

நவீன வாழ்க்கை தமிழுக்கு அளித்த சவால்களில் ஒன்று புதிய சொற்களை உருவாக்குவதற்கான தேவை. அறிவியல், சமூகவியல், மானுடவியல் என ஒவ்வொரு துறையும் வளர்ந்து வரும்போது அது புதிய சொற்களையும் கொண்டுவருகிறது. நவீன துறைகள் பெரும்பாலானவற்றில் தொழுதுண்டு பின் செல்லும் நிலையில் இருக்கும் தமிழ்ச் சமூகம் புதிய துறைகள் சார்ந்த சொற்கள் குறித்த சவாலை எதிர்கொள்வது காலத்தின் கட்டாயம்.
பல மொழிபெயர்ப்பாளர்களும் எழுத்தாளர்களும் இந்தச் சவாலைத் தமக்கே உரிய முறையில் எதிர்கொண்டிருக்கிறார்கள். நீதியரசர் வெ.இரமசுப்பிர மணியனோ அந்த முயற்சியைக் கூட்டி யக்கமாக மாற்றி ஜனநாயகப்படுத்தியி ருக்கிறார். நாளிதழ் ஒன்றில் அவர் எழுதிவந்த தொடரில் வாசகர்களையும் இணைத்துக்கொண்டு இந்த விவாதத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்த முயற்சியில் ஒரு சொல்லின் பின்புலமும் அதன் வெவ்வேறு பொருள் களும் வெளிப்படுகின்றன. பொருத்த மான பொருளுக்கான தேடலை நீதியரசர் விளக்கும் விதத்தில் அந்தச் சொல்லைப் பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் சொல் வேட்டை பன்முகத்தன்மை கொண்ட தேடலாக மாறுகிறது.
Allusion (மறைபொருள்), Common sense (இயல்பறிவு), Ergonomics (பணிச்சூழலியல்), Alter Ego (தன் மாற்றுரு) எனப் பல சொற்கள் சார்ந்த தேடல்கள் பல புதிய விஷயங்களை வெளிப்படுத்துகின்றன. சில தேடல்கள் சுவாரஸ்யமாக உள்ளன. உதாரணம் Acid Test-க்கான தேடல். Dyslexia என்பதற்குக் கற்றல் குறைபாடு என்ப தைவிட, கற்றல் இடர்ப்பாடு என்று சொல்லலாம் என்ற முடிவுக்கு இராமசுப் பிரமணியன் வருகிறார். அந்த முடிவை விடவும் அதற்காக அவர் முன்வைக்கும் காரணம் முக்கியமானது.
புதிதாக உருவாக்க வேண்டிய சொல்லாக்கங்கள் பல இருக்க, ஏற்கெ னவே நிலைபெற்ற சொற்களைத் திரும்பவும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்த்திருக்கலாம். உதாரணம் Allergy. இது ஒவ்வாமை என்னும் பொருளில் பல ஆண்டுகளாக வழங்கிவருகிறது. இதையே ‘மறுகண்டு பிடிப்பு’ செய்வதைவிடப் புதிய சொற்களில் கவனம் செலுத்தியிருக் கலாம். புழங்கிவரும் சொல் குறித்த மாற்றுக் கருத்து இருந்தால் அதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அத்தகைய விவாதங்கள் நூலில் குறைவாகவே உள்ளன.
நூலில் உள்ள ஒவ்வொரு சொல்லையும் பற்றி மேலும் விவாதிக்கலாம் என்பதே இந்த நூலின் முக்கியமான அம்சம். சொல்லாக்கம் குறித்த விவாதங்கள் அதிகம் நடைபெறுவதே மொழியை வளப்படுத்த உதவும் என்பதால் இத்தகைய ஜனநாயகபூர்வமான அணுகு முறை மிகவும் அவசியம்.
சொல் வேட்டை
நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன்
பக்கம் 256
விலை: ரூ.125
நர்மதா பதிப்பகம்
10, நானா தெரு, தி.நகர்
தொடர்புக்கு: 9840226661