Last Updated : 27 Jun, 2021 03:12 AM

 

Published : 27 Jun 2021 03:12 AM
Last Updated : 27 Jun 2021 03:12 AM

சிறுகதைச் சாதனையாளர் தி.ஜா.

மனிதர்களைக் கறுப்பு-வெள்ளை என்று பிரிக்க முடியாது. எல்லா குணங்களின் கலவைதான் மனித இயல்பு. அவற்றிலிருந்து ஒன்றிரண்டு குணங்கள் துருத்திக்கொண்டிருக்கும். அந்தக் குணங்களே அந்த மனிதர்களின் அடையாளமாக ஆகிவிடும். அப்படிப்பட்ட குணங்களை தி.ஜா. தனது கலையின் பூதக் கண்ணாடி வைத்துப் பெரிதுபடுத்திப் பார்க்கிறார். கொஞ்சம் பிசகினாலும் மிகையாகவோ கறுப்பு-வெள்ளையாகவோ ஆகிவிடும். அப்படி ஆகாமல் தடுக்கும் ஒரு புள்ளியை தி.ஜா. ஒவ்வொரு கதையிலும் தொட்டுவிடுகிறார். இந்தப் புள்ளியானது அன்பாக இருக்கலாம்; நெகிழ்ச்சியாக இருக்கலாம்; குற்றவுணர்வாக இருக்கலாம்; பெருந்தன்மையாக இருக்கலாம்.

குணங்களின் ரூபங்கள்

பொறாமையின் வடிவமாக வருகிறார் ‘பாயசம்’ கதையின் சாமநாது; அந்தப் பொறாமை பலூனையும் உடைத்துவிடும் ஒரு முள் அவர் பெண்ணின் பார்வையில் தோன்றுகிறது. கனிவின் வடிவமான ஆசிரியர் ‘முள் முடி’ கதையின் அனுகூலசாமி; அவருக்கும் ஒரு முள் முடி அவரால் தண்டிக்கப்பட்ட மாணவன் தருகிறான். ‘சத்தியமா?’ கதையின் சிறுவன் சத்தியம் தவறாதவன், அதனால் அவனுக்கு உயிரான ஒரு நாள்காட்டியை இன்னொரு சிறுவனிடம் இழக்கிறான். தங்கள் பிள்ளை அந்த அளவுக்கு அசடாக இருக்கிறானே என்று வருத்தப்படும் பெற்றோர், எப்படியாவது அந்த நாள்காட்டியைத் திரும்பி வாங்கும்படி அவனிடம் கூறுகிறார்கள். அவனோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன் என்பதால், நாள்காட்டிக்குப் பதிலாக உயர் ரக ரப்பர் ஒன்றை வாங்கி வருகிறான். ‘கண்டாமணி’ கதையில் பிராயச்சித்தத்துக்காக மார்க்கம் என்ற பாத்திரம் கோயிலுக்கு உபயம் அளிக்கும் கண்டாமணி ஒலிக்கும்போதெல்லாம் அவருக்கு அது குற்றவுணர்வைத் தூண்டிவிடுகிறது. ஒரே ஒரு நாள் தனக்கு ஹெட்மாஸ்டர் பதவி கிடைத்ததை ஜில்லாவே நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வேறு எந்தக் காரணமும் இல்லாமல் பள்ளிக்கு விடுமுறை விடுகிறார் ‘கடைசி மணி’ கதையின் ஆராவமுது. இப்படி தி.ஜா.வின் பற்பல பாத்திரங்களும் வெவ்வேறு குணாம்சங்களின் வார்ப்புகள்.

ஒரு துளி அன்பு

ஒருவர் மோசமானவராகக் காட்டப்படுகிறார் என்றால், அவரது நெஞ்சில் ஒரு துளி அன்பைச் சேர்த்து அவரை நெகிழ்த்திவிடுகிறார் தி.ஜா. அவரது புகழ்பெற்ற ‘பரதேசி வந்தான்’ கதையில் வரும் வக்கீல் இப்படிப்பட்டவர்தான். எப்பேர்ப்பட்ட படுபாதகக் கொலை வழக்கையும் தன் வாதத் திறமையால் வெல்லக்கூடிய வக்கீல் அவர். எந்த அபஸ்வரத்தையும் சங்கீதத்திலும் வாழ்க்கையிலும் பொறுக்க முடியாதவர். அவருடைய ஒரே பிள்ளையின் கல்யாண விருந்தின்போது, வீட்டுக் கூடத்தில் முக்கியஸ்தர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிடும் பந்தியில் ஒரு பிச்சைக்காரரை அவர் பார்த்துவிடுகிறார். அவரைத் தரதரவென்று இழுத்து வெளியில் தள்ளிவிடுகிறார் வக்கீல். அடுத்த மாதம் அதே நாள் இங்கே வந்து சாப்பிடுவதாகச் சாபமிட்டுச் செல்கிறார் அந்தப் பிச்சைக்காரர். அதே நாள் மாலையில் மயங்கி விழும் மணமகன் இறந்துபோகிறான். பிச்சைக்காரர் தான் சொன்ன தேதியில் வாசலில் வந்து நிற்கிறார். அவர் சாபமிட்டது நடந்துவிட்டது என்கிறார் வக்கீல். “என் பசி சாபமிட்டது” என்கிறார் பிச்சைக்காரர். “அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க உமக்கு… தெம்பு இல்லை. அந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு உம்மிடம் இல்லை… உம்முடைய கல்நெஞ்சம் வெறும் வலுவில்லாத கல்நெஞ்சம். துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால் அது கம்பீரமாக நிற்கும்” என்கிறார் பிச்சைக்காரர். நாம் எல்லோரும் மிகுந்த அறிவுடையவர்களாக இருக்கிறோம்; பலரும் அளவற்ற அதிகாரம் கொண்டவர்களாக இருக்கிறோம். இதில் துளி அன்பு கலவாததால்தான் இவ்வளவு பெரிய போர்களும் ஏற்றத்தாழ்வுகளும் பிரச்சினைகளும். ‘என்பி லதனை வெயில்போலக் காயுமே/ அன்பி லதனை அறம்’’ என்ற திருக்குறளின் விளக்கம்தான் இந்தக் கதை.

பசி என்ற கருப்பொருள்

பசி ஒரு முக்கியமான கருப்பொருளாக தி.ஜா.வின் கதைகளில் வருகிறது. ‘கோபுர விளக்கு’ கதையில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணொருத்தி துர்க்கையம்மனைப் பார்த்து இப்படி வேண்டிக்கொள்கிறாள்: “ஈச்வரி! இரண்டு நாளாக வயிறு காயறது. இன்னிக்காவது கண்ணைத் திறந்து பார்க்கணும். தாராள மனசுள்ளவனா… ஒருத்தனைக் கொண்டுவிட்டுத் தொலைச்சா என்னவாம்?” இது தாசியின் பசி. ‘பரதேசி வந்தான்’ கதையில் பரதேசியின் பசியை தி.ஜா. காட்டுகிறார் என்றால், ‘பஞ்சத்து ஆண்டி’ கதையில் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்த நெசவுக் குடும்பமொன்றின் பசியைக் காட்டுகிறார்.

தாசியின் காலம்

காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரியானதல்ல; ஒவ்வொருத்தருக்கும் ஒரு மாதிரியானது என்று ஐன்ஸ்டைன் கூறினார். ‘தவம்’ கதையின் நாயகியான தாசி சொர்ணாம்பாள் இதையே வேறு வார்த்தைகளில் கூறுகிறாள். மிராசுதாருடன் அவரது வேலையாள் கோவிந்த வன்னி, தாசி சொர்ணாம்பாள் வீட்டுக்குப் போகும்போது, அவளது அழகைப் பார்த்து அவனுக்குப் பித்துப்பிடித்துவிடுகிறது. அவளுடன் ஒரு நாளாவது இருக்க வேண்டும், அதற்காக நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிங்கப்பூர் சென்று 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்துச் சேர்த்த பணத்துடன் ஊர் திரும்பும் கோவிந்த வன்னி, சொர்ணாம்பாளைப் போய்ப் பார்க்கிறான். அழகிழந்து முதுமை எய்தியவளாய் காணப்படும் சொர்ணாம்பாள், கோவிந்த வன்னியிடம் தன்னைப் போன்றவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் பத்துப் பத்து வயது கூடுகிறது என்கிறாள். “நானும் மல்லுக்கு நின்னுதான் பாத்தேன், முடியலே… இந்த மாதிரி விஷயங்களிலே யாராலே சண்டை போட முடியும்? பணமா? காசா?” என்கிறாள். ‘கோபுர விளக்கு’ கதாநாயகியின் நிலை பற்றி அதில் வரும் இன்னொரு பாத்திரம் கூறுகிறது: “இனிமே ஒரே வேகமாகத்தான் போகும்…” இரண்டு கதைகளும் தாசியின் காலத்தைப் பற்றி முகத்தில் அடித்தாற்போலப் பேசுகின்றன.

அறம், தர்மம், சத்தியம், நியாயம் போன்ற சொற்களும் அவை உணர்த்தும் பொருளும் தேய்ந்துபோன காலம் இது. இதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி தி.ஜா. ஆகவே, இந்தக் கருப்பொருள்களெல்லாம் தி.ஜா.வின் கதைகளில் தூய்மையுடன் மிளிர்கின்றன. அவற்றைப் படிக்கும் நேரத்தில் மட்டுமாவது, அந்தத் தூய்மை நம்முள்ளும் கடத்தப்படுகிறது என்ற விதத்தில் நாமும் அதிர்ஷ்டசாலிகளே!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x