்டால்தான் நமது பண்பாடும் பாரம்பரியமும் கட்டிக் காக்கப்படும். உதயமாகும் தலைமுறை தனது கடந்த கால மனிதர்கள் பற்றிய செய்திகளை அறியும்போது, தான் எத்தகைய பாரம்பரியத்தில் பிறப்பெடுத்திருக்கிறோம் என்று பெருமிதமும் பிரியமும் கொள்ளும். அரிய ஆளுமைகளை அறியவைக்க வேண்டிய தருணத்தின் தேவையை உணர்ந்து அதை நிறைவேற்றியுள்ளார் ரவிசுப்பிரமணியன். ஆளுமைகளை வெவ்வேறு வகையில், தான் அறிந்த கலை வெளிப்பாட்டின் மூலம் ஒரு கலைஞன் அறியச் செய்யலாம். ரவிசுப்பிரமணியன் ஆவணப்படம் என்ற வடிவத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.

சங்ககாலப் பாணர்களின் நீட்சி போல் கவிதைகள் பாடிய கவிஞர், சிறுபத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட திருலோக சீதாராம் குறித்த ஆவணப்படத்தை எழுதி இயக்கி நம் முன் படைத்திருக்கிறார் ரவி. மகாகவி பாரதியாரை, அவரின் கவிதைகளை, பொதுமக்களிடம் கொண்டுசேர்த்த வ.ராமசாமி ஐயங்கார்., ஜீவா, பாரதிதாசன் வரிசையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சீதாராமுக்கும் வலுவான இடம் உண்டு என்பதை ஆவணப்படம் சுட்டுகிறது. இலக்கிய நுட்பங்களை அறிந்திருந்தது போலவே இசையின் நுட்பங்களையும் புரிந்துவைத்திருந்ததால், எழுத்தாகவும் உரையாகவும் அல்லாமல் தன் இனிய குரலால் பாரதியின் பாடல்களை உயிர்ப்புடன் பாடி அவற்றின் சாரத்தைப் பரப்பியிருக்கிறார் சீதாராம். பாரதியாரை நேரில் சந்தித்திராதபோதும் அவரது பாடல்கள் வழி அரும்பிய அதிசய உறவாக பாரதியார் - சீதாராம் உறவு இருந்திருக்கிறது. செல்லம்மா பாரதியின் உயிர் பிரிந்ததே சீதாராமின் மடியில்தான் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் சீதாராமின் நெருங்கிய நண்பரும் தமிழறிஞருமான தி.ந.ராமச்சந்திரன்.

கவிதை வாசிப்பு என்னும் கலை

சீதாராமின் தனிநபர் கவிதை வாசிப்பை 1967-ல் நேரில் கேட்ட எழுத்தாளர் அசோகமித்திரன், கவிதை வாசிப்பைத் தான் அனுபவித்த மிகச் சில சந்தர்ப்பங்களில் இது ஒன்று என்கிறார். புதுக்கவிதைகளைக்கூட உள்ளார்ந்து ரசித்து வாசித்தார் சீதாராம் என வியக்கிறார் அவர். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை தயாரித்திருக்கும் இந்த ஆவணப்படத்தில், கரிச்சான்குஞ்சு, க.நா.சு, தி.ஜானகிராமன், வெங்கட் சாமிநாதன், ஜெயகாந்தன் போன்றோரின் மேற்கோள்கள், பாரதியார், பாரதிதாசன், திருலோக சீதாராம் ஆகியோரின் பாடல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி திருலோக சீதாராமின் இலக்கிய வாழ்க்கையையும் லௌகீக வாழ்வின் சில தருணங்களையும் காட்சிச் சித்தரிப்புகளின் உதவியுடன் விவரித்திருக்கிறார் ரவிசுப்பிரமணியன்.

டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்களும் சிபி சரவணனின் ஒளிப்பதிவில் நிலக்காட்சிகளும் இயற்கை அழகின் பின்புலமும் சீதாராமின் காலத்து நிகழ்வுகளைச் சித்தரிக்கும் காட்சிகளில் ரவிசுப்பிரமணியனுக்குப் பெருமளவில் உதவியுள்ளன. ஆவணப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் ஆழமான இசை அனுபவத்தைச் சாத்தியமாக்குகின்றன. திவாகர் சுப்பிரமணியன் இசையில் ஒலிக்கும் பாரதியார் பாடல்களின் மெட்டுகளும் ‘ஆத்திசூடி இளம்பிறை அணிந்து’ எனத் தொடங்கும் சர்வ சமயப் பிரார்த்தனைப் பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதமும் ஆவணப் படத்துக்கு வேறு வண்ணங்களை அளிக்கின்றன.

பாரதிதாசனின் நேசர்

பாரதி போலவே அவரின் தாசரான பாரதிதாசனையும் பிரியத்துடன் நேசித்திருக்கிறார் சீதாராம். பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’ நூலை முழுவதும் மனப்பாடம் செய்து சீதாராம் மேடையில் நிகழ்த்தும் உரையை வியந்தோதுகிறார் பாரதிதாசனின் புதல்வர் மன்னர் மன்னன். அந்த உரையைக் கேட்ட அனுபவத்தை மெயிசிலிர்க்க விவரிக்கிறார் சீதாராமின் சீடர் சக்தி சீனுவாசன். பாரதிதாசனுடன் முரண்பட நேர்ந்த ஒரு சமயத்தில் சீதாராம், “அய்யா கவிஞரே நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை ஆனால் உமது கவிதைகள் எங்களுக்குத் தேவை” எனக் கூறி பாரதிதாசனை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த முரண்பாட்டுக்குப் பின்னர் பாரதிதாசன், பக்கத்து வீட்டிலிருந்து பிராமணரான சீதாராமுக்குத் திருநீறு வாங்கித் தரச் செய்திருக்கிறார். சீதாராமும் அங்கே விருந்து உண்டிருக்கிறார். திராவிட இயக்கத் தலைவரான அண்ணாத்துரை, ‘அக்ரஹாரத்து அதிசயப் பிறவிகளில் இவரும் ஒருவர்’ என சீதாராமைப் பாராட்டியிருக்கிறார். கொள்கை மாறுபாடு, கருத்து முரண்பாடு போன்றவை தனிநபர்களின் உறவையும் கலா ரசனையையும் சிறிதும் சேதாரப்படுத்தவில்லை. இந்தப் பண்பு இப்போது என்னவாகியிருக்கிறது எனச் சிந்திக்கத் தூண்டுகிறது படம்.

சுரதா, சுஜாதா போன்ற எழுத்தாளர்களின் முதல் படைப்பை வெளியிட்டது சீதாராமின் சிவாஜி இதழே. தன் படைப்புகளைப் பிரசுரிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டாமல் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் சீதாராம். இப்படியான தகவல்கள் பொதிந்த இந்த ஆவணப் படம் மூலம் நம் மனதில் உருவாகும் சீதாராம் குறித்த பிம்பத்தில் இலக்கியம் சார்ந்த, தனிநபர் மாண்பு சார்ந்த பெருமிதம் நிரம்பி வழிகிறது. எப்படிப்பட்ட ஆளுமை அவர் என்னும் வியப்பு மேலிடுகிறது. திருலோக சீதாராம் பற்றிய விமர்சனக் கருத்துகள் ஆவணப்படத்தில் இல்லையென்றாலும், பார்வையாளர்களிடம் அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x