Published : 27 Jun 2021 03:12 AM
Last Updated : 27 Jun 2021 03:12 AM

தி.ஜா. 100: முன்னுதாரண நூற்றாண்டுக் கொண்டாட்டம்

எத்தனையோ படைப்பாளிகள், கலைஞர்களின் நூற்றாண்டுகளை அவர்களைப் பற்றிய எந்தவிதமான தன்னுணர்வும் இல்லாமல் நாம் கடந்துவந்திருக்கிறோம். ஆனால், தமிழ் இலக்கிய உலகின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமனின் நூற்றாண்டு கடந்துகொண்டிருக்கும் நேரத்தில், அவர் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய எழுத்தைக் கொண்டாடுவதன் சத்தான அங்கமே தி.ஜா.வின் தீவிர வாசகரும் எழுத்தாளருமான கல்யாணராமன் தொகுத்து ‘காலச்சுவடு’ வெளியிட்டிருக்கும் ‘ஜானகிராமம்’ என்கிற, உள்ளடக்கத்திலும் அளவிலும் கனமான தொகுப்பு நூல்.

தி.ஜா. மீது கொண்ட பிரியம் காரணமாக அவருடைய நாவல்களில் வரும் ஆண்களைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வுசெய்திருக்கும் கல்யாணராமனின் முன்னுரையே 45 பக்கங்கள் வரை ‘குன்று முட்டிய குருவி’ என்ற தலைப்பில் அடர்த்தியாய் நீள்கிறது. கதாகாலட்சேபம் செய்துவந்த தியாகராஜ சாஸ்திரிகளின் மகனான தி.ஜா.வின் படைப்பு மனத்தைப் பற்றி, விதவிதமாகத் தீராக் காதலோடு விவரிக்கிறார். பாலியல் பிறழ்வுகளை மட்டும் சித்தரித்த படைப்பாளி அல்ல தி.ஜா.; மரபைவிட உயர்வான இயல்புணர்வு கொண்டவர் அவர். குடும்ப நிறுவனத்தின் பொய்மைகளில் அடைபட மறுக்கும் சுதந்திரத்தின் நிறைவுடன், மனித மனத்தின் நிர்வாணத்தைக் காட்டும் செவ்வியல் கலைஞர். வாழ்வின் அர்த்தம் தேடுவதைப் புனைவுகளால் செய்துகொண்டிருந்த நித்தியர். இப்படியெல்லாம் அடுக்கிக்கொண்டே போகும் கல்யாணராமனுடைய அயராத வேட்கையின் அடையாளம் இந்தப் பெரும் தொகுப்பு.

102 கட்டுரைகள். இதில் படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகர்கள், பெண்ணியர்கள், தேர்ச்சியான வாசகர்கள் என்று பலரும் அடக்கம். தி.ஜா. என்கிற நுட்பமான படைப்பாளியின் நாவல், சிறுகதை, பிரயாண நூல், நாடகம், மொழிபெயர்ப்பு என்று அவருடைய எழுத்து துலங்கிய எல்லாவற்றையுமே அவரவர் கோணத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். தொகுப்பு ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீண்டாலும், தி.ஜா.வின் படைப்பு மொழியின் வசீகரம் இதிலும் இருக்கிறது. தேர்ந்த ரசனை மிளிர்கிறது. அனைத்திலும் வெளித்தெரிவது நிதானமும் மென்மையும் மொழி ஆளுமையும் பேரன்பும் கொண்ட தி.ஜா.வின் முகம்தான். நூற்றாண்டைத் தொட்டாலும் அவருடைய படைப்புலகம் இளமை கசியும் இயல்போடு இருப்பது காலத்தின் விசித்திரம்.

தி.ஜா.வின் முதல் நாவல் ‘அமிர்தம்’. தேவதாசி மரபில் வளர்ந்த பெண், தான் விரும்பும் காதலனையும் மறுத்து, உயர்கல்வி கற்கச் செல்கிறார். “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருளைக் கையாண்டிருந்தாலும், முரண்கள் அனைத்தும் வெளிப்படும்படி தி.ஜா. எழுதிப் பார்த்த முயற்சி இது” என்கிறார் பெருமாள் முருகன். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அ.அருள்மொழி, “தி.ஜா.வின் கேள்விகள் சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சார மேடைகளை நினைவூட்டுகின்றன” என்கிறார். இந்நாவலை, “சின்ன இதிகாசம்” என்று வர்ணிக்கும் அவர், 1944-ல் தேவதாசி முறைக்கு எதிரான கலகக்குரல் ஒலித்த காலத்தில், ஜானகிராமன் 23 வயதில் ‘கிராம ஊழியன்’ இதழில் இந்நாவலை எழுதியிருப்பதை எண்ணி வியக்கிறார்.

அதிகம் விவாதத்துக்கு ஆளான ‘மோக முள்’ நாவலை “நவீனக் காவியம்” என்கிறார் சு.வேணுகோபால். ‘மோக முள்’ளைத் திரைப்படமாக்கிய ஞானராஜசேகரனிடம் அருள்செல்வன் எடுத்த விரிவான நேர்காணலும் தொகுப்பில் இருக்கிறது. “சங்கீதம் இந்த நாவலில் மனிதர் அல்லாத பாத்திரத்தைப் போல இருக்கிறது” என்கிறார் மலையாளத்தில் இந்நாவலை வாசித்து விமர்சிக்கும் அனில்குமார். ‘அன்பே ஆரமுதே’ நாவலின் அனந்தசாமியைப் புத்தருடன் ஒப்பிட்டு, தன் மனதைப் புரட்டிப்போட்ட அகவய ஆன்மிக அனுபவம் என்கிறார் ஓ.ரா.ந.கிருஷ்ணன். பிரபலமான ‘அம்மா வந்தாள்’ நாவலை, “அடல்ட்ரீயில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணின் மகனது நிலையை அணுகிப் பார்க்க நமக்குத் தமிழ் இலக்கியத்தில் கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்”பாகச் சொல்கிறார் பாலசுப்ரமணியன் பொன்ராஜ்.

‘உயிர்த்தேன்’ நாவல் பற்றி அடர்ந்த சொற்களில் விமர்சித்திருக்கும் சுகுமாரன், “தி.ஜா. நாவல்களில் வரும் பெண்கள் பொதுவாகச் சாதாரணமானவர்கள் அல்லர். பெண்ணுக்கு என்று சமூகமும் மரபும் வரையறைத்து வைத்திருக்கும் எல்லைகளை மீறுபவர்கள்” என்கிறார். ‘மரப்பசு’ நாவலைத் தனக்கான பார்வையுடன் அணுகியிருக்கும் சமூகச் செயல்பாட்டாளரான ஓவியா, “அம்மணியைப் போன்றதொரு நாயகி தமிழ் இலக்கியத்தில் இல்லை. அம்மணி, உண்மையில் தர்க்கக் களஞ்சியம்” என்கிறார். ‘நளபாகம்’ நாயகன் காமேச்வரன் தன் பூணூல் அடையாளத்தையே துறந்து, கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த பாரதியை “அண்ணன்” என்கிறான். இது பற்றி ஸ்டாலின் ராஜாங்கம், “பிராமணப் பிறப்பு கொண்ட ஒருவன் மூலத்துக்குத் திரும்பாமல் பூணூலைக் கழற்றி எறிகிறான்” என்கிறார்.

தி.ஜா. மொழிபெயர்த்த ‘குள்ளன்’, ‘அன்னை’ நாவல்களைப் பற்றித் தனித்தனிக் கட்டுரைகள் உள்ளன. இத்தாலிய நாவலான ‘அன்னை’ பற்றி, “இத்தாலியச் சிந்தனையில் உதித்த வார்த்தைகளின் இடத்தில் தமிழ்ச் சொற்கள் சிம்மாசனம் இட்டு அமர்வது எத்தனை அழகு!” என்கிறார் பத்மஜா நாராயணன். தி.ஜா.வை அடையாளப்படுத்தும் பல முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள் துல்லியமாக ஆராயப்பட்டிருக்கின்றன. “1937 - 1982 வரை அப்பா எழுதிய காலத்தில் அவருடைய படைப்புகள் துணிச்சலும் தைரியமும் கொண்டவையாகவே இருந்தன. பல கருத்துகள் இன்றைய சமூகத்துக்கும் பொருத்தமாக இருக்கின்றன” என்கிறார் தி.ஜா.வின் மகள் உமாசங்கரி.

ஜப்பான் பயண அனுபவத்திலும், அங்குள்ள குழந்தைகளிடம் பேரன்பு கொண்டவராகவே தி.ஜா. இருந்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பொன்.தனசேகரன். “தி.ஜா.வை எழுத்தாளர்களின் எழுத்தாளர்” என்று சாவி சொன்னதைக் குறிப்பிடுகிறார் அமுதவன். தி.ஜா.வின் அற்புதமான உவமைகளைப் பட்டியலிடும் மாலன், “தி.ஜா.வின் படைப்புகளில் உளவியல் பேசப்பட்ட அளவுக்கு, அவரது அறச்சீற்றம் கவனம் பெறவில்லை” என்கிறார். “பேரன்பின் உயிரோவியங்கள்” என்று தி.ஜா. எழுத்தை உச்சிமுகர்கிறார்.

தான் வாழ்ந்த காலம் முழுவதும் படைப்பூக்கத்தின் எழுச்சி குறையாதபடி, வெகுஜன ஊடகங்கள், சிறுபத்திரிகைகள், நாடகங்கள், திரைப்படம் என்று இயங்கியிருக்கும் தி.ஜானகிராமன் என்ற படைப்பாளிக்கு அவருடைய நூற்றாண்டு நேரத்தில் செலுத்தப்பட்ட நிறைவான அஞ்சலியே ‘ஜானகிராமம்’. தொகுப்பைப் படித்து முடிக்கும்போது, தி.ஜா.வுக்குப் பிடித்தமான காவிரியின் ஈரத்தில், ஒரு ராக ஆலாபனையுடன், அந்தி சாயும் நேரத்தில் நடக்கும் உணர்வைப் பெற முடிகிறது. தொகுதி முழுக்கவும் தி.ஜா.வின் வெகு ரசனையான வரிகள் இழையோடுகின்றன. கால அடுக்கைத் தாண்டியும் தி.ஜானகிராமனின் எழுத்துகள் இலக்கிய வாசிப்புப் பரப்பில் இன்னும் உயிர்ப்போடு அலையடித்துக்கொண்டிருக்கின்றன!

- மணா, ‘ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: manaanatpu@gmail.com

ஜூன் 28: தி.ஜா. நூற்றாண்டு நிறைவு

----------------------

ஜானகிராமம்

தொகுப்பாசிரியர்: கல்யாணராமன்

காலச்சுவடு வெளியீடு

கே.பி.சாலை, நாகர்கோவில்-629001.

தொடர்புக்கு: 96777 78863

விலை: ரூ.1,175

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x