Published : 03 Jul 2021 07:18 AM
Last Updated : 03 Jul 2021 07:18 AM

நூல்நோக்கு: சமூக நீதிக்கான வ.உ.சி.யின் குரல்

சேலத்தில் 1927 நவம்பரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வ.உ.சிதம்பரனார் ஆற்றிய தலைமை உரையைத் தனி நூலாக்கியிருப்பதன் மூலம், அதைக் குறித்த ஒரு சிறப்புக் கவனத்தை ஈர்த்திருக்கிறது ‘யாப்பு’ வெளியீடு. அன்றைய இந்தியாவில், சுய அரசாட்சிக்கான உடனடித் தேவை, அரசாட்சியின் வகைகள், ஒத்துழைப்பும் ஒத்துழையாமையும் இணைந்த அரசியல் உத்தியைப் பின்பற்ற வேண்டியதன் அவசியங்கள், பிராமணர்களுக்கும் அல்லாதாருக்கும் இடையிலான முரண்பாடுகள், மத நல்லிணக்கம், தனியுடைமையையும் பொதுவுடைமையையும் பாகுபடுத்திப் பார்க்கவியலாத நிலை, வகுப்புவாரித் தொகுதிகளுக்கான தேவைகள், வறுமைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்க அரசே வேளாண் பண்ணைகளையும் தொழிற்சாலைகளையும் தொடங்க வேண்டியதன் அவசியம், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துதல், தமிழுக்கென்று தனிப் பல்கலைக்கழகம், சித்த மருத்துவத்தை வளர்த்தெடுத்தல் ஆகியவை இந்த உரையின் முக்கிய அம்சங்கள். நீதித் துறை நடுவர்கள் காவல் துறையின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டு இயங்கும் நிலை, வக்கீல்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு அவர்களுக்குக் கட்சிக்காரர்களைப் பிடித்துக் கொடுக்கும் ‘டௌட்’களின் ராஜ்ஜியம் ஆகியவை குறித்த வ.உ.சி.யின் கடுமையான விமர்சனங்கள் அன்றைய நீதிவழங்கு முறை குறித்த வரலாற்றுப் பதிவும்கூட.

இந்த உரையில் வெளிப்படும் சமூக நீதிப் பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, பேராசிரியர் வீ.அரசு எழுதியுள்ள முன்னுரை. அதே ஆண்டில், வ.உ.சி. பேசிய வேறொரு மாநாட்டு உரையையும் மேற்கோள் காட்டி, பெரியாரும் வ.உ.சி.யும் காங்கிரஸுக்கு வெளியிலும் உள்ளுமாக இருந்து சமூக நீதி அரசியலில் பங்கெடுத்துக்கொண்டதை விளக்கியிருக்கிறார் வீ.அரசு. சென்னை மாகாணச் சங்கம் என்ற பெயரில், காங்கிரஸ் இயக்கத்துக்குள்ளாகவே இயங்கிய வகுப்புரிமை ஆதரவுக் குரல்களை நினைவூட்டுவதாக இந்த முன்னுரை அமைந்துள்ளது. வ.உ.சி.யின் சேலம் மாநாட்டு உரையைப் படிக்கிறபோது, அது பெரியாரின் உரையா என்று சந்தேகம் எழுந்தாலும்கூட அது நியாயமே. ஆனால், ஈ.வெ.ராமசாமியைப் பெரியார் என்றழைக்கும் வழக்கம் இருக்கையில், பதிப்பகத்தார் வ.உ.சி.யை வார்த்தைக்கு வார்த்தை பெரியவர் எனச் சுட்டும் நோக்கம் மட்டும் விளங்கவில்லை.

அரசியல் பெருஞ்சொல்
வ.உ.சிதம்பரனார்
யாப்பு வெளியீடு
கொரட்டூர், சென்னை-76.
விலை: ரூ.50
தொடர்புக்கு:
90805 14506

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x