Published : 03 Jul 2021 07:19 AM
Last Updated : 03 Jul 2021 07:19 AM

பிறமொழி நூலகம்: இனவெறிக்கு எதிரான பவுன்ஸர்!

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கோலோச்சிய 1970-80-களில் மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர், ஆண்டி ராபர்ட்ஸ், காலின் க்ரெஃப்ட், மால்கம் மார்ஷல் என வேகப் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்களித்தனர். இவர்களில் ஹோல்டிங், அழுத்தமான தடங்களுடன் நிதானமாக ஓடிவந்து, அதிவேகமாகவும் அபாரமான பவுன்ஸர்களையும் வீசுவதில் வல்லமை பெற்றிருந்தார். 1987-ல் ஓய்வுபெற்ற இவர், பின்னர் வர்ணனையாளராகி கிரிக்கெட்டுடனான தொடர்பை இன்று வரை தக்க வைத்திருக்கிறார். அவர் 2011-ல் எழுதிய சுயசரிதைக்குப் பிறகு, இப்போது வெளியாகியிருக்கும் ‘ஒய் வீ நீல் ஹவ் வி ரைஸ்’ நூலின் வழியாக முக்கியமான விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்நூலில் பிரதானமாக மூன்று விஷயங்கள் முக்கியமானவை. முதலாவது, கறுப்பினத்தவர்களின் பெரும் பங்களிப்புகள் வரலாற்றாசிரியர்களால் மறைக்கப்பட்டிருப்பதையும், அதன் அடிப்படையிலான வரலாற்றுக் கல்வியானது, கறுப்பர்கள் தாழ்வானவர்கள் என்று வெள்ளையர்களை மட்டுமல்லாமல், கறுப்பினத்தவரையும் மூளைச்சலவை செய்திருப்பதாகவும் முன்வைக்கிறார். அடுத்ததாக, உசைன் போல்ட் (ஓட்டம்), நவோமி ஒஸாகா (டென்னிஸ்) ஆடம் கூட்ஸ், தியரி ஹென்றி (கால்பந்து), மகாயா நிட்டினி (கிரிக்கெட்), இப்திஹாஜ் மொகமத் (வாள்வீச்சு) உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் ஆழ்தடம் பதித்த கறுப்பினச் சாதனையாளர்களின் அனுபவங்களை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். மூன்றாவதாக, தன்னுடைய அனுபவங்களையும் தான் எதிர்கொண்ட பாகுபாடுகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்னும் கறுப்பினத்தவரைக் காவல் துறை அதிகாரி ஒருவர் கொடூரமாகக் கொன்ற சம்பவமானது கறுப்பின மக்கள் மீதான வெறுப்பு சார்ந்த ஒடுக்குமுறை இன்னும் தொடர்வதற்கான மற்றொரு மறுக்க முடியாத ஆதாரமாக அமைந்தது. அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு போராட்டங்களுக்கு இந்தச் சம்பவம் வித்திட்டது. இதை ஹோல்டிங் விவாதிக்க எடுத்துக்கொண்டபோது கிரிக்கெட் வட்டாரத்தில் முக்கியமான பேசுபொருளானது.

கடந்த ஆண்டு ஜூலை 8 அன்று இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது மழை காரணமாகத் தாமதமானது. அப்போது ஹோல்டிங் தன் சக வர்ணனையாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தது நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட விவகாரம் குறித்துப் பேசத் தொடங்கிய ஹோல்டிங், அதன் பின்னால் இயங்கிய வெள்ளை ஆதிக்க மனநிலை, கறுப்பினத்தவர் மீதான வெறுப்பு, கறுப்பினத்தவர் எங்கு சென்றாலும் நிறவெறி, இனவெறி சார்ந்த வசைகளையும் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது போன்றவற்றை உணர்வுபூர்வமாகப் பேசினார். இந்தச் சூழலுக்கு, ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுகிறவர்களைப் பற்றி எழுதிய வரலாறும் அதைக் கற்பிக்கும் கல்விமுறையும் பங்களித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். மாற்றம் கல்வியிலிருந்து தொடங்க வேண்டும் என்றார். மறுநாள் இந்த விவகாரம் தொடர்பாக ஹோல்டிங்கின் பேட்டி ஸ்கை நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் தான் வாழ்வில் எதிர்கொண்ட நிறவெறிப் பாகுபாடுகளை இன்னும் விரிவாகப் பேசினார்.

கிரிக்கெட் வீரர்கள் எவரும் தன்னை இனவாத இழிவு செய்ததில்லை என்றாலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என கிரிக்கெட் விளையாடச் சென்ற பல நாடுகளில் தானும் தன்னுடைய அணித் தோழர்களும் இனவாத வசைகளையும் பாகுபாட்டையும் எதிர்கொண்ட நிகழ்வுகளை விவரித்தார். இங்கிலாந்தில் டாக்ஸி டிரைவர் தனக்குச் சேவை அளிக்க மறுத்ததையும், ஆஸ்திரேலியாவில் நட்சத்திர விடுதியில், தம் அணி வீரர்கள் பயன்படுத்திய மின்தூக்கியை வெள்ளை நிறவெறியர் ஒருவர் பயன்படுத்த மறுத்ததையும் நினைவுகூர்ந்திருக்கிறார். அவர்கள் கிரிக்கெட்டில் வல்லமை பொருந்தியவர்களாகவும் புகழ்பெற்றவர்களாகவும் இருந்ததால், அப்போது அத்தகைய இனவாதத் தாக்குதல்களைச் சிரிப்புடன் கடந்துசெல்ல முடிந்தது என்றார். தனக்கு நிகழவில்லை என்பதற்காக ஒரு கொடுமை யாருக்குமே நிகழவில்லை என்று சமாதானம் அடைந்து, உண்மையைக் காண மறுக்கும் மனப்போக்கைப் பற்றியும் ஹோல்டிங் கேள்வி எழுப்பினார்.

இந்தப் பேச்சுக்குப் பிறகு, உலகெங்கிலும் இருந்து தொலைபேசி உரையாடல் வழியாகவும் ஊடகங்கள் வழியாகவும் தன்னை வந்தடைந்த ஆதரவுக் குரல்கள் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக ஹோல்டிங் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, அந்த ஒற்றை உரையாடலுடன் நிறுத்திக்கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தார். கல்விதான் மாற்றத்துக்கான வழி என்று உளப்பூர்வமாக நம்பும் ஹோல்டிங், இனவாதத்துக்கு எதிரான செயல்பாட்டின் அடுத்த கட்டமாக எழுதியதுதான் இந்த நூல். கிரிக்கெட் களத்தில் பவுன்ஸர்களை வீசி, மட்டையாளர்களைத் திக்குமுக்காட வைத்த ஹோல்டிங்கின் இந்த நூலானது வெள்ளை இனவெறியை அடித்து நொறுக்கும் பவுன்ஸராக அமையட்டும்.

ஒய் வீ நீல் ஹவ் வி ரைஸ்
மைக்கேல் ஹோல்டிங்
சைமன் & சூஸ்டர் வெளியீடு
விலை: ரூ.699

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x