விடுபூக்கள்

விடுபூக்கள்
Updated on
1 min read

பாவண்ணனுக்கும் மனுஷிக்கும் விருது:

அலைபேசியிலும், டிவிட்டரிலும் முகநூலிலும் மூழ்கிக் கிடக்கும் இளம் தலைமுறையை, சற்றே வாசிப்பு நோக்கி திருப்புவதே சென்னை இலக்கிய திருவிழாவின் மைய நோக்கம். தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் அறிவைச் செழுமை செய்துகொள்ள எடுக்கும் சிறு முயற்சியே இதன் செயல்பாடுகள். சென்னை இலக்கியத் திருவிழா ஆண்டுதோறும் இலக்கியத்துறையில் பங்காற்றிவரும் இரு சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருதுகள் நினைவுப் பரிசோடு முறையே தலா ஐம்பதாயிரம் இருபத்தி ஐயாயிரம் தொகைகளையும் உள்ளடக்கியவை. 2015-க்கான இந்த ஆண்டின் மூத்த எழுத்தாளர் விருது பாவண்ணனுக்கும் இளம் எழுத்தாளர் விருது கவிஞர் மனுஷிக்கும் வழங்கப்பட உள்ளதாக இலக்கியத் திருவிழாவின் தலைவர் லதா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். இதன் நடுவர் குழு உறுப்பினர்களாக ரவிசுப்பிரமணியனும் தமிழச்சி தங்கபாண்டியனும் செயல்பட்டுவருகின்றனர்.

கவிஞர் கௌரிஷங்கர் மறைந்தார்

கோவில்பட்டியின் எழுத்து அடையா ளங்களில் ஒருவரான கௌரிஷங்கர் சென்ற சனிக்கிழமை இரவு (19.12.2015) மாரடைப்பால் காலமானார். 1980களில் இவர் வெளியிட்ட ‘மழை வரும் வரை’ கவிதைத் தொகுப்பு, கறுப்பு-வெள்ளை ஒளிப்படங்களுடன் சேர்த்து அழகிய முறையில் பதிப்பிக்கப்பட்ட ஒரு நூலாகும். இவர் எழுதிய ‘முன்னூறு யானைகள்’ சிறுகதைத் தொகுப்பு அக்காலகட்டத்தில் வாசகர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நூலாகும். தற்போது ‘பின் செல்லும் குதிரை’ என்ற பெயரில் வம்சி வெளியீடாக இவரது சிறுகதைப் புத்தகம் மட்டுமே கிடைக்கிறது. தமிழிசையில் ஈடுபாடு கொண்ட கௌரிஷங்கர், காருக்குறிச்சி அருணாசலம் குறித்த ஓர் ஆவணப்படத்தையும் இயக்கியவர். திரைத்துறையிலும் ஈடுபாடு கொண்டவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in