Published : 03 Jul 2021 07:21 AM
Last Updated : 03 Jul 2021 07:21 AM
மணிக்கொடி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு கடந்த மே மாதத்தில் நிறைவுற்றது. இதற்கான பெரிய விழா ஒன்றை சென்னை மியூசிக் அகாடமியில் நடத்துவதற்கு ரவிசுப்பிரமணியனின் ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளையும், எம்.வி.வி. குடும்பத்தாரும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், ஓராண்டுக்கும் மேலாகத் தொடரும் நோய்த் தொற்றுக் காலத்தால் அந்த விழாவை அவர்களால் நடத்த இயலவில்லை. விழாவில் வெளியிட எம்.வி.வியின் மொத்தச் சிறுகதைத் தொகுப்பை ‘காலச்சுவடு’ பதிப்பகமும், அவரின் ‘அரும்பு’ நாவலை ‘விஜயா’ பதிப்பகமும், ‘ஒரு பெண் போராடுகிறாள்’ நாவலை ‘போதிவனம்’ பதிப்பகமும் திட்டமிட்டிருந்தன. அதுவும் இயலாமல் போனது. இந்நிலையில், எம்.வி.வி. எழுதி பாதியில் நின்றிருந்த செளராஷ்ட்ரா மொழிப் பண்பாட்டு நாவலான
‘மீய் காய்கெரு’வுக்கு அவரது மகன் குருமூர்த்தி நூல் வடிவம் கொடுத்திருக்கிறார். நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இரு எழுத்தாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. திட்டமிட்டபடி விழாவை நடத்த முடியாவிட்டாலும் எழுத்தாளர்கள் பாவண்ணனுக்கும் சி.எம்.முத்துவுக்கும் அவர்களது வீடுகளுக்கே சென்று, முறையே மூத்த எழுத்தாளர்களான விட்டல் ராவ், நா.விச்வநாதன் கரங்களால் தலா ரூ.25,000 பரிசு வழங்கப்பட்டுள்ளது. பரிசு பெற்றோர் இருவருக்கும் வாழ்த்துகள்.
சென்னை, ராஜபாளையத்தில் புத்தகக்காட்சி
சென்னை: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் அருகிலுள்ள அமரபாரதி திருமண மண்டபத்தில் ஜூலை 1 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி ஜூலை 18 வரை நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 98843 55516
ராஜபாளையம்: மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் புத்தகக்காட்சியானது டி.பி. மில்ஸ் சாலையிலுள்ள திருவள்ளுவர் மன்றத்தில் ஜூலை 11 வரை நடக்கிறது.
10% தள்ளுபடி உண்டு.
தொடர்புக்கு: 88257 55682
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT