Published : 28 Feb 2016 12:07 pm

Updated : 28 Feb 2016 12:07 pm

 

Published : 28 Feb 2016 12:07 PM
Last Updated : 28 Feb 2016 12:07 PM

பெண்களின் குரலை உலகம் கேட்க வேண்டும்: கலீசிய எழுத்தாளர் மரியா ரேமோந்தஸ் நேர்காணல்

கலீசிய எழுத்தாளர் மரியா ரேமோந்தஸ் தேசியம், சமூகம், மொழி, பெண்ணியம் என்று பல தளங்களில் செயல்படுபவர். தமிழ்நாட்டின் சமகாலப் பெண் கவிஞர்களின் எழுத்துகளை இவர் கலீசிய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்தில் நடந்த தி இந்து ‘லிட் ஃபார் லைஃப்’ இலக்கியத் திருவிழாவில் , ‘மாறும் தேசியக் கருத்தாக்கங்கள் - ஒரு பெண்ணியப் பார்வை’ என்ற தலைப்பில் நடந்த அமர்வில் கலந்துகொண்டார். அவரிடம் பேசியதிலிருந்து...

உங்களைப் பற்றி...

நான் ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். கடந்த 22 ஆண்டுகளாகப் பெண்ணிய அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன். தென்னிந் தியாவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும், எத்தியோப்பியா போன்ற நாடுகளிலும் செயல்பட்டுவருகிறேன். இருபதுக்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். கவிதைகள், நாவல்கள், குழந்தை இலக்கியம், கட்டுரைகள் எனப் பல தளங்களில் என் எழுத்துகள் இயங்கினாலும் ஒரு நாவலாசிரி யராக என்னை அடையாளப்படுத்திக்கொள்வதையே நான் விரும்புவேன்.

உங்கள் கவிதைத் தொகுப்பான ‘பிரெசண்டே கன்டினியோ’வைத் (Presente continuo) தமிழ்நாட்டுப் பயணத்துக்குப் பிறகு எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

ஆமாம். 2013-ல் அதை எழுதினேன். இந்தக் கவிதை களில் சில பகுதிகளைத் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு வெள்ளைக்காரப் பெண் முற்றிலும் மாறுபட்ட பண்பாட்டுச் சூழலை எப்படி எதிர்கொள் கிறாள் என்பதை இந்தக் கவிதைகளில் பார்க்க முடியும். இந்தப் பயண அனுபவங்கள் என்னை எப்படி மையத்திலிருந்து விலகி யோசிக்க வைத்திருக்கின்றன என்பதைக் கவிதைகளாக்கியிருக்கிறேன்.

இங்கே இலக்கிய விழாவுக்கு வந்திருந்த எழுத்தாளர் அலெக்சாண்டர் மெக்கால் ஸ்மித்தின் உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருடைய பேச்சில், ஒரு வெள்ளை சமூகத்தைச் சேர்ந்த ஆணுடைய பார்வைகள்தான் அதிகமாக வெளிப்பட்டன. இவரைப் போன்றவர்களுக்கு ஒரு மேலாதிக்க அடையாளம் இருப்பதால், உலகின் இன்னொரு பக்கத்தைப் பார்க்க முடிவதில்லை. இது எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. இதைத்தான் நான் மையத்திலிருந்து விலகி யோசிப்பது என்று சொல்வேன். என்னுடைய கவிதைகள் இதைத்தான் பேசுகின்றன.

நான் ஒரு கலீசிய எழுத்தாளர். கலீசிய கலாசாரத்தைத் தீவிரமாக நம்புகிறேன். ஆனால், அதிலும் பல விஷயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ‘ஜாரா’ என்றொரு கலீசிய ஆடை நிறுவனம், உலகம் முழுவதும் அதற்குக் கிளைகள் இருக்கின்றன. இந்த நிறுவனம், பெண்களின் உழைப்பையும் குழந்தைகளுடைய உழைப்பையும் சுரண்டுகிறது. ஆனால், இந்த நிறுவனத்தைப் பொருளாதார வெற்றிக்கான முன்னு தாரணமாக கலீசியாவில் சொல்கிறார்கள். இதை என்னால் என் சமூகத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. மையத்திலிருந்து விலகி யோசிப்பது என்பதில் இதுவும் ஒன்று. என்னுடைய கவிதைத் தொகுப்பு இதைத்தான் பேசுகிறது.

சல்மா, குட்டி ரேவதி, தமிழச்சி ஆகியோரின் படைப்பு களை ஆங்கிலம் வழியே கலீசிய மொழியில் மொழிபெயர்த் திருக்கிறீர்கள். இதற்கு எந்த மாதிரி எதிர்வினை இருந்தது?

இந்த மொழிபெயர்ப்புகள் கலீசியப் பெண் கவிஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இவர்கள் எல்லோருடைய எழுத்திலும் இருந்த தனித்தன்மை என்னை ஈர்த்தது. அவர்கள் மொழியைக் கையாண்டிருக்கும் விதம், பேசியிருக்கும் விஷயங்கள் என எல்லாமே தனித்தன்மையுடன் இருப்பது என்னை இயல்பாகவே அவர்கள் எழுத்துகளுடன் நெருக்கமாக உணரவைத்தது.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், சுசன்னா அரின்ஸ் (Sussana Arinz) என்ற கலீசியக் கவிஞர் சல்மாவையும், குட்டி ரேவதியையும் சந்தித்தார். அவர்களுடைய அனுபங்களைக் கேட்ட பிறகு, அவர் தன் கவிதைகளை வெளியிடுவதற்கான முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். சல்மாவின் நாவல் தமிழ்நாட்டின் கிராமத்தில் வாழும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையைப் பற்றியது. கலீசியாவில் முற்றிலும் வேறுபட்ட சூழலாக இருந்தாலும், விமர்சகர்கள், வாசகர்கள் இரு தரப்புமே அந்தக் கதையை நெருக்கமாக உணர்ந்தார்கள்.

உங்கள் மொழிபெயர்ப்புகளின் நோக்கம் என்ன?

பல இடங்களில் பலவிதமான அனுபவங்களுடன் பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதை எங்களுடைய கலீசிய சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று நினைத்தேன். மேற்கத்திய நாடுகளில் இங்கேயிருக்கும் பெண்களைப் பற்றி ‘ஒரே மாதிரி’யான பிம்பம் இருக்கிறது. அதே மாதிரி, இங்கே மேற்கத்திய நாட்டுப் பெண்களைப் பற்றியும் ‘ஒரே மாதிரி’யான பிம்பம்தான் இருக்கிறது. இதை உடைப்பதற்கு என் மொழிபெயர்ப்பு உதவியது. எல்லாப் பெண்களின் குரலும் உலகத்துக்குக் கேட்க வேண்டும் என்பது என் விருப்பம்.

ஓர் எழுத்தாளராகப் பெண்ணியத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பெண்ணியத்துக்கென ஒன்றுபட்ட கோட்பாடு எதுவும் கிடையாது. உலகத்தை விமர்சனத்துடன் பார்ப்பதற்கு இதை ஒரு வழியாகச் சொல்லலாம். பெண்களின் அறிவை ஒப்புக்கொள்வதற்கான ஒரு வழி, ஓர் ஆற்றல், பிரச்சினைகளை ஒன்று சேர்ந்து தீர்ப்பதற்கான ஒரு மார்க்கம். என்னுடைய எழுத்தில், இந்த அம்சங்கள் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றன. இதுவரை சொல்லப்படாத கதைகள், அசாதாரணமான கதாபாத்திரங்கள் போன்றவற்றையே நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

நான் பாலினம் தொடர்பான பிரச்சினைகளையும் எழுத்தில் பதிவுசெய்கிறேன். என்னுடைய படைப்புகளில் சில கதாபாத்திரங்கள் லெஸ்பியன்ஸ் அல்லது ஹீட்ரோசெக்சுவல் ஆக இருக்கிறார்கள். ஒரு இலக்கியம் சமூக, வர்க்க, ஆணாதிக்கக் கட்டளைகளைப் பின்பற்றும்போது, வித்தியாசமான பெண்களைப் படைப்புகளில் காண முடிவதில்லை. வித்தியாசமான பெண்களை உலகுக்கு அடையாளப்படுத்துவது பெண்ணிய எழுத்தின் கடமை என்று நினைக்கிறேன்.

கலீசிய மொழி, இலக்கியத்தின் தற்போதைய நிலைமை என்ன?

பதின்பருவத்தில் இருந்தே கலீசிய தேசியச் செயல்பாடுகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டுவருகிறேன். கலீசிய மொழி பேசுபவர்களுக்கு அவர்களுடைய மொழி எதற்கும் உதவாது எனப் போதிக்கப்பட்டுவருகிறது. இந்தப் போதனையை ஸ்பெயின் அரசு, கலீசிய அரசு இரண்டும் சேர்ந்தே செய்துவருகின்றன. என் தந்தையின் காலத்தில் இருந்தே கலீசிய மொழி மீதான இந்த அடக்குமுறை தொடர்கிறது. அப்போது பள்ளிகளில் யாராவது கலீசிய மொழியில் பேசினால் தண்டிக்கப்படுவார்கள்.

கலீசிய மொழியில் எழுதியதற்காக சர்வாதிகார ஆட்சியில் பலரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1939-லிருந்து 1950 வரை எழுதப்பட்ட கலீசிய புத்தகங்கள் எல்லாம் லத்தீன் அமெரிக்காவில்தான் வெளியிடப்பட்டன. சர்வாதிகாரம் 1975வரை நீடித்தது. 50களில்தான் அவர்கள் கலீசியப் புத்தகங்கள் வெளியிடுவதை அனுமதித்தார்கள். எங்கள் மொழி ஒரு ‘உதவாக்கரை’ மொழி என்பதைப் பாடமாகப் படிப்போம். சமூக அந்தஸ்துடன் வாழ்வதற்கு ஸ்பானிய மொழியைத்தான் பேச வேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்பட்டோம்.

கடந்த பத்து ஆண்டுகளாக கலீசியாவில் ஆட்சியில் இருப்பவர்கள், கலீசிய மொழியின்மீது பல விதங்களில் அடக்குமுறை செலுத்துகிறார்கள். இப்போதுகூட கலீசிய மொழிப் பள்ளிகள் கிடையாது. கலீசிய மொழியில் பேசுவதும், எழுதுவதும் இழுக்கு என எங்கள் கலாசார அமைச்சரே சமீபத்தில் பேசியிருந்தார். கலீசிய எழுத்தாளர்களுக்கு அரசின் எந்த விதமான ஆதரவும் கிடைக்காது. இந்தச் சூழ்நிலையிலும் கலீசிய இலக்கியம் வளர்ச்சியடைந்துவருகிறது. ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் கலீசிய எழுத்தாளர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். எங்கள் குழந்தை இலக்கியம் ஐரோப்பாவில் கவனிக்கப்படுகிறது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வட கிழக்குப் பகுதியில் இருக்கும் தன்னாட்சிப் பிரதேசம் கலீசியா. இங்குள்ள மக்கள் கலீசிய மொழி பேசுபவர்கள். உலகம் முழுவதும் சுமார் முப்பது லட்சம் பேர் இந்த மொழியைப் பேசுகிறார்கள். ஆனால், ஸ்பெயின் ஆட்சிக்குட்பட்டிருப்பதால், கலீசிய மொழி தொடர்ந்து அடக்குமுறையைச் சந்தித்துவருகிறது. அடக்குமுறைகளை மீறித் தற்போது கலீசிய இலக்கியம் வளர்ந்துவருகிறது.


- என்.கௌரி,
தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

கலீசிய எழுத்தாளர்கலீசிய மொழி எழுத்தாளர்பெண் எழுத்தாளர்மரியா ரேமோந்தஸ்பெண் கவிஞர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author