தொடர்கதைகளுக்கு ஒரு செயலி

தொடர்கதைகளுக்கு ஒரு செயலி
Updated on
1 min read

வலுப்பெறட்டும் சிறார் இலக்கியச் சங்கம்!

தமிழில் சிறார் இலக்கியம் கிட்டத்தட்ட நூற்றாண்டுக்கு மேல் இருந்தாலும் அதற்கென முறைப்படி ஒரு சங்கம் சமீபகாலத்தில் இல்லை. சிறார் எழுத்தாளர்கள் அதிக அளவில் உருவாகி, நிறைய சிறார் படைப்புகளை உருவாக்கிவரும் இந்தக் காலகட்டத்தில், அவர்களுக்கென்று ஒரு சங்கம் அவசியமாகும். இதன் அடிப்படையில் தற்போது உருவாகியிருப்பதுதான் ‘சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்’. கடந்த ஞாயிறு அன்று இதற்கான இணையவழிக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறார் இலக்கியம் படைப்பவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் என்று ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் சங்கத்தின் தலைவராக உதயசங்கரும், பொதுச்செயலாளராக விழியனும், துணைத்தலைவராக சுகுமாரனும், துணைச்செயலாளராக சாலை செல்வமும், பொருளாளராக பிரபுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் செயல்பாடுகள் தமிழில் சிறார் இலக்கியத்துக்குப் புத்துயிர் ஊட்டட்டும்!

தொடர்கதைகளுக்கு ஒரு செயலி

தமிழ் இலக்கியத்தில் சத்தமில்லாமல் ஒரு மாறுதல் நிகழ்ந்துவருகிறது. அதுதான் ‘பிஞ்’ செயலி (Bynge). ஜனரஞ்சக எழுத்துலகின் முன்னணி எழுத்தாளர்களிலிருந்து தீவிர இலக்கியப் புனைகதையாளர்களின் படைப்புகள் வரை பிஞ் செயலியை அலங்கரிக்கின்றன. இந்தச் செயலியில் தற்போது கிட்டத்தட்ட இருபது எழுத்தாளர்கள் தொடர்கதை எழுதிவருகிறார்கள். ஒரு பக்கம் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், ஜி.ஆர்.சுரேந்தர்நாத் என்றால், இன்னொரு பக்கம் சாரு நிவேதிதா, பா.ராகவன், எஸ்.செந்தில்குமார், அராத்து, லஷ்மி சரவணகுமார் என்று கலந்துகட்டி அடிக்கிறார்கள். காஞ்சனா ஜெயதிலகர், சு.தமிழ்ச்செல்வி போன்ற பெண் எழுத்தாளர்களும் கலக்குகிறார்கள். எத்தனை பேர் தங்கள் எழுத்துகளைப் படிக்கிறார்கள், அவர்களின் விமர்சனங்கள் என்னென்ன என்பதையெல்லாம் உடனுக்குடன் எழுத்தாளர்கள் தெரிந்துகொள்வது ஒரு வசதி என்கிறார் ஜி.ஆர்.சுரேந்தர்நாத். பிஞ் செயலி வருங்காலத்தில் கிண்டில் வெளியீடுபோல் உருவாவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார் அராத்து. கலாப்ரியா, சரவணகார்த்திகேயன் போன்றோரும் விரைவில் தொடர்கதை எழுதவிருக்கிறார்கள். கல்கி, அண்ணா, சாவி போன்றோரின் படைப்புகளும் படிக்கக் கிடைக்கின்றன. இந்தச் செயலில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் படிக்கப்படும் ராஜேஷ்குமார், மாத நாவல்களில் மட்டுமல்லாமல், பிஞ் செயலியிலும் சூப்பர் ஸ்டாராகத் திகழ்கிறார்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in