Published : 03 Jul 2021 03:11 AM
Last Updated : 03 Jul 2021 03:11 AM

சங்கப் பாடலின் ஊடாகப் பண்பாடு

மானிடவியல் ஆய்வாளர் பக்தவத்சல பாரதியின் ‘பண்டைத் தமிழ்ப் பண்பாடு’ எனும் முக்கியமான ஆய்வுநூல், சங்க இலக்கியத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அளிக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை, இலக்கியத் தரவுகளின் அடிப்படையில் இந்நூல் கட்டமைக்கிறது. இப்பிரதி உருவாக்கத்தின் பின்னணியில் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமே இருக்கின்றன. துணைக்குத் தொல்காப்பியம். இந்நூல் உருவாக்கத்துக்குத் தமிழும் ஆங்கிலமுமாக முந்நூறுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்!

சங்க காலத்தில், குறவரும் எயினரும் ஆயரும் உழவரும் பரதவரும் நிலைகுடிகளாக இருந்தனர். அந்நிலைகுடிகளின் கொடையில் பாணர், பொருநர், கூத்தர், விறலியர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அலைகுடிகள் வாழ்ந்தனர். மேலும், இச்சமூகத்தில் ஆண்களைவிடப் பெண்களின் பங்களிப்பு மேலானதாக இருந்திருக்கிறது. ஆண்கள் வேட்டைக்குச் சென்றபோது, பெண்கள் உணவு சேகரிக்கக் குழுவாகக் காட்டுக்குச் சென்றனர். கிடைக்கும் உணவைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் ‘பாதீடு’, குறிஞ்சி நிலத்தின் பொருளியல் பண்பாக இருந்திருக்கிறது. பால், தயிர், மோர், நெய் உள்ளிட்ட பொருட்களைப் பிறருக்குக் கொடுத்துப் பண்டமாற்றும் முறை முல்லை நிலத்தில் உருவாகியிருக்கிறது. மீன், சங்கு, முத்து, பவளம் உள்ளிட்டவற்றை நெய்தல் நில மக்கள் வணிகம் செய்திருக்கிறார்கள். குறிஞ்சியிலும் முல்லையிலும் வன்புல (புன்செய்) விவசாயம் உபதொழிலாக நடைபெற்றபோது, மருத நிலத்தில் மென்புல (நன்செய்) விவசாயம் முழு நேரத் தொழிலாக நடந்திருக்கிறது. நான்கு நிலங்களிலும் தங்களுக்கான உணவை அவர்களே உற்பத்திசெய்த நிலையில், பாலை நிலத்தவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுத் தங்களுக்கான உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துகொண்டனர்.

பக்தவத்சல பாரதி, சங்க இலக்கியத்தை மிக நுட்பமான ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். முல்லை நிலத்தில் வசிப்பவர்களைப் பொதுவாக ஆயர்கள் என்பர். ஆனால், இந்நிலத்தில் வாழ்ந்த திணைக்குடிகளான அண்டர், இடையர், குடவர், கோவலர், பூழியர், பொதுவர் என ஒவ்வொருவர் குறித்தும் சங்கப் பாடல்களில் இடம்பெறும் தரவுகளைக் கொண்டு அவர்களின் தனித்த பண்புகளை விரிவாக எழுதியிருக்கிறார். இவ்வாறு ஒவ்வொரு நிலம் சார்ந்தும் வசித்த உபகுடிகளின் பண்பாட்டைத் தம் ஆய்வுவழி பக்தவத்சல பாரதி கண்டடைந்திருக்கிறார். பாலை நிலத்தவர்களின் வழிப்பறிச் செயல், மன்னர்களுக்குத் தெரிந்தேதான் நடைபெற்றிருக்கிறது. போருக்குப் பிந்தைய நாட்களில் மறவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையாக இச்செயல் இருந்திருக்கிறது. இந்த நுட்பமும் விரிவும்தான் இந்நூலைத் தனித்துவமாக்குகிறது.

பக்தவத்சல பாரதி, நிலைகுடிகளைவிட அலைகுடிகள் குறித்த ஆய்விலேயே சிரத்தையுடன் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். இவர், தன் முனைவர் பட்ட ஆய்வை அலைகுடிகள் குறித்து நிகழ்த்தியவர். ‘பாணர் இனவரைவியல்’ என்ற நூலையும் எழுதியுள்ளார். இந்நூலும் வீரயுக அலைகுடிகளான ‘பாணர் சமூகம்’ குறித்து விரிவாகப் பேசுகிறது. துடியர், கோடியர், வயிரியர், கண்ணுளர் போன்ற பதினேழு வகையான பாண் குடிகள் பற்றி எழுதியிருக்கிறார். இவர்கள்தான் பண்டைச் சமூகத்தின் கலைஞர்கள். இவர்கள் வழியாகத்தான் நிகழ்த்துக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. நிலைகுடிகளுக்குக் கலைச்சேவை செய்த இவர்கள், ஐந்து நிலங்களிலும் பயணித்திருக்கிறார்கள். ஒரு நிலத்திலிருந்து மற்றொரு நிலத்துக்கு இவர்களினூடாகவே பண்பாடும் கலையும் சடங்குகளும் பரவலாக்கப்பட்டிருக்கின்றன. இவர்களின் கூற்றாகத்தான் ஆற்றுப்படை நூல்கள் பாடப்பட்டிருக்கின்றன. ஔவையார் இச்சமூகத்தின் பிரதிநிதி என்கின்றன தற்கால ஆய்வுகள். செல்வாக்குடன் இருந்த இச்சமூகத்தினர், பின்னர் வீழ்ச்சியும் அடைந்திருக்கிறார்கள். பக்தவத்சல பாரதி இதையும் சான்றுகளுடன் எழுதியிருக்கிறார்.

தொல் சமூகத்தில் பெண்களுக்கான இடம் குறித்தும் இப்பிரதி விரிவாகப் பேசுகிறது. ‘ஒண்தொடி கணவ’, ‘சேயிழை கணவ’ என மனைவியை முன்னிறுத்திக் கணவனை விளிக்கும் பண்பு அக்காலத்தில் இருந்திருக்கிறது. இது தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், மகனையும் மகளையும்கூட ‘வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்’, ‘சிறுவர் தாயே’ என்று பெண்களை முன்னிலைப்படுத்தி அடையாளம் கண்டிருக்கின்றனர். பெண் குழந்தையைக் கடவுளிடம் வேண்டிப் பெறும் தன்மையையும் (ஐங்.257) சங்க காலத்தில் காண்கிறோம்.

தொல் சமூகத்தில் பெண்கள் பூசாரிகளாக இருந்துள்ளனர். பெண்களைக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கும் உரையாடல்கள் அவ்வப்போது பொதுவெளியில் நடைபெற்றுவருகின்றன. அந்த உரையாடலுக்கு வலுசேர்க்கும் சான்றுகள் சங்க இலக்கியத்திலேயே (திருமுருகாற்றுப்படை) காணப்படுகின்றன. இதன் தொடர்ச்சியை சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். சங்க காலத்தில் திருமணம் இரவில் தொடங்கி பகலில் முடிந்திருக்கிறது. இத்தன்மை இன்றும் தொடர்வதை அறியலாம். மேலும், வயது முதிர்ந்த பெண்களே திருமணத்தைத் தலைமையேற்று நடத்திவைத்துள்ளனர். மணப்பெண்ணின் தாய்க்குப் பால்கொடுத்த கூலியை (முலைவிலை) கொடுத்தே திருமணங்கள் நடைபெற்றுள்ளன. தாலி கட்டும் நடைமுறை அப்போது வழக்கத்தில் இல்லை. இத்திருமணங்கள் பெரும்பான்மை ஒரு சமூகத்துக்குள்ளே நிகழும் அகமண முறையிலேயே நடந்துள்ளதையும் பக்தவத்சல பாரதி விரிவாக எழுதியிருக்கிறார்.

பெண்களை முன்னிறுத்தி இயங்கிய இதே சமூகத்துக்குள்தான் அவர்களுக்கு எதிரான நிகழ்வுகளும் சடங்குகளும் நடந்துள்ளன. பெண் குழந்தை பிறப்பதற்குக் கடவுளை வேண்டிய இச்சமூகம்தான், ஆண் மக்களை ஈன்றவர்களுக்கு மணமக்களை வாழ்த்த முன்னுரிமை கொடுத்திருக்கிறது. ‘தொன்முறை வதுவை’, ‘பின்முறை வதுவை’ போன்ற பலதார மணங்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. வாரிசுகளுக்காக ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்துள்ளனர். கணவன் சிதையுடன் மனைவி உடன்கட்டை ஏறுதல் தலைக்கற்பாகவும், கணவனை அடக்கம் செய்யும் தாழியில் மனைவி உயிருடன் அடங்க விழைதல் இடைக்கற்பாகவும், கணவனது இறப்புக்குப் பின்பு கைம்மை நோன்பிருப்பது கடைக்கற்பாகவும் முன்மொழியப்பட்டதும் அச்சமூகத்தில்தான். ஒரு பொற்காலச் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த இதுபோன்ற இழிநிலைகளையும் சேர்த்தேதான் இன்று பேச வேண்டியுள்ளது. இதைத்தான் பக்தவத்சல பாரதி இந்நூல்வழிச் செய்திருக்கிறார்.

- சுப்பிரமணி இரமேஷ், ‘எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: ramesh5480@gmail.com

****************************************

பண்டைத் தமிழ்ப் பண்பாடு

பக்தவத்சல பாரதி

அடையாளம் வெளியீடு

கருப்பூர் சாலை, புத்தாநத்தம்-621 310.

தொடர்புக்கு: 04332 273444

விலை: ரூ.350

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x