ஃபிரான்ஸ் காஃப்காவின் விசாரணை: சுதந்திரமே சிறை

ஃபிரான்ஸ் காஃப்காவின் விசாரணை: சுதந்திரமே சிறை
Updated on
1 min read

சமூகம் என்பது மிகப்பெரிய கற்பனை. சரி - தவறு என்கிற நியாயம் அந்தக் கற்பனையைக் கட்டிக் காக்க உருவாக்கப்பட்ட மாய வலை. கற்பனையை உண்மை என்று நம்பினால் சுதந்திரமாக வாழலாம். நம்பாதவர்கள் சமூகத்துக்கும், அதன் கொள்கைகளுக்கும், அதன் அர்த்தமற்ற சம்பிரதாய சடங்குகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுவர். சமூகத்தால் ஒதுக்கப்படுவர்.

புறக்கணிப்புக்கு உள்ளாகும் இவர்கள் சமூகத்தின் நியாயச் சிறையில் அடைக்கப்பட்டு, நண்பர்கள், உறவினர்கள், மத போதகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் உள்ளிட்ட பலரால் வெவ்வேறு தளங்களில் மூளைச்சலவைக்கு உள்ளாக்கப்படுவர். இதற்குப் பின்னும் நம்பாவிடில் சமூகத்தை விட்டு வெளியேற்றப்படுவர். அதாவது இங்கே சுதந்திரமாக இருப்பவர் ஆயுள் கைதி, வெளியேற்றப்படுவர் சுதந்திரம் பெற்றவர். இதுவே இந்தக் கதையின் அடிநாதம்.

விசாரணைக் கைதி

யோசப்.க இந்தக் கதையின் நாயகன். யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், சுற்றி நடப்பதையும் சட்டை செய்யாமல், ஆன மட்டும் சுதந்திரமாக வாழ முயலும் சராசரி மனிதர். திடீரென்று எதற்கு என்று தெரியாமல், அவரின் அன்றாட வாழ்வுக்கு எந்த பாதிப்புமின்றி விசாரணை கைதியாக்கப்படுகிறார்.

மர்மமான நீதிமன்றத்தில் மர்மமான முறையில், என்ன குற்றம் என்று தெரியாமலேயே விசாரணை நடக்கிறது. முதலில் அவர் இந்த விசாரணையைச் சட்டை செய்யாமல் இருக்க முயல்கிறார். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரும் உதவி என்கிற பெயரில் இவரை அச்சுறுத்துகிறார்கள்.

முடிவில் அவர் விசாரணையை எதிர்கொள்ள ஆயத்தமாகிறார். அப்போது, மேலிடத்து உத்தரவு என்று சொல்லி, இரண்டு காவலர்கள் அவர் உயிரைப் பறிக்கிறார்கள். அதையும் எந்த எதிர்ப்புமின்றி வேடிக்கை பார்த்தபடி உயிரை இழக்கிறார்.

சமூகத்தின் அவலங்கள்

இங்கே நீதிமன்றம் என்பது சமூகத்தையும், நீதிமன்ற நடைமுறைகள் சமூகத்தின் அர்த்தமற்ற சம்பிரதாய சடங்குகளையும், நீதிபதி என்பது சமூகத்தின் அவலமான நியாயத்தையும், குற்றம் என்பது சமூகத்தின் வலையில் மாட்ட வைக்கும் பொறியாகவும், மேலிடம் என்பது சமூகத்தை ஆட்டுவிப்பதாகக் கற்பனை செய்யப்படும் ஏதோ ஒரு நம்பிக்கையையும் குறிப்பதாக உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

தனித்துவ மொழி

எல்லாக் கேள்விகளுக்கும், எல்லா வகை பதில்களும் சாத்தியம். ஆனால், குறிப்பிட்ட வகையான பதில்களை எதிர்பார்த்தே இந்தச் சமூகத்தில் பெரும்பாலும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த பதில்களே பின்னர் நம்பிக்கைகளாக நிறுவப்படுகின்றன என்பதை ஃபிரான்ஸ் காஃப்கா தனக்கு மட்டுமே வாய்க்கப்பட்ட தனித்துவமான எழுத்து மொழியின் மூலம் இந்த நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

சிந்தனையுடனான உரையாடல்

சிலரின் எழுத்துக்கு மட்டுமே நம்முடைய சிந்தனையுடன் நேரடியாக உரையாடும் திறன் இருக்கும். காஃப்காவின் எழுத்து நம்முடைய சிந்தனையுடன் மட்டும் உரையாடவில்லை. அது நம்முடைய சிந்தனையைச் சுய பரிசோதனைக்கு உட்படுத்துகிறது. இந்தப் புத்தகத்தின் மூலம் சமூகத்தின் கட்டுகளிருந்து நம்முடைய சிந்தனையை விடுவிக்கும் மாயாஜாலத்தை நிகழ்த்தி, காஃப்கா நமக்கு அளிக்கும் சுதந்திர இறக்கை அவ்வளவு எளிதில் நம்மை விட்டு அகலாது.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in