Published : 19 Jun 2021 06:26 AM
Last Updated : 19 Jun 2021 06:26 AM

பிறமொழி நூலகம்: நிலையின்மையின் தத்துவார்த்தத் தேடல்

பெர்சேபோலிஸ்
மர்ஜான் சத்ரபி
வின்டேஜ் புக்ஸ்
விலை: ரூ.599

மர்ஜான் சத்ரபியின் புகழ்பெற்ற கிராபிக் நாவலான ‘பெர்சேபோலிஸ்’ வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகின்றன. அந்த நாவல் மையப்படுத்தியிருக்கும் காலகட்டமோ இன்றிலிருந்து நாற்பது ஆண்டுகள் முந்தையது. நாற்பது ஆண்டுகள் கழிந்தும் அந்நாவலில் பதிவாகியிருக்கும் நிகழ்வுகள் இன்றும் தன்மை மாறாமல் நிகழ்ந்துவருகின்றன. கருத்தியல் அதிகாரத்தின் விளைவுகள் எல்லாக் காலகட்டத்திலும் ஒரே தன்மையுடையதாகத்தான் இருக்கின்றன என்பதை அந்நாவல் உணர்த்துகிறது.

ஈரானில், 1979-ல் இஸ்லாமியப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு வரை ஆடைக் கட்டுப்பாட்டு, மதரீதியான அடக்குமுறைகள் ஆகியவை நடைமுறையில் இருக்கவில்லை. அப்போது அந்நாடு மேற்கத்தியக் கலாச்சாரத் தாக்கத்தில் இருந்தது. ஈரானின் தலைவர்களை பிரிட்டன் அரசு தன் கைப்பாவையாக வைத்திருந்து, ஈரானின் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தித் தன் நாட்டுக்கு லாபம் சேர்த்துவந்தது. தங்களுக்கு ஒத்துழைப்பு தருபவர்களையே ஈரானின் ஆட்சி அதிகாரத்தில் பிரிட்டன் இருத்தியது. பிரிட்டனின் இந்தச் சுரண்டல் போக்கு ஈரானில் சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பெரிய பிளவை ஏற்படுத்தியது. இது ஈரானின் அரசியல் தளத்திலும் கொதிநிலையை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே அப்போதைய ஈரானியப் பிரதமர் முகம்மது மாஸதேக், ஈரானின் எண்ணெய் நிறுவனங்களைத் தேசிய உடமையாக்கினார். இதனால் கோபமடைந்த பிரிட்டன், மாஸதேக்கை ஆட்சியிலிருந்து அகற்றியது. பிரிட்டனின் இத்தகைய எதேச்சாதிகாரப் போக்கு, ஈரான் வரலாற்றில் திருப்பப் புள்ளிகளில் ஒன்றான இஸ்லாமியப் புரட்சியை நோக்கித் தள்ளியது. இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானின் முகம் முற்றிலும் மாறியது. அடிப்படைவாதிகள் மதக் கோட்பாட்டை அரசியல் கருத்தியலாக மாற்றினார்கள்.

1969-ல் ஈரானில் பிறந்த மர்ஜான் சத்ரபி தன் பால்ய கால நினைவுகளின் வழியே இஸ்லாமியப் புரட்சியையொட்டி நிகழ்ந்த அதிகார மாற்றம், அதன் நீட்சியான அடக்குமுறை, இராக் உடனான போர், உயிரிழப்புகள் என அந்த நாட்டின் அழிவுக் காலகட்டத்தைக் கண் முன் நிறுத்துகிறார். இந்த சுயசரிதை நாவல் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நாவலின் முதற்பகுதி, மர்ஜானின் பள்ளிப் பருவத்தின் ஊடாக அப்போதைய ஈரானின் அரசியல் போக்கைப் பதிவுசெய்கிறது. மர்ஜான், அந்தப் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள், கார், வீடு, கருநிற அங்கி, வீதிகளில் தென்படும் கலாச்சாரக் காவலர்கள், அரசியல் போராட்டங்கள், அரசியல் கைதுகள் என முதல் பாகத்தில் ஈரானின் வரலாறு குறுக்குவெட்டுத் தோற்றங்களாகப் பதிவுகொள்கின்றன. இரண்டாம் பகுதி, அவரது ஐரோப்பிய வாழ்வைப் பதிவுசெய்கிறது; அங்கு அவர் எதிர்கொள்ளும் இருப்பு சார்ந்த தேடல்கள், புதிய கருத்தியல் அறிமுகங்கள் என நகர்கிறது.

இரண்டு பகுதிகளும் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையேயான சுதந்திரத்தன்மையைக் கோடிட்டுக் காட்டினாலும், இரண்டிலும் அவர் நிலையின்மையே எதிர்கொள்கிறார். ஈரானில் அவரது நிலையின்மையானது உயிர் பிழைத்தலுக்கானது என்றால், ஆஸ்திரியாவில் அவர் எதிர்கொள்ளும் நிலையின்மையோ அடையாளச் சிக்கல் தொடர்பானது.

போர்ச் சூழலிலிருந்து தப்பிக்கும் பொருட்டு ஆஸ்திரியா செல்பவர், இருப்பு சார்ந்த அலையுறலிலிருந்து தப்பிக்கும் பொருட்டு மீண்டும் ஈரான் வருகிறார். ஈரான் காற்றில் போரின் வாசனை கலந்திருக்கிறது. நாடே அர்த்தமின்மையில் மூழ்கியிருக்கிறது. அவ்வளவு உயிரிழப்புகளுக்கு அர்த்தம் என்ன? பெரும் வெறுமையை எதிர்கொள்கிறார். சில காலம் வீட்டில் முடங்கியிருக்கிறார். அதன் பிறகு மேற்படிப்பு, காதல், திருமணம், மண முறிவு. மீண்டும் மீள்கைக்காக ஐரோப்பா.

நிலையின்மை குறித்த தத்துவார்த்தத் தேடல் நாவல் முழுவதும் விரவியிருக்கிறது. அர்த்தமின்மையின் துயரை, அடக்குமுறையின் வலியை, உயிர்களின் மதிப்பின்மையை நாவலின் கருப்பு வெள்ளைச் சித்திரங்கள் தீவிரமாகக் கடத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x