Last Updated : 22 Dec, 2015 10:25 AM

 

Published : 22 Dec 2015 10:25 AM
Last Updated : 22 Dec 2015 10:25 AM

மனுசங்க.. 32: வாழ்க்கை ஒரு வட்டம்!

இந்தக் காலத்தை என்னெவென்று சொல்றது? எப்போது பார்த்தா லும் காலம் ஒன்றுபோலவே இருப்பதில்லை.

இந்தக் காலத்தில் சின்ன வட்டம் என் றும் பெரிய வட்டம் என்றும் இருக்கிறது.

சின்ன வட்டம் என்பது முப்பது ஆண்டுகள். பெரிய வட்டம் என்பது அறுபது ஆண்டுகள்.

சின்ன வட்டம் என்பது சனியை மனசில் வைத்துச் சொன்னது என்பார்கள்.

பெரிய வட்டம் என்பது தமிழ் ஆண் டின் அறுபது ஆண்டு வருடப் பெயர் களை வைத்துச் சொன்னது என்பார்கள்.

ஒரு மனுசனுக்கு ஒரு பெரிய வட்டம் வந்து முடிந்த அன்றுதான் மணிவிழாக் கொண்டாடுகிறான்.

அறுபது வருவதற்கு முன்னால் பய லுக்கு ஒரு பெரிய்ய கண்டம் வரும் என்று சொல்லுவார்கள். அந்தக் கண்டத்துக்கு பீம கண்டம் என்று பேர் வைத்துள்ளனர். இது சுமார் அம்பத்திநாலு வயசுக்கு வரும். அப்போதுதான் நீரிழிவு நோய் சர்க்கரை நோய் போன்றவை எல்லாம் வந்து கதவைத் தட்டுமாம்.

பெத்தைய்யாத் தாத்தாவுக்கு எந்த வட்டத்திலும் வந்து மேற்சொன்ன எந்த பிரச்சினையும் எட்டிப் பார்க்கவில்லை. எதுவுமே அவருக்கு ஆகவில்லை. அவர் திடகாத்திரமாக கல்லுப்பிள்ளையார் கணக்காக எப்பவும் போல மனுசர் அப் படியேதான் இருந்துவருகிறார். ஆனால் அவருடைய சொந்தக் குடும்பம்தான் ரொம்பவும் உருக்குலைந்து சின்னா பின்னமாகிப் போனது. என்ன செய்வது சில குடும்பங்கள் இப்படி ஆவது சகஜம்தான்.

ஒருநாள், அவர் சின்னச் சின்ன எட்டு கள் எடுத்து வைத்தபடி, குடுகுடு என்று ஓடுவதைப் பார்த்தேன். அவருடைய வீட்டுக்கான சலவைக்காரி நாலே எட்டுகளில் அவரைப் பிடித்து, அடம்பிடிக்கும் பிள்ளையை மடக்கிக் கொண்டுப் போவதைப் போல கொண்டு போனாள்.

அவர் உடுத்தியிருக்கும் அழுக்கு வேட்டியைத் துவைக்கக் கொண்டுபோக வேண்டியிருந்தது அவள். அதற்காகத் தான் அவள் அவ்வளவு மெனக்கட்டு அவரை துரத்திக்கொண்டு ஓடியிருக் கிறாள்.

அழுக்குப் போக துவைப்பதற்கு அவர் மனசார ஒருநாளும் தன்னோட வேட்டியை அவிழ்த்துக் கொடுத்ததே இல்லை.

விடமாட்டாள் என்று தெரிந்துவிட்டால் தன்னை விடுவித்துக்கொண்டு அறைக் குள் போவதுதான் தெரியும். தன்னை உள்ளே மறைத்துக்கொண்டு அறைக் குள் இருந்து அழுக்கு வேட்டி வந்து வெளியே விழுவதுதான் தெரியும்.

இப்படியும் உண்டா என்று சிரித்துக் கொண்டே அதை அவள் எடுத்துக் கொண்டு போவாள்.

பிறகொருநாள் அவர், அவள் கண்ணில் படாமல் ஓடும்போது என்னைக் கடந்து ஓட வேண்டியிருந்தது. நான் அவரை மடக்கி நிறுத்தி, ‘‘எதுக்குய்யா ஓடணும்? இந்த அழுக்கு வேட்டியைக் கழற்றித் தந்துவிட வேண்டியதுதானே’’ என்று கேட்டேன்.

அதுக்கு அவர் சொன்னார்:

‘‘கொடுத்திறலாம் மாப்ளே; இந்த ஒத்த வேட்டிதாம் என்கிட்ட இருக்கு’’ என்றார்.

நான் அசந்து சிலை ஆனேன்.

எத்தனை வேட்டிகள், சேலைகள் பெற்றுக்கொண்டு போயிருப்பார்கள் இந்த வீட்டிலிருந்து ஏழை மக்கள். எவ்வளவு தானங்கள் செய்திருப்பார்கள்? புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது காலம் அந்த வீட்டை.

மனம் கனத்தது எனக்கு!

- நிறைந்தது

நிறைவாக ஒரு கடிதம்

பிரியமுள்ள… எனது வாசகர்களுக்கு வணக்கம்!

தொடர்ந்து செவ்வாய்க்கிழமைதோறும் உங்களுக்காக எழுதிக் கொண்டிருந்தேன் என்று நான் இதை நினைக்கவில்லை.

‘தி இந்து’ தமிழ் பத்திரிகை எழுத்து வழியாக உங்களோடு தொடர்ந்து என்னைப் பேச வைத்தது என்றுதான் இதை நான் எடுத்துக்கொள்கிறேன்.

நான் பார்த்து ரசித்த, உணர்ந்த, என்னை பாதித்த, சக மனிதர்கள் அத்தனை பேரையும் இந்த ‘மனுசங்க’ தொடர்ல பதிவு செஞ்சுட்டேன்னு சொல்ல மாட்டேன். இன்னும் சொல்லப் போனா மனதளவிலும் எழுத்தளவிலும் இந்த ‘மனுசங்க’ தொடர் முடிந்துவிடவில்லை.

காலமெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கலாம்தான். ஆனால், இந்த எழுத்து வடிவத்தை சற்று மாற்ற நினைக்கிறேன்.

தொடர் போல இல்லாமல், இஷ்டப்படி அவ்வப்போது எழுதச் சொல்கிறது மனசு. அப்படியே எழுதுவேன். தெரிந்தவைகளை எல்லாம் சொல்வேன். சீக்கிரத்தில் சந்திப்போம்.

உங்கள்

கி.ராஜநாராயணன், புதுச்சேரி- 8

முந்தைய அத்தியாயம்: >மனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x