Published : 26 Jun 2021 05:42 AM
Last Updated : 26 Jun 2021 05:42 AM

அரசுப் பள்ளிகளின் அசலான பிரச்சினைகள்

கல்விச் சிக்கல்கள்: தீர்வை நோக்கி
சு.உமா மகேசுவரி
பன்மைவெளி வெளியீடு
கே.கே. நகர், சென்னை-78.
தொடர்புக்கு: 94439 18095,
98408 48594
விலை: ரூ.165

அரசுப் பள்ளிகளை உலகத் தரமானவையாகக் கட்டியெழுப்பும் வாதங்களும், அரசுப் பள்ளிகளை வதைமுகாம்களைவிடக் கொடுமையானவையாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் பெரும்பாலும் நுனிப்புல் மேய்பவர்களிடமிருந்தே வருகின்றன. இந்தக் குரல்கள் எழுப்பும் இரைச்சலில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் அசலான சாதனைகளும் களையப்பட வேண்டிய சோதனைகளும் மறைக்கப்பட்டுவிடுகின்றன. இந்தச் சூழலில், அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவரும் சு.உமா மகேசுவரி எழுதியுள்ள ‘கல்விச் சிக்கல்கள்: தீர்வை நோக்கி’ என்னும் நூலானது, கல்வித் துறை சார்ந்து எழுதப்பட்டவற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அவர், ‘தி இந்து’ குழுமத்திலிருந்து வெளியிடப்படும் ‘காமதேனு’ வார இதழில் எழுதிய கட்டுரைத் தொடர், வேறு சில இதழ்களில் எழுதிய தனிக் கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல்.

இருபது ஆண்டுகால ஆசிரியர் பணி அனுபவம், பாடநூல் உருவாக்கக் குழுவில் பணிபுரிந்த அனுபவம், ஆசிரியர் இயக்கங்களின் செயல்பாடுகளில் பங்கேற்பு, கல்வித் துறைச் செயல்பாடுகள் என அரசுப் பள்ளிகள் தொடர்பாகப் பல்வேறு தளங்களில் இயங்கியிருப்பவரான உமா மகேசுவரியின் இந்தக் கட்டுரைகள், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அதே வேளையில், அவற்றில் நிலவும் அசலான பிரச்சினைகளைக் கண் முன் நிறுத்துவதோடு, அவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைக்கின்றன.

பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளால் மேலிருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், உயர்வான நோக்கங்களைக் கொண்டவை ஆயினும் அவற்றில் பலவும் பள்ளிகளில் நிலவும் யதார்த்தத்துக்குப் பொருத்தமில்லாதவையாக இருப்பதை இந்நூல் கவனப்படுத்துகிறது. உதாரணமாக, புதிய பாடநூல்களில் பாடங்களைத் தாண்டிய தகவல்களை இணையத்தில் தேடித் தெரிந்துகொள்வதற்கான ‘க்யூஆர் கோட்’ (QR Code) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாததாகப் பெருமைப்பட்டுக்கொள்ளத்தக்க முன்னோடித் திட்டம் என்றாலும், பல பள்ளிகளில் இணைய வசதியே இல்லாதபோது, அதன் நோக்கம் முற்றிலும் அடிபட்டுப்போய்விடுகிறது. அதேபோல, மேம்பட்ட தரத்தில் புதிய பாடநூல்களை உருவாக்கும் முனைப்பில், அவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்களைச் சேர்த்திருப்பதும், மாணவர்களைக் குழப்பும் வகையிலான சொற்களையும் கருத்துகளையும் பயன்படுத்தியிருப்பதையும் பதிவுசெய்திருக்கிறார்.

‘குறிவைக்கப்படும் அரசுப் பள்ளிகள்’ என்னும் கட்டுரையில் தொடக்கப் பள்ளிகளில் நிலவும் பிரச்சினைகள் விரிவாக அலசப்பட்டுள்ளன. பெரும் பாலான அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் வகுப்புக்கு ஒரு ஆசிரியர்கூட இருப்பதில்லை. பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகளாக இருக்கின்றன. ஒரு ஆண்டுக்கு ஐந்து வகுப்புகளுக்கு 23 பாடப் புத்தகங்களை இரண்டே ஆசிரியர்கள் கற்பித்தாக வேண்டும். தொடக்கப் பள்ளியை நிறைவுசெய்யும் மாணவர்களில் அடிப்படை வாசிப்புத் திறனைக்கூடப் பெற முடியாதவர்களே அதிகமாக இருக்கிறார்கள் என்று கூறும் ஆய்வு முடிவுகளுக்கு ஆசிரியர்களின் திறனின்மையை மட்டும் குற்றஞ்சாட்டிவிடுவது எவ்வளவு எளிதான தப்பித்தலாக இருக்கிறது! பராமரிக்கப்படாத கழிப்பறைகள், பயன்படுத்தப்படாத நூலகங்கள் ஆகியவை குறித்துத் தனிக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கழிப்பறைகளில் போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் மாணவிகள் அவர்களுடைய மாதவிடாய் நாட்களில் விடுப்பு எடுக்க வேண்டிய அவல நிலை இன்னும் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோல, கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்துவதற்கான பணியாளர்களும் அனைத்துப் பள்ளிகளிலும் போதுமான அளவு நியமிக்கப்படுவதில்லை. கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்துவதற்கான பொருட்களும் வாங்கி வைக்கப்படுவதில்லை. சில பள்ளிகளில் ஆசிரியர்களே கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்த வேண்டியுள்ளது. இன்னும் சில பள்ளிகளில் மாணவர்களை இப்பணிகளில் ஈடுபடுத்துகிறார்கள். இது அரசுத் தரப்பின் பிரச்சினைதான் என்றாலும் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இவற்றுக்கு ஒதுக்கப்படும் பணத்தை அபகரித்துவிடுவதாகவும் நூலாசிரியர் குற்றஞ்சாட்டுகிறார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணி உள்ளிட்ட, கல்விக்குத் தொடர்பில்லாத பணிகளிலும், பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை முறையாகப் பராமரிப்பது தொடங்கி பல வகையான நிர்வாகப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதால் கற்பித்தலில் ஏற்படும் தடைகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. அதேநேரம், ஆசிரியர்களின் பிரச்சினைகளை மட்டுமே பேசும் நூல் என்று இதைச் சுருக்கிவிட முடியாது. ஆசிரியர்கள் தம்மைத் தொடர்ந்து தகுதிப்படுத்திக்கொள்ளத் தவறுவது குறித்துக் கேள்வி எழுப்புகிறது.

ஆசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்படும் சங்கங்கள், பாடத்துக்கு ஒரு சங்கமாகப் பிரிந்து சங்க உறுப்பினர்களின் அதிகாரப் போட்டிக் களமாகவும், சுயநலத் தேவைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான கருவியாகவும் பயன்படுவதைப் பதிவுசெய்கிறது. ஆசிரியர்கள் போராட்டம் என்றாலே அதிக ஊதியத்துக்கானது என்று மக்கள் மனங்களில் பதிந்துவிட்டதற்கும் ஆசிரியர்களே காரணமாகிவிட்டனர் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. சில சங்கங்கள் பிரச்சினைகள் வரும்போது தமது பொறுப்பாளர்களை மட்டும் பாதுகாத்து உறுப்பினர்களைப் பாதுகாக்கத் தவறுவதையும் விமர்சிக்கிறது. ஆசிரியர்களுக்கிடையில் நிலவும் பாலினப் பாகுபாடுகளுக்கும் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் ஆசிரியர்களின் ஆணாதிக்க மனப்போக்கால் ஆசிரியைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் என்றே தனிக் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

கொள்கை வகுப்பாளர்கள், அதிகாரிகள், பாடநூல் குழுவினர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், சங்கங்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் நிலவும் குறைபாடுகளால் அரசுப் பள்ளிகளில் விளைந்த பிரச்சினைகளைப் பட்டியலிடும் இந்த நூலின் ஆதார உணர்வு, அரசுப் பள்ளிகள் மீதான அக்கறையே. அரசுப் பள்ளிகள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்னும் உன்னத நோக்கம் முழுமையாக நிறைவேற அவற்றில் உள்ள அசலான பிரச்சினைகள் களையப்பட வேண்டும் என்று அரசுப் பள்ளிக் கட்டமைப்புக்குள் இயங்கும் ஒருவரிடமிருந்து எழுந்திருக்கும் அர்ப்பணிப்பும் அக்கறையும் மிக்க குரலாகவே இந்த நூலை அடையாளப்படுத்த முடிகிறது.

- ச.கோபாலகிருஷ்ணன்,
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x